உலகத்திலேயே அதிகக் கசப்பான விஷயம் எது அ. வேப்பங்காய் ஆ.விளக்கெண்ணெய் இ. ஆலகாலவிஷம் இப்படி ஒரு கேள்வியைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கேட்டால், என்ன பதில் வரும் தெரியுமா? மூன்றையும் விடக் கொடுமையான கசப்பு "அறிவுரை' என்பார்கள். நம்முடைய இளைஞர்கள் எந்தக் கொடுமையை வேண்டுமானாலும் தாங்குவார்கள். ஆனால் அறிவுரை சொல்கிறேன் என்றால் அவ்வளவு தான் துடிதுடித்துப் போவார்கள்.
அதிகம் சிகரெட் பிடிக்கும் இளைஞரைப் பார்த்து ஒரு பெரியவர் வருத்தப்பட்டார். ""தம்பி... ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள்?'' என்றார். ""50-க்கு மேல்'' என்று பதில் வந்தது. அப்படியானால் மாதம் 30ல50=1500 ஆ?'' என்றார் பெரியவர். ""கொஞ்சம் கூடக்குறைய'
அலட்சியமாகப் பதில் வந்தது.
""எத்தனை வருடமாகப் பிடிக்கிறீர்கள்?'' பெரியவர் கேட்டார். ""ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும்'' - இளைஞர் பதில். ""ஒரு சிகரெட் விலை எவ்வளவோ?'' -இது கேள்வி.
""ஆரம்பத்தில் எட்டு ரூபாய்... இப்ப பன்னிரண்டு ரூபாய்''அலட்சியமான பதில் வந்தது. மலைத்துப் போன பெரியவர், ""தம்பி.. நாலு லட்சத்துக்குக் குறையாம புகையாக்கிட்டயேப்பா'' என்று அங்கலாய்த்தார். இளைஞரோ அலட்சியமாக, ""பெரியவரே நீங்க சிகரெட் பிடிக்கறது உண்டா?'' "" இல்லை'' என்றார். ""இப்ப வயசு என்ன?'' கேள்வி. ""எழுபது ஆச்சு தம்பி'' என்றார் பெரியவர். ""அப்ப இப்ப கையில 2 கோடி 3 கோடி மிச்சம் இருக்கணுமே.. இருக்கா?'' என்றபடி இளைஞர் எகத்தாளமாகச் சிரித்தார். நாணத்துடன் பெரியவர் ""இல்ல.. தம்பி.. இப்ப கூட கடன் வாங்கத்தான் வெளியூர் போறேன்'' என்றார். ""சிகரெட் குடிச்ச எங்கிட்டியும் பணம் இல்ல.. சிகரெட் குடிக்காத உங்கிட்டியும் பணம் இல்ல.. அப்புறம் என்ன பேச்சு'' என்று முடித்துக் கொண்டார் இளைஞர்.
அறிவுரை சொல்பவர் நிலை இன்று இதுதான். ஆனாலும் கையைக் காலைப் பிடித்தாவது நல்லது சொல்ல வேண்டி இருக்கிறதே... என்ன செய்ய? பாசம் பெரியவர்களை அந்தப் பாடு படுத்துகிறதே! விதுரன் சொல்லி துரியோதனன் கேட்கவில்லை. பீஷ்மர் சொல்லி சிகபாலன் கேட்கவில்லை. என்றாலும் சொல்லுபவர்கள் சும்மாவா இருக்கமுடியும்? எத்தனையோ திறமைகள் உள்ள இளைய தலைமுறை ஒரு சில பண்புநலன்களும் பெற்று விட்டால் எவ்வளவோ உயரம் செல்ல முடியுமே என்று மனசு தடுமாறுகிறது. இன்று திறமை உள்ள பல இளைஞர்கள் தனக்கான வாய்ப்பு வரும் வரை, காலம் கண்திறக்கும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்றால் கொதித்தே போய் விடுகிறார்கள். கொந்தளித்துப் போகிறார்கள்.
திரைத்துறையில் அ.த. ரஹ்மான், அனிரூத், தனுஷ், விஜய் போன்றவர்கள் இளமையிலேயே புகழ்பெற்ற ஒரே காரணத்தால் எல்லாத் துறைகளிலும் இப்படியே கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் உச்சாணிக் கிளையேற இளமை துடிக்கிறது. ஆனால் இவர்களுக்குப் பலரது வாழ்க்கை வரலாறுகள் தெரிவதில்லை. முந்தைய தலைமுறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ந.ந. வாசன் போன்ற சினிமா ஆளுமைகள் வளர, உயர, பட்ட கஷ்டங்கள் இவர்களுக்குத் தெரியாது. அது அவசியமில்லை என்கிறார்கள். நானோ அது கட்டாயம் என்கிறேன். ஆந்திராவின் வெளிச்சமாகப் பின்னாளில் மின்னிய ச.ப ராமா ராவ் பசி காரணமாக தமது காலைச் சிற்றுண்டியில் கூட இரண்டு இட்டிலி சேர்த்துத் தரும்படி நாகி ரெட்டியிடம் பவ்யமாகக் கேட்டார் என்று பதிவு இருக்கிறது. பதறிப்போன நாகி ரெட்டி, "" ச.ப.த கேட்பதைக் கொடுங்கள்'' என்று ஸ்டுடியோ சமையல் காரருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மணவை பொன் மாணிக்கம் என்கிற என் இனிய நண்பர் "மறக்க முடியாத மாமனிதர்' என்று எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் போகிற போக்கில் இளமையில் எம்.ஜி.ஆர் அணுபவித்த துயரங்களையும் பின்னர் அவர் பெற்ற இமாலய வெற்றிகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு தகவல்... அப்படியே தருகிறேன்.
"எம்.கே. தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டராகத் திகழ்ந்த நேரமது. கோவை ராயல் இந்து ரெஸ்டாரண்ட் ஹோட்டலில் தியாகராஜ பாகவதர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருந்த நான்கு நாட்களும்-தியாகராஜ பாகவதரைப் பார்க்க ஆண்களும், பெண்களுமாய் ஹோட்டலைச் சுற்றிக் கட்டுக்கடங்காத கூட்டம். காவல்துறை கண்ணீர்ப் புகை வீசியெல்லாம் ஜனங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை.
அந்தக்கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் பட்டினியாகத் கிடந்து, பாகவதரை மூன்று நாட்களாகப் பார்க்க முடியாமல் தவித்த போது, ராயல் இந்து ரெஸ்டாரண்ட் முதலாளி குருசாமி நாடார் மக்கள் திலகத்தைச் சாப்பிட வைத்து, தியாகராஜ பாகவதரைப் பார்க்க வைத்தது எல்லாம் ஒரு பெரிய கதை.
அதே கோவையில் எம்.ஜி.ஆர். கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் தினக்கூலியாக எட்டணா சம்பாதித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் தன் குடும்பத்திற்கு அரைப்படி அரிசி கொடுத்து உதவிய சாண்டோ எம். எம்.சின்னப்பத் தேவரைப் பட முதலாளியாக்கித் தம் நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்ட அவர், தான் தமிழக முதல்வரான பிறகு, தேவர் வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகக் கோவைக்கு வருகிறார்.
அலங்கார் ஓட்டலில் தங்கி இருக்கிறார் மக்கள் திலகம். ஹோட்டலைச் சுற்றி மக்கள் வெள்ளம், எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். திருமணம் நடக்கவிருக்கும் ஸ்டேன்ஸ் மில் திருமண மண்டபத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, எல்லோரும் இங்கிருந்து கலைந்து சென்று அங்கு போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று கட்டளை பிறப்பித்துக் கூட்டத்தைக் கலைக்கின்றனர் காவல்துறையினர்.
திருமண மண்டபத்தில் காத்துக் கிடந்த மக்கள் அலங்கார் ஓட்டலில் தான் மக்கள் திலகம் இருக்கிறார் என்ற செய்தி அறிந்து, எல்லோரும் மண்டபத்தில் இருந்து ஹோட்டலுக்குச் செல்கின்றனர்.
இப்படி ஹோட்டலுக்கும் திருமண மண்டபத்திற்குமாக மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ""இதே மாதிரிதாம்பா இருபது வருஷத்துக்கு முன்னாடி தியாகராஜபாகவதரைப் பார்க்க ஜனங்க ராயல் ஹோட்டலைச் சுத்தி நின்னாங்க!'' என்று சொன்னார்.
இன்னொருவர், ""பாகவதரைப் பார்க்கக் கட்டுக்கடங்காத கூட்டம் காத்துக் கிடந்தது வாஸ்தவம் தான். ஆனா பாகவதருக்கு வந்த கூட்டத்தை விட, நூறு மடங்கு கூட்டம் எம்.ஜி.ஆருக்கு இன்னிக்கு வந்திருக்கு!'' என்று புள்ளிவிவரம் சொல்லிக் கொண்டிருந்தார். வெற்றிக்கான எம்.ஜி.ஆர் அவர்களின் காத்திருப்பு கவனிக்கத்தக்கது.
சரியாகச் சொல்வதனால் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் வெளிச்சத்தை எட்டிப் பார்க்கும் போது அவர் தமது நாற்பதுகளின் தலைவாசலில் இருந்தார். அதுவரை விடாத முயற்சி... சலிக்காத போராட்டம் தான். அந்தக் காலம் வேறு... இந்தக் காலம் வேறு. அப்போது ஒரு வருடப் பயிர்... ஆறுமாதப் பயிர்... இப்போது தொண்ணூறு நாள்... அப்போது டைஃபாய்டு கூட நாற்பது நாள் அவஸ்தை... இப்போதோ நாலே நாள் சங்கடம். காட்ராக்ட் செய்து கறுப்புத் துணி கட்டிய கண்கள் அன்று மாசக்கணக்கில்... இப்போது நிமிடக் கணக்கில்.. எல்லாம் புரிகிறது. என்றாலும் இளைய தலைமுறைக்கு எதிலும் அவசரம்... எங்கும் அவசரம்... பொறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது எப்படி நியாயம்?
பம்பாய் சண்முகானந்தா ஹாலில் ஹிந்தி திரை இசை மேதை நெளஷத் அலிக்கு ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. "மிக உயர்ந்த திரை விருதுகள் பல குவித்த இசை உலக மாமேதை சாதனையாளர் லதாமங்கேஷ்கர், முகமது ரஃபி போன்ற ஹிந்தி இசை வல்லுநர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்' என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். ஏற்புரை நிகழ்த்திய நெளஷத் அலி பேசிய பேச்சு ஓர் அமர இலக்கியம். ""நான் என்ன சாதித்து விட்டேன் என்று நினைக்கிறீர்கள்? ஒரு தெருவைக் குறுக்காகக் கடந்து வந்திருக்கிறேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இதே ஷண்முகானந்தா ஹாலுக்கு எதிரே பிளாட்பாரத்தில் ஹார்மோனியத்துடன் பாடிக் கொண்டிருத்தேன். இந்தத் தெருவைக் கடந்து இந்த ஹாலுக்குள் வருவதற்கு இருபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்ட என்னைச் சாதனையாளன் என்று புகழ்வதா?'' என்ற பொருள்பட அடக்கத்துடன் உரையாற்றினார். அங்கீகாரத்துக்கு அவசரப்படுகிறவர்கள் இதனை உணர வேண்டும்.
அங்கீகாரம் என்று பிரபல்யம், பெரும் புகழ், இவற்றை மட்டும் நான் குறிப்பிடவில்லை. நம்மை நண்பராக, உறவாக, மனிதராக ஏற்பது பற்றியும் சொல்கிறேன். காதலை எடுத்துக் கொள்ளுங்கள்... தங்கள் காதலை ஒரு பெண் ஏற்க மறுத்தால் கொதித்துப் போகிற ஆண்கள் எத்தனை பேர்? கொலை செய்யத் துணிகிறவர் எத்தனை பேர்? பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர்கள், பிளேடால் கீறியவர்கள், அழகுமுகத்தில் அமிலம் வீசியவர் எத்தனைபேர்? இவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நம்மை ஏற்கவோ மறுக்கவோ பிறருக்கு உரிமை உண்டு என்பது புரிய வேண்டும். பிறரது சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும். நிராகரித்தால் நம்மை அவமதித்ததாகவோ அசிங்கப் படுத்தியதாகவே அர்த்தம் இல்லை. "நல்லதோர் வீணை' என்ற புத்தகத்தில் வரலொட்டி ரங்கசாமி எழுதிய இரண்டுவரிகள் இதற்கான அழகான விளக்கம் தருகின்றன. ஒரு பெண்ணின் காதலை ஒரு வாலிபன் நிராகரிக்கிறான். அவள் கண்ணீருடன் எனக்கு அழகில்லையா? அறிவில்லையா? ஏன் பணம் இல்லையா? ஏன் என் காதலை ஏத்துக்க மறுக்கறே? என்கிறாள். ஆசிரியர் எழுதுகிறார். அவளுடைய கேள்விக்கு இன்றுவரை என்னிடம் பதில் இல்லை. ஏன் காதல் வந்தது என்ற கேள்விக்கு எப்படி பதில் இல்லையோ அப்படி ஏன் காதல் வரவில்லை என்ற கேள்விக்கும் பதில் சொல்லிவிட முடியாது! அபாரமான வரிகள்
அங்கீகாரம் என்பது நம்கையில் இல்லை. திரை இசை மேதை
M.S. விஸ்வநாதன் இசை அமைத்த பாலும் பழமும் படத்தை ஹிந்தியில் எடுத்தபோது நான் முன்னர் குறிப்பிட்ட நௌஷத் அலி தான் இசை அமைப்பாளர். அவர் ங.ந.ய.யினுடைய இசையில் "நான் பேச நினைப் பதெல்லாம்' என்ற பாடலைக் கேட்ட பிறகு, "" இதை மாற்றி இதைவிடச் சிறப்பாக இசையமைப்பது என்பது இயலாத காரியம். ஆகவே அவர் நிழலியே அப்படியே நடந்து போவது என்று தீர்மானித்தேன்'' என்றார். ஆனால் இவ்வளவு புகழப்பட்ட ங.ந.ய -க்கு ஒரு பத்மஸ்ரீ கூட வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியான தகவல் இல்லையா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


