போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திட்டமிடுங்கள்... நம்பிக்கையுடன்!

நாம் ஆசைப்படுவது அல்லது விரும்புவது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை நம்மால் எட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் பிறந்து விட்டால், இலக்கை அடைவதற்கான திட்டங்களும்,செயல்களும்

News image
Updated On :31 ஜூலை 2018, 4:30 am

வி.குமாரமுருகன்


நாம் ஆசைப்படுவது அல்லது விரும்புவது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை நம்மால் எட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் பிறந்து விட்டால், இலக்கை அடைவதற்கான திட்டங்களும்,செயல்களும் தாமாகவே நமது மனக்கண்ணில் விரியும். "ஐயோ... இது நம்மால் முடியாது' என்று நம்பிக்கையை இழந்து யோசித்து விட்டால் போதும்,  அதற்கு எதிரான விஷயங்கள் வரிசை கட்டி நமது கண்களில்  படமாக  மிக வேகமாக ஓடும். 
அப்படி எனில் எந்தவொரு விஷயத்துக்கும் தூண்டுகோலாக அமைவது தன்னம்பிக்கைதான் என்பதை ஒவ்வோர் இளைஞனும் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இரண்டு இளைஞர்கள் ஒரு பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து செல்கின்றனர்.  பஸ் நிறுத்தம் சிறிது தூரத்தில்தான் இருக்கிறது.  அதற்குள் ஒரு பஸ் வந்துவிடுகிறது.  
அவர்களில் ஓர் இளைஞன் தங்களைக் கடந்து நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் பஸ்ûஸ எப்படியும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓடுகிறான். இன்னொரு இளைஞனோ நம்பிக்கையில்லாமல் மெதுவாக நடந்து செல்கிறான்.  நம்பிக்கையுடன் ஓடிய இளைஞன் பஸ்ஸில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைந்துவிட்டான். நம்பிக்கையில்லாமல் நடந்த இளைஞன் அடுத்த பஸ் வரும்வரை அரைமணி நேரம் காத்திருந்து அதில் ஏறி செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தாமதமாகச் சென்று பல புதிய பிரச்னைகளைச் சந்திக்கிறான்.  
இதில், நம்பிக்கை வைத்த இளைஞன் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிந்தது. இது போல்தான் அனைத்தும், சிறிய விஷயமோ பெரிய விஷயமோ முதலில் நம்பிக்கையுடன்  செயலாற்றினால் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய அது துணையாக இருக்கும்.   இல்லை என்றால் உள்ளதையும் இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிடும். 
நம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் நம்மில் ஆர்வத்தையும், துணிச்சலையும் உருவாக்கி வெற்றியை அடைய வைக்கிறது. நம்மால் நிச்சயம் நீச்சல் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் குளத்தில் குதிப்பவன்தான் அச்சமில்லாமல் நீச்சலைக் கற்க முடியும்.  நம்பிக்கை இல்லாதவன் கடைசி வரை பயந்து கொண்டே கரையிலேயே  நிற்க வேண்டியதுதான். 
மார்க்கெட்டிங் நிறுவனத்தின் சேல்ஸ்ஆபிஸர் தேர்வில் உங்களால் இந்த அளவிற்கு விற்பனையை உயர்த்த முடியுமா? என்ற கேள்விக்கு தன்னம்பிக்கையுடன் "முடியும்' என்ற பதில் கூறுபவர்களுக்கு மட்டுமே அந்த வேலை வழங்கப்படுகிறது. தன்னம்பிக்கை இன்றி அது எப்படி முடியும் என லேசாக சந்தேக கேள்வி எழுப்புவர்களுக்கு வேலை வாய்ப்பே பறி போய் விடுகிறது.  
இன்றைய கால வேகத்தில் பெரும்பாலான மனிதர்கள் நம்மால் அது முடியாதே என்று நினைத்து வேதனைப்படுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான். 
முதலிலேயே எந்த விஷயத்தைப் பற்றியும் நம்பிக்கையில்லாமல் எதிர்மறையாகச் சிந்திப்பது சிலருடைய பழக்கமாகிவிட்டது.  அது தவறு. அதே போல இந்த விஷயம் நிச்சயம் நடக்கும் என்று முழுவதுமாக நம்பிச் செயல்படுவதும் தவறு.  உதாரணமாக,    இந்த நேரத்தில் பஸ் பிடித்து, இந்த நேரத்தில் ட்ரெயின் பிடித்து, இந்த ஊருக்கு இத்தனை மணி நேரத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்று நினைப்பது நம்பிக்கை.   அப்படியெல்லாம் சென்றுவிட முடியாது என்று முதலிலேயே எதிர்மறையாகச் சிந்திப்பது  நம்பிக்கையின்மை. பஸ், ட்ரெயின் எல்லாம்  தாமதமில்லாமல் வந்து, வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் இருந்து, உரிய வேகத்தில் சென்றால்  நமது நம்பிக்கை உண்மையாகிவிடும்.  இதில் ஏதேனும் ஒன்று தடைபட்டால் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியாது.  நாம் எவ்வளவுதான் நம்பினாலும், புறச்சூழ்நிலைகள் பொருத்தமாக இல்லாவிட்டால் இலக்கை எட்ட முடியாது.  அப்படியானால் என்ன செய்வது? சென்றுவிட முடியும் என்று நம்பும்போதே, ஒருவேளை பஸ் உரிய நேரத்தில் வராமல் தாமதமாக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கையும்  சிறிது இருக்க வேண்டும்.  இவ்வளவு நேரம் பஸ்ஸூக்காகக் காத்திருப்போம். ஒருவேளை வரவில்லை என்றால் ஆட்டோ பிடித்து, கால் டாக்ஸி பிடித்துச் செல்வோம் என்று திட்டமிடத் தோன்றும்.  எதிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவநம்பிக்கையாகாது.  எனவே கண்மூடித்தனமாக எதையும் நம்ப வேண்டியதும் இல்லை. நம்பாமல் இருக்க வேண்டியதும் இல்லை. 
வெளியில் உள்ள சூழ்நிலைக்கேற்ப மனதில் உற்சாகம் இழக்காமல் திட்டமிட்டு முயற்சி செய்வதே நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய ஒரே வழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.