கண்டதும் கேட்டதும் - 54 

இங்கு பல எழுத்தாளர்கள் தங்களின் மூன்று வரி கவிதை பத்திரிகையில் வராதா? என்று ஏங்குவது எனக்குத் தெரியும்.
கண்டதும் கேட்டதும் - 54 

இங்கு பல எழுத்தாளர்கள் தங்களின் மூன்று வரி கவிதை பத்திரிகையில் வராதா? என்று ஏங்குவது எனக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது எனக்கு தினமணி பத்திரிகையில் வெளிவரும் "இளைஞர்மணி'யில் எழுத வாய்ப்புக் கிடைத்தபோது, "என்னை விட நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, நாம் என்ன எழுத முடியும்?' என்றே நினைத்தேன். ஏனென்றால் நான் எடிட்டராகவும், இயக்குநராகவும், கதாசிரியனாகவும் தான் இந்த உலகிற்கு தெரிந்தவனாய் இருந்தேன். அப்படியிருக்கும்போது எழுத்தாளன் என்ற நுழைவாயில் எனக்குப் புதியதாகத்தான் இருந்தது. 
எழுதுவதற்கு முன் ஒன்று மட்டும் என்னுள் உறுதி எடுத்துக் கொண்டேன். எனது எழுத்து தமிழ் உயிர் எழுத்தையும், உயிர் மெய் எழுத்தையும் படித்தவர்கள் அனைவரும் சுலபமாக படிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆகவே நான் ஆரவாரம் இல்லாமல் தொடங்கி எழுதினேன். கடைசி வரை புரியாத தமிழையோ அல்லது கவித்துவமான வார்த்தை பிரயோகத்தையோ நான் செய்யவில்லை. ஒரு வார்த்தை அது ஆங்கிலத்தில் நன்கு அறியப்பட்டிருந்தால் அதனை நான் ஆங்கிலத்திலேயே எழுதினேன். அதனைப் போன்றே சமஸ்கிருத வார்த்தை சரியாக இருந்தால் அதனை அந்த வரியில் நான் தயங்காமல் போட்டேன்.
நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "" லெனின் உன் கட்டுரை அப்பட்டமாக இருக்கிறதே. அது நிர்வாணமாக இருப்பதாக நான் உணர்கிறேன்'' என்றார். 
ஆமாம். நான் எதையும் மூடி மறைக்க விரும்பவில்லை. எத்தனையோ விஷயங்களை நாம் மூடி வைத்தே அது இந்த உலகுக்குத் தெரியாமல் போய் விட்டதாக நினைக்கிறேன். அதோடு கூட, இந்த உலகம் முழுநிர்வாணமானதுதான் என்பதே என் எண்ணம். 
வணக்கத்தில் உன்னதமானதாக, "சாஷ்டாங்க நமஸ்காரம்' என்று கூறுவார்கள். அது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் நிகழ்வாகும். அப்படித்தான் எழுத்து இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதன்படியே நான் எழுதினேன். 
நான் இந்தத் தொடரில் என் குடும்பத்தாரைப் பற்றிய விவரங்களை எழுதியுள்ளேன். தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்திய நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோரின் விவரங்களைக் கூறியுள்ளேன்.
ஜெயகாந்தன் மற்றும் தேவபாரதி இருவரிடமும் எனக்கிருந்த நட்பினை உங்கள் முன் வைத்துள்ளேன். எனது ஆசான் டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரைப் பற்றி அந்தச் சிறிய வயதில் அவரால் என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை உங்களுக்கு கூறி இருக்கிறேன். அவருடைய மகன் தக்கேசியை ஒரு கவிதையில் வாழ்த்தியிருக்கிறேன். இப்போது தமிழ் சினிமா உலகில் பிலிமில் படம் எடுப்பது போய்விட்ட நிலையில், அப்போது பிலிமில் ஆளுமை செலுத்திய சர்துல்சிங் சேத்தி மற்றும் பொம்மாச்சி என்னும் பரமேஸ்வரனையும் நாம் சந்தித்திருக்கிறோம். நான் சின்ன வயதில் மேற்கொண்ட நடைப்பயணத்தையும் அப்போது பார்த்த விவசாயத் தொழிலாளர்களின் அன்பையும் உங்களுக்குக் காட்டியிருக்கிறேன். 
எனது தந்தை ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த படங்களில் இருந்து "பாவமன்னிப்பு' மற்றும் "பழனி' ஆகிய இரண்டு கதைகளை நான் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன். 
"பாவமன்னிப்பு' மத நல்லிணக்கத்தைப் பற்றியும் "பழனி' விவசாயிகளின் துன்பத்தைப் பற்றியும் இருந்ததால், அதனை நான் என் எழுத்தில் கை கொண்டேன். எனது தம்பி லோக் சிங் தனது உள்ளத்து உறுதியான "செய்யும் தொழிலே தெய்வம்' என்ற கொள்கையினால் மடிந்ததை நாம் கண்டு கண்கலங்கினோம். 
இந்த தொடரில் நான் ஒரு கதாநாயகனை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். அவர்தான் அந்த மாந்தோப்பு காவல்காரர். தன் தோட்டத்து மாங்காய்கள் திருடு போவதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாது என் மேல் அன்பு வைத்த அவர்தான் இந்தத் தொடரின் கதாநாயகன்.
அவர் என்னைப் பார்த்து, தமிழனா என்று தெலுங்கில் கேட்டபோது, நான் தெலுங்கிலேயே ""தமிழன்தான் ஆனா எனக்கு தெலுங்கு தெரியும்'' என்று கூறிய பதில், அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். காரணம் தமிழ் தெரிந்தவர்கள் அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். பள்ளிகூடம், கல்லூரி என்று போகும்போது அவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தால், வேற்று மொழியான ஆங்கிலம் பயில்கின்றனர். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் ஆங்கிலத்தையும் படிக்காது விட்டாலும் விட்டு விடுவார்கள் என்றே நம்புகிறேன். 
ஆனால் என் வீடு எல்லா மொழிகளின் கூட்டமைப்பாக இருந்தது. எல்லா மொழிக்காரர்களும் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். அவர்கள் அவர்களின் மொழியிலேயே பேச, என் தந்தை அவர்களின் மொழியிலேயே அவர்களுடன் உரையாடுவார். காரணம் அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என்ற அனைத்து மொழிகளையும் தெரிந்து வைத்திருந்தார். நான் அவரின் நிழலில் இருந்து கொண்டு எல்லா மொழிகளையும் தெரிந்து கொண்டேன். 
அதுதான் அந்த திருட்டு வேளையில் அந்த மாந்தோப்பு காவல்காரரிடம் இருந்து என்னைக் காப்பாற்றியது. காப்பாற்றியது மட்டுமல்லாமல், வெகுமதியும் அளித்தது. என் கைகளில் ஏற்கெனவே இருந்த பெரிய மாங்காய்களுடன் அவர் அளித்த கனிந்த கிளிமூக்கு மாங்கனியும் எனக்குப் பரிசாகக் கிடைத்தது. என் அம்மாவைப் பற்றி கீதா கூறிய விவரங்கள் மட்டுமே இதுவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கீதாவுக்கு சோனா அத்தை என்றால் மிகவும் பிரியம். அவர்கள் இருவரும் அத்தை மருமகள் போல இல்லாமல் நண்பர்கள் போல பழகுவாங்க. என் அம்மாவைப் பற்றி நானும் கொஞ்சம் சொல்லத் தோணுது. 
நான்தான் வீட்டில் இருக்கும் பசங்கள்ளேயே ரொம்ப துறுதுறுப்பு. எப்பவும் அம்மா பக்கத்திலேயே இருக்க ஆசைப்படுவேன். அவங்களோ அடுப்பங்கரையிலேயேதான் இருப்பாங்க. எவ்வளவு பேருக்கு சமைக்கணும். நான் அவங்களுக்கு உதவுறேன்னு உபத்திரவம் செய்து கொண்டிருப்பேன். கோபமாயிட்டாங்கன்னா என்னைப் பிடிக்க கையை நீட்டுவாங்க. நான் உடனே ஓடிவிடுவேன். வெளியில் நல்லா சுத்திட்டு அம்மா கோபப்பட்டதை மறந்துட்டு வீட்டுக்கு வருவேன். வந்ததும் நேரா சமையல்கட்டுக்குத்தான் போவேன். அம்மா அமர்ந்தபடி சமையல் செய்து கொண்டிருப்பார்கள். நான் செய்த சேட்டையை அவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைத்து அருகில் செல்வேன். அவ்வளவுதான் பல்லியிடம் மாட்டிய பூச்சி மாதிரி அப்படியே என்னை இழுத்துப் போட்டுவிடுவார்கள். நான் திமிரப் போகிறேன்னு அவங்களோட காலைத் தூக்கி என் கால் மேல் போட்டு அமுக்கிக் கொண்டு தயாராக வைத்திருந்த வெங்காயமோ அல்லது எலுமிச்சம்பழமோ என் கண்களில் பிழிந்து விட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன ஒரே எரிச்சல்தான். ஒரே அழுகைதான். ஆனால் இன்றைக்கும் நான் கண்ணாடி அணியாததற்குக் காரணம், என் கண்களில் விடப்பட்ட வெங்காயச்சாறும், எலுமிச்சை சாறும்தான் என்று நினைக்கிறேன். 
இப்படிப்பட்ட அம்மாதான் அண்ணன் தம்பிகளான எங்களை வட்டமாக உட்கார வைத்து பெரிய குண்டானில் சோறு, குழம்பு எல்லாம் போட்டு பிசைந்து பெரிய உருண்டைகளாகப் பிடித்து அதன்மேல் தொட்டுக்க வைத்து கொடுப்பார்கள். சாப்பாடு முடிந்ததும் கையை அந்த பாத்திரத்திலேயே வழித்து அதனை உருண்டையாக்கி, "" இதைச் சாப்பிட்டாதான் யானை போல உடம்புக்கு வலு சேர்க்கும்'' என்று எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுப்பார்கள். அந்த கடைசி சோற்றுக்காக நாங்களும் எழுந்து கொள்ளாமல் இருந்து வாங்கிச் சாப்பிடுவோம். இதனைப் போன்றே எல்லா அம்மாக்களும் கொடுத்திருப்பார்கள். இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
நான் இளைஞர்களுக்கு எப்போதும் கூறுவது: ""பிற மொழிகளைப் படியுங்கள். அதன் கருத்தினை உள் வாங்கிக் கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் உங்கள் மூதாதையரைப் பற்றி, உங்களுடைய தாத்தா, ஆயா, தந்தை, அம்மாவென்று அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதி வையுங்கள். அப்போதெல்லாம் இளைஞர்களிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது மிகவும் குறைந்துவிட்டதாக அறிகிறேன். ஏனென்றால் அவர்களின் எண்ணங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவு செய்கிறார்கள். ஆனால் அது சில நேரங்களில் அழிந்துவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது. ஆகவே நீங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களின் சந்ததியர்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும்'' என்று நான் அவர்களுக்குக் கூறுவேன். 
இனி நான் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி. வங்காளம் போன்ற மொழிகளில் வெளிவந்துள்ள படங்களை இயக்கிய இயக்குநர்களின் படங்களைப் பற்றி எழுதப் போகிறேன். அது விமர்சனமாக இல்லாமல் அவர்கள் தாங்கள் அளித்த சினிமாவில் கதையினூடே தங்களுடைய திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்கள். தான் அறிந்த கதையை சினிமாவுக்கான அம்சத்துடன் இவர்கள் எவ்வாறெல்லாம் கையாண்டு இருக்கிறார்கள் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். (பின்னர் வாய்ப்புக் கிடைக்கும்போது).
கடைசி நேரத்தில் கட்டுரையை அளித்தாலும் என் மேல் அன்பு கொண்டு தாமத்திற்காக வருத்தப்படாது, உடனே பதிவு செய்த இளைஞர்மணி குழுவினருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

(நிறைவு பெற்றது)
படம் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com