தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நீ... நான்... நிஜம்! -4: ஆபத்திலேயே இரு

எப்போதும் சில்லென்று குளிர்ந்து கிடக்கும் பிரதேசம் திபெத். பனிமலைகள் பனிக்கட்டிகள் என்று காற்றையும் நீரையும் கூட கைது செய்து, குளிரோடு விளையாடு...

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 6:55 pm

எப்போதும் சில்லென்று குளிர்ந்து கிடக்கும் பிரதேசம் திபெத். பனிமலைகள் பனிக்கட்டிகள் என்று காற்றையும் நீரையும் கூட கைது செய்து, குளிரோடு விளையாடு... குளிரோடு நடைபோடு என்று ஈரம் தாலாட்டும் இயற்கை மண் திபெத். அங்கு பனிக்காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை அப்படியே குளிர்ந்த நீரில் பத்துமுறை நனைத்துக் குளிப்பாட்டுவார்கள் என்று படித்தபோது எனக்குக் கையும் காலும் விறைத்துப் போய் விட்டன. கொஞ்சம் இரக்கம் காட்டி நீரைச் சூடுபடுத்தி குளிப்பாட்டக் கூடாதா என்று மனம் கெஞ்சியது. ஆனால் திபெத்தியர்களின் பதில் அறிவுப்பூர்வமானது. எப்போதும் பனிநிறைந்த பகுதியில் வாழவேண்டிய குழந்தை குளிரை எதிர்த்து நிற்க பிறவி முதல் பழக வேண்டும். குளிரைத் தாக்குப் பிடிக்கமுடியாத குழந்தைகள் அங்கு நிரந்தர நோயாளிகளாகத் துன்புறும், பெற்றவரையும் துன்புறுத்தும். பச்சிளம் குழந்தைகளைப் பச்சைத் தண்ணீரில் குளிப்பாட்டும் போது பத்துக்கு ஒன்றிரண்டு செத்துப் போவதும் உண்டு.
""போகட்டும், குளிரைத் தாங்க முடியாத உயிரை வாழ்நாளெல்லாம் வதைக்க வேண்டாமே! கடினமான வாழ்வியலுக்கு லாயக்கற்ற சிசுவைக் காப்பாற்றி எல்லோரும் எதற்குக் கஷ்டப்பட வேண்டும்?'' என்பது திபெத்தியர் பார்வை. பிள்ளைகளை ஆபத்துக்குள் பிரவேசிக்கப் பெருவாரியான பெற்றோர் அனுமதிப்பதில்லை. ""பார்த்து.. பார்த்து.. ஜாக்கிரதை, மழையில் நனையாதே, வெயிலுக்குக் குடைபிடிச்சிக்க...'' என்று அளவுக்கு மீறிய பாதுகாப்பு உணர்ச்சி போர்த்தி கவனமாக வளர்க்கிறேன் பேர்வழி என்று பிள்ளைகளைக் கோழைகளாகக் குறுக்கி விடுகிறார்கள்.
சிலருக்கு மட்டும் துணிவு சொந்த சம்பாத்தியம். பிதுரார்ஜித சொத்தாக வராது. அதனால் பாதுகாப்புணர்ச்சியுடன் வளர்க்கப்பட்டவர்களை, துணிச்சல் உடைய சொந்த வீரர்கள் தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள். அடிக்கடி வென்று விடுகிறார்கள். துணிவு, சில சமயங்களில் விபத்து, மரணம், நிரந்தர ஊனம், போன்றவற்றைப் பரிசளிப்பதும் உண்டு. ஆனாலும் மனித குலம் முன்னேறியதன் ஒரே காரணம் சிலரது துணிச்சல் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆழ்கடல் ஊடே பயணிக்கும் கப்பல்கள், ஆதரவுக் கரமின்றி ஆகாயத்தில் சீறிப்பாயும் விமானங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சிகள் ஆபத்துக்கு அஞ்சாதவர்களின் பரிசளிப்புகள். மாவீரர்கள் மனிதகுலத்திற்களித்த மகத்தான கொடைகள். எனவே, ஆபத்தில் வாழ்வதற்கான துணிவை இளைய தலைமுறை பெறுவது அவசியம்.
உலகிலேயே பாதுகாப்பான செளகர்யமான இடம் எது தெரியுமோ? தாயின் கருவறை. அடடா... என்ன என்ன வசதிகள்.. தடையில்லா உணவு... எந்தப் பொறுப்பும் கிடையாது... சிரமமும் இல்லை... ஜம்மென்று ஒரு திரவ மிதப்பில் குஷியுடன் நீந்திக் குளிக்கலாம். இர்ம்ச்ர்ழ்ற் ழர்ய்ங் என்று பார்த்தால் 
உயிர்க்குலததின் அதிபாதுகாப்புப் பிரதேசம் அம்மாவின் கருப்பைதான். அதற்காக வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்து விட முடியுமா? பிரசவமே முதல் ஆபத்துதானே? குழந்தைக்குக் கொடி சுற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. கரு வாயில் மூச்சுத் திணறலாம்... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆபத்தில் தான் ஜனனமே ஜனனமாகிறது. சிங்கப்பூர், சுவிஸ் போன்ற நாடுகளில் 15 வயது இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி தரப்படுகிறது. அந்தப் பிள்ளைகளின் துணிச்சலான வாழ்க்கைப் பாய்ச்சலுக்கு அது ஒரு முக்கிய காரணம்.
ஆனால் அங்கு வாழும் நம் இந்தியப் பெற்றோர்கள் அந்த வயதுப் பிள்ளைகளை இந்தியா அனுப்பி இராணுவப் பயிற்சிக்கு டிமிக்கி கொடுக்க விரும்புகிறார்கள். உயிரோடு இருப்பதைவிட உயிர்ப்போடு இருப்பது முக்கியம் என்கிற சித்தாந்தம் பலருக்கும் புரிவதே இல்லை. கவனம், பொறுப்பு, பாதுகாப்பு எனபவற்றை நான் மதிக்கிறேன். ஆனால் அசாத்திய உயரம் செல்ல, உச்சம் தொட ஆபத்துக்களை நேசிக்கும் வீரம் அவசியம் என்கிறேன். நம் பிள்ளைகள் ஆயிரத்தில் ஒருவனாக உயர நான் விரும்புகிறேன். பலரோ ஆயிரத்தில் 999ஆக இருந்தால் போதுமானது என்கிறார்கள். 
ஜெர்மானிய தத்துவவாதியான நீட்சேயிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ""ஒவ்வொருவரும் தனக்கான குணாதிசயத்தை எப்படி வளர்க்க முடியும்?'' - இதுவே கேள்வி. ""ஆபத்திலேயே வாழ்... அப்போதுதான் உனக்கான ஒரு தனிப்பட்ட குணநலனைப் பெருக்கிக் கொள்ள முடியும்'' என்றார் நீட்சே. ஆனால் பாதுகாப்பைத்தான் மக்கள் சமூகம் விழைகிறது. நத்தைகளின் சமூகம் இது. சிங்கங்களாக வாழ எவருக்கும் துணிவில்லை. வங்கியில் பணம், மருத்துவ இன்சூரன்ஸ், ஸ்திரமான அரசு, தியாகிகள் உள்ள ராணுவம், மக்களுக்கு இலவசங்களை அள்ளிவிடும் அரசு இப்படியான பாதுகாப்பான... படுபாதுகாப்பான வாழ்க்கைக்கே எல்லாரும் ஏங்குகிறார்கள். வீரபுருஷர்களைப் பெற்றுத் தர முடியாத பாரத மாதா அடிக்கடி தன் அடி வயிறு தடவிப் பார்த்துக் கொள்ளுகிறாள். வாழ்வில் நாம் தோற்று விடுவோமோ என்கிற கவலையுடனும் அச்சத்துடனும் பலரும் பயந்து பயந்து வாழ்கிறார்கள். ஆபத்துகள் வரட்டுமே... அதனால் என்ன? என்று நெஞ்சு நிமிர்த்தும் இளைஞனே இன்றைய அவசர அவசியம்.
இருளில் போக... இருளான அறைக்குள் போய் விளக்கின் சுவிட்சைப் போட குழந்தைகள் பயப்படுகிறார்கள். இருளில் செல்ல குழந்தைகளைப் பெற்றோர் பழக்க வேண்டும். பயத்தை உருவாக்கும் போதனைகளைப் பெற்றோர் நிறுத்த வேண்டும். ஓஷோ 
சொல்கிறார்... ""பயமுடையவனுடைய நாபிசக்கரா (மணிபூரகம்) வலுவிழந்து போகிறது. ஆற்றலற்றதாகிறது. எனவே நாபிசக்கரத்தை நன்கு வலுவடையச் செய்யுங்கள்''. அச்சம் அடைகிறவர்கள் அதிலிருந்து வெளிவர நாபியில் கவனத்தைக் குவித்து நாபிவரை சுவாசம் ஓடும் வகையில் மூச்சுப் பயிற்சி செய்வது அவசியம், தனுராசனமும் இதற்கு உதவும்.
அளவுக்கு மீறிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கோமாளித்தனமான வாழ்வு என்பது பலருக்கும் புரிவதில்லை. ஓர் அரசன் பாதுகாப்பான மாளிகை ஒன்று கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். ஜன்னல்களைத் தவிர்த்து விட்டார். அரண்மனைக்கு நான்கு திசை வாசல் அவசியம் என்பதையும் புறக்கணித்து ஒரேவாசல் வைத்து படுபாதுகாப்பாகக் கட்டி இருந்தார். எந்த எதிரியும் உள்ளே நுழைய முடியாது என்று பெருமை கொண்டார். எதிரி என்ன எதிரே... அவரே உள்ளே நுழைய முடியாத அசிங்கம் அது என்று அவர் அறியவில்லை. அதைப் பார்க்க வந்த அடுத்தநாட்டு அரசர் அதன் பாதுகாப்பைக் கண்டு வியந்து ""ஆஹா இதே போல் ஒரே வாசலோடு நானொரு அரண்மனை கட்டுவேன்'' என்றார். அவர் பாட்டன் அவர் தோளைத் தட்டி ""முட்டாளே, அந்த வாசலும் வேண்டாம்.. அதையும் கற்களால் மூடிவிடு... அதிகப் பாதுகாப்பாக இருக்கும்'' என்று கேலி செய்தான். ""அது சமாதியல்லவா..? கல்லறை அல்லவா..?'' என்றான் அரசன். கிழவன் கேலியாகச் சிரித்தபடி, ""ஆமாம்.. உலகிலேயே அதிகம் பாதுகாப்பான இடம் கல்லறைகள்தாம். பிணங்கள்தாம் பாதுகாப்பாக உள்ளன. ஆபத்துக்களைச் சந்தித்து வாழ்வதை மறுதலிப்பவன் பிணம்தானே'' என்றான். வாழ்க்கை ஜனங்களைத் தயாரிப்பதற்குப் பதில் பிணங்களை அல்லவா தயாரிக்கிறது?
இந்திய வரலாறறில் இருந்து ஒரு நிகழ்வு சொல்கிறேன். ஆக்ரா அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்தபடி சக்கரவர்த்தி யானைச் சண்டையை இரசிக்கத் தொடங்கிய வேளை, அவரது நான்கு மைந்தர்களும் கீழே குதிரைமீதமர்ந்தபடி வேடிக்கை பார்த்தனர். பதவிகளுக்கேற்ற உயரம் போலும். சுதாகர், சூரத்சுந்தர் என்ற யானைகள் மோதத் தொடங்கின. ஒரு யானை திசைமாறி குதிரை மேல் இருந்த இளவரசர்களை வெறித்துப் பார்த்தது. மூன்று இளவரசர்கள் அம்பேல். கடைசி இளவரசன் ஓட எத்தனித்த குதிரையை இழுத்து நிறுத்தினான். ஈட்டியைக் குறிபார்த்து யானை மீது வீசினான். யானை குதிரையைத் தாக்க அது தொலைவில் போய் விழுந்தது. கீழே விழுந்த இளவரசன் மீண்டும் ஈட்டியை எடுத்து யானையின் நெற்றியைக் குறிபார்த்து வீச என்ன ஆகுமோ என்று மக்களும் மாமன்னரும் கலங்கிவிட்டனர். ஆனால் யானை வீரர்களால் அடக்கப்பட்டது.
உப்பரிகையில் இருந்து ஓடிவந்த சக்கரவர்த்தி மகனைத் தழுவி கண்ணீர் விட்டபடி "பகதூர்' (துணிவானவன்) என்று பட்டமளித்து அவனது எடைக்கு எடை தங்கம் அளித்தார். என்றாலும் ""ஏதாவது பிசகாகி இருந்தால் அவமானமாகி இருக்கும்'' என்று மகனைக் கண்டித்தார். மகனோ ""யானையை எதிர்த்துச் சண்டையிட்டுச் சாவதில் அரச குமாரனுக்கு என்ன அவமானம் வரும் தந்தையே? அஞ்சியோடிய என் சகோதரர்கள் அல்லவா நம் பரம்பரைக்கு அவமானம் சேர்த்தனர்?'' என்று உறுதிபடச் சொன்னான். தகப்பன் ஷாஜகான், மகன் அவுரங்கசீப். ஆபத்தை வரவேற்கிறவனே தலைவனாகிறான்.
காமராஜர் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவம். விருதுநகரில் மாரியாத்தா என்கிற கோயில் யானை அடங்காமல் கலக்கிய போது பாகனே பயந்து நின்றாராம். காமராஜரோ பாய்ந்து போய் யானை அச்சப்படும் சத்திய சங்கிலியை எடுத்து அதன் முன்னாலே போட்டு யானையை அடங்கிப் போகச் செய்தார் என்று படித்திருக்கிறேன்.
ஒரு வெளிநாட்டுப் பெண்மணியுடன் சுவாமி விவேகானந்தர் போய்க் கொண்டிருந்த போது வெறித்தபடி ஒரு காளை பெண்மணியை நோக்கி ஓடியது. குறுக்கே போய் நின்றார் விவேகானந்தர். என்ன ஆச்சரியம்... காளை பின்வாங்கியது. ஜெயித்தவர் பயப்படுவதில்லை. பயப்படுபவர் ஜெயிப்பதில்லை. ஆபத்தில் இரு... உச்சம் நிச்சயம். 
(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.