கண்டதும் கேட்டதும் - 51

மார்ச் 1, 1996. அன்று இரவு முழுக்க "வார்னிங்' படத்தின் பாடலுக்கான வேலைகள் நடைபெற்று இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
கண்டதும் கேட்டதும் - 51

மார்ச் 1, 1996. அன்று இரவு முழுக்க "வார்னிங்' படத்தின் பாடலுக்கான வேலைகள் நடைபெற்று இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த பாடலுக்கான கடைசிக் காட்சியும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. அவருடன் இருந்த உதவி டைரக்டர்கள் அந்த படப்பதிவு மிகவும் அற்புதமாக வந்துவிட்டது என்று கூறி கொண்டிருக்கும்போது லோக் சிங்குக்கு அந்த படப்
பதிவில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை. மேலும் மேலும் போட்டுப் பார்த்தும் காட்சி சரியாக அமையவில்லை என்றே எண்ணினார். 
""இல்லை...மீண்டும் ஒருமுறை இந்த கடைசி ஷாட்டை எடுத்துவிடுவோம்'' என்று கூறி தன் கையில் பெட்ரோல் கேனுடன் காட்சியை எடுக்க வேண்டிய இடத்திற்குச் சென்றார். உதவி டைரக்டர்கள், ""சார்... நாங்கள் போய் அந்த வேலையைச் செய்கிறோம்'' என்று கூறியும் , "" நீங்கள் கேமராவிடம் இருங்கள்'' என்று கூறி அந்த மலைப்பாங்கான இடத்துக்குச் சென்றார். 
நாமும் அவர் பின்னாலேயே செல்கிறோம். உள்ளத்தில் கீழ்க்கண்டவாறு வார்த்தைகள் எச்சரிக்கை செய்தன. படத்தின் பெயர் போலவே எச்சரிக்கை (ரஅதசஐசஎ) செய்தது. 
"" இருங்கள் லோக் சிங். இரவு நேரம் மலைப்பாங்கான பகுதி. காற்று சுழன்றடிக்கிறது. சிறிது நேரம் கழித்துச் செல்லலாம். அல்லது
மீண்டும் மானிட்டரைப் பார்த்து எடுத்த காட்சி அனைவரும் கூறுவது போன்று சரியாக அமைந்திருக்கிறதா என்று தீர்மானம் செய்து கொள்ளலாம். லோக் சிங் என்னிடம் அந்த பெட்ரோலைக் கொடுத்துவிடு. நான் கொண்டு போய் அங்கு ஊற்றுகிறேன். கேமராவைக் கையாள்வது மட்டும்தானே உன் வேலை. நீ போ லோக் சிங். கேமராவிடம் போ. அந்த பெட்ரோல் கேனை என்னிடம் கொடுத்துவிடு''
ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்த காட்சியின் பின்னணியில் நெருப்பு எரிவது போல இருந்தது. அந்த காட்சி சரியாக அமையாததால், மீண்டும் நெருப்பு எரியும் காட்சியை ஏற்படுத்த தன் கையில் இருந்த பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோலை தரையில் ஊற்றினார். அங்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் தீப்பற்றுவது போன்ற காட்சி எடுத்து முடிக்கப்பட்டிருந்தது. அந்த தீயில் இருந்து இன்னும் தீக்கங்குகள் அணையாது காற்றின் ஓட்டத்தால் கனன்று கொண்டு தனது கோர விழிகளைக் காட்டாது, உள்ளேயே நெருப்பை வைத்திருந்தன. அதில் பெட்ரோல் பட்டதும் அது உடனே தீயாய் மாறி அருகில் இருந்த லோக்சிங்கின் மேல் அப்படியே பற்றிக் கொண்டது. 
ஒரு மனிதனின் உயரம் உள்ள காய்ந்த செடியில் தீப்பட்டால் "திகுதிகு'வென்று எரிவது போன்று லோக்சிங் தெரிந்தார். காற்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. பாதுகாப்புச் சாதனங்கள் ஏதும் அங்கு இல்லை. தண்ணீர் அந்த இடத்தில் கொஞ்சமும் இல்லை.
லோக் சிங் தன் கையில் இருந்த கேனைத் தூக்கி எறிய அதிலிருந்த பெட்ரோல் மேலும் அவர் மேலேயே சிதறியது. லோக் சிங்குக்கு ஒன்றும் செய்யத் தோன்றாமல், அந்த மலைப்பாங்கான, கல்லும் முள்ளும் நிறைந்த மண்ணில் புரண்டு தானே தீயை அணக்க முயன்றார். 
கதாநாயகி அமானி தன் மேல் இருந்த துப்பட்டாவை அவர் மேல் போர்த்தினார். அனைவரும் அங்கு ஓடி வந்தனர். உதவி டைரக்டர் ஜவஹர் ராவ் அருகில் ஓடி வந்து லோக் சிங்கை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். லோக்குக்கு உடலில் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. 
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது வந்து சேரில் அமர்ந்து கொண்டு, ""அந்த கடைசி ஷாட்டை எடுத்துவிடுங்கள்'' என்று அடம் பிடித்தார். ஆனாலும் அங்கிருந்த தயாரிப்பாளர் அதைக் கேட்காது, ""வாருங்கள் மருத்துவமனைக்குச் செல்வோம்'' என்று அழைக்க அந்த மாமனிதன் லோக் சிங் நடந்தே காரில் வந்து ஏறிக் கொண்டார். கார் ஹைதராபாத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையை நோக்கி விரைந்தது. 
சென்னையில் இருந்த லோக் சிங்கின் மனைவி கீதா மார்ச் 2 ஆம் தேதி நடந்த நிகழ்வுகளை நம்மிடம் விவரிக்கிறார்:
""சூரிய கதிர்கள் இவ்வுலகின் மேல் பட இருக்கும் காலைப் பொழுதில் எனக்கு ஒரு போன் வருகிறது. லோக் சிங்கின் உதவியாளர் ஜவஹர் ராவ் என்னிடம் பேசுகிறார். 
ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கான பூஜை நடைபெற இருப்பதால் நீங்கள் உடனே புறப்பட்டு ஹைதராபாத் வாருங்கள் என்று அவர் அழைத்தார். 
நான் அவரிடம் விசாரித்தேன். "" ஏன் லோக் சிங் என்னிடம் பேசவில்லை. அவரைப் பேசும்படி கூறுங்களேன்'' என்றேன். அவர் படப்பிடிப்பின் வேலையில் பிசியாக இருப்பதால் என்னை உங்களிடம் சொல்லச் சொன்னார். நீங்கள் உடனே புறப்பட்டு ஹைதராபாத் வாருங்கள் என்று மீண்டும் அழைத்தார். 
நான் உடனே விமானம் மூலமாக ஹைதராபாத் விமானம் நிலையம் சென்றடைந்தேன். அங்கே எனக்காக லோக் சிங்கின் உதவியாளர்கள் காத்திருந்தனர். நான் வந்ததும் என்னை ரீசிவ் செய்து கொண்டு காரில் ஏற்றிக் கொண்டனர். கார் ஹைதராபாத் சாலையில் வேகமாகச் சென்று அப்போலோ மருத்துவமனையில் நுழைந்து நிற்கிறது. 
எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. படத்தின் பூஜை போடுவதாகக் கூறியவர்கள் ஏன் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர் என்றே தெரியவில்லை. என்னை இறக்கிக் கொண்டு அவர்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்தில் மிக வேகமாக நடந்தனர். நானும் காற்றின் வேகத்தில் செல்லும் சருகுபோல அவர்கள் பின்னாலேயே சென்றேன். 
அங்கு சிரஞ்சீவியும், அல்லு அரவிந்தும் இன்னும் பலரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் மனம் சிறிது 
ஆறுதல் அடைந்தது. 
அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாரும் சினிமாகாரர்கள்தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஏன் அவர்களின் முகம் கருத்து சோகம் கப்பி கொண்டிருக்கிறது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. 
நான் சிரஞ்சீவியைப் பார்த்துச் சிரித்த
படியே ""எந்த படத்துக்கு பூஜை போடுறீங்க?'' என்று கேட்டேன்.
சிரஞ்சீவி என்கேள்விக்குப் பதில் தரவில்லை. தான் நின்று கொண்டிருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு, ""வா கீதா'' என்று அழைத்தார். உள்ளே சென்றார். நானும் அவர் பின்னாலேயே சென்று...
லோக் சிங் படுக்கையில் படுத்திருந்தார். அவரைப் பார்த்ததுமே அவர் தீக்காயங்களோடு இருக்கிறார் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நான் அவரைப் பார்த்தபடியே அவர் அருகில் சென்று நின்றேன். 
என்னைப் பார்த்ததும் லோக், "" கீதா வந்துட்டியா? எங்கே உன்னைப் பார்க்காமலேயே போய் விடுவேனோ என்று நினைத்தேன்'' என்று என் கரங்களை பிடித்துக் கொண்டு 
கூறினார். 
இந்த காட்சி எனக்குள் ஜீரணமே ஆகவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. ""லோக் என்ன ஆயிற்று... என்ன ஆயிற்று'' என்று அரற்றிக் கொண்டே இருந்தேன். என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் 
கரத்தைப் பற்றியிருந்த லோக்கின் கைகளில் பட்டு வழிந்தது. 
லோக் சிங் என்னைப் பார்த்து, "" கீதா பயப்படாதே... எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் நல்லா ஆயிடுவேன்'' என்று கூறி எனக்கு 
ஆறுதல் கூறியபடியே இருந்தார். 
இப்படிப்பட்ட தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்றே தெரியாத நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கி விட்டனரோவென்று நினைத்தேன். 
ஆனால் லோக் தனக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி என்னிடம் கூறினார். அவர் என்னிடம் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க வந்த அனைத்து பிரபலங்களிடமும் அவர் சிரித்தபடியே உரையாடினார். வந்தவர்கள்தான் அழுதார்களே தவிர, லோக்கின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் கூட வரவில்லை. அவரே அனைவருக்கும் ஆறுதல் கூறினார். 
ஒரு லெவலில் நான் சிரஞ்சீவியைப் பார்த்து, ""நான் சென்னைக்கு லோக்கை அழைத்துச் சென்று விடுகிறேன். அங்கு வைத்து அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறிய போது, "" இந்த நிலையில் ஒரு நீண்ட பயணத்துக்கு அவர் உடல் ஒத்துழைக்காது. லோக்கை நாங்கள் காப்பாற்றிவிடுவோம்'' என்று சத்தியம் செய்தார். 
லோக்கைப் பார்க்க திரண்ட கூட்டத்தைப் பார்த்து அந்த அப்பல்லோ மருத்துவமனையின் நுழைவாயிலில் "யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை' என்று போர்டு வைக்கப்பட்டது. இது மாதிரி அந்த மருத்துவமனையில் இதுவரையில் போர்டு வைத்ததேயில்லை என்று அனைவரும் கூறினர்'' என்றார்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com