கண்டதும் கேட்டதும் - 46

""கேமராவை ஸ்டார்ட் பண்ணும்போது கேமராவைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் ஆரம்பிப்பாரு. இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கறீங்களேன்னு கேட்டா கம்பெனி கார் வர்றதுக்குள்ளே நான் ரெடியா இருந்தாதான் நல்லா இருக்கும்.
கண்டதும் கேட்டதும் - 46

கீதா தொடர்கிறார்:
""கேமராவை ஸ்டார்ட் பண்ணும்போது கேமராவைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் ஆரம்பிப்பாரு. இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கறீங்களேன்னு கேட்டா கம்பெனி கார் வர்றதுக்குள்ளே நான் ரெடியா இருந்தாதான் நல்லா இருக்கும். அவங்கள காக்கவே வைக்கக் கூடாது''ன்னு சொல்லுவாரு. 
தெனமும் கௌம்பும்போது எங்களோட பொண்ணு வீணா பவானிகிட்ட மீட்டரைக் கொடுத்து அவகிட்ட இருந்து வாங்கிட்டுப் போவாரு. அவ தூங்கிட்டு இருந்தாலும் அவளை எழுப்பி அவளோட கையில மீட்டர வச்சி அவகிட்டயிருந்து மீட்டரை வாங்கிக்குவாரு. அப்படி செய்யாம இருந்ததே இல்லை. தன் பொண்ணு கையால மீட்டரை வாங்கிட்டுப் போனா அன்னைக்கு சூட்டிங் நல்லா நடக்கும்ன்னு நம்பிக்கை அவர்கிட்ட இருந்தது.
அவரோட பொண்ணு மேல அவ்வளவு உயிர். அதே மாதிரி மனைவின்னாலும் குழந்தைன்னாலும் அவ்வளவு உயிர். எதுக்குமே எங்களைத் திட்ட மாட்டாரு. ஏதாவது நாங்க கேட்டா கூட மறுக்கவே மாட்டாரு. சரின்னு சொல்லிடுவாரு. ""நீங்க ஒரு விஷயம் கூட ஒண்ணுமே மறுத்துச் சொல்லவே மாட்டேன்கிறீங்களே?''ன்னு கேட்டா, ""கீத் என்னைப் பார்த்து நீ ஏதாவது கேட்டா, அப்ப நான் கீதாவா மாறிடுவேன். கீதா என்ன எதிர்பார்க்குறாளோ அதைத்தான் நான் சொல்லுவேன். உங்களுக்கு எதிர்ப்பா என்னால ஒண்ணுமே சொல்ல முடியாது''ன்னு சொல்லிடுவார். அப்படியே எங்களைச் செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்தே வளர்த்துட்டாரு. ஆனா... (குரம் கம்மிவிட்டது, வார்த்தைகள் இல்லாமல் சில நொடிகள் கழிகிறது) அவர் போன பின்னர்தான் தெரிஞ்சது அவரோட அருமை.
கார் வாங்கினோம். ""கீதா நீ கார் ஓட்டக் கத்துக்கோ''ன்னு சொல்லி எனக்கு கத்துக் கொடுத்தாரு. ""நான் கிராமத்துல பொறந்து வளர்ந்து வந்தவ. மக்கு மாதிரி இந்த ஊருக்கு வந்தேன். அதனால என்னால கார் ஓட்ட முடியுமா''ன்னு அவரைக் கேட்டேன். அதெல்லாம் முடியும்ன்னு ஊன்ப்ப் ஹய்க் ச்ன்ப்ப் -ஆ அவரே கத்துக் கொடுத்தாரு. நைட்டு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் என்னை உட்கார வச்சி கார் கத்துக் கொடுப்பாரு. நான் ஒரு தடவை பஸ்ல இடிச்சிட்டேன். அதனால பயந்து போய் ஓட்ட முடியாதுன்னு சொன்னப்ப, எனக்குத் தைரியம் கொடுத்து என்னை மறுபடியும் கார் ஓட்ட வச்சாரு. இப்ப நான் ரொம்ப டிராபிக் இருக்கும்போது கூட அனாவசியமா கார் ஓட்டறேன். 35 வருஷமா கார் ஓட்டிட்டு இருக்கேன். இதுலதான் என் குழந்தைங்க எல்லாரையும் கிரிக்கெட் விளையாட, நீச்சல் குளத்துக்கு அழைச்சிட்டுப் போக, பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டுப் போகறதுன்னு எல்லாம் என்னால சுலபமா முடிஞ்சிதுன்னா அது என் கணவர் எனக்குக் கொடுத்த தைரியத்தைத்தான் சொல்லணும். அவர் கொடுத்த தைரியத்தால்தான் இதுவெல்லாம் எனக்கு சுலபமா முடிஞ்சது.
இதை உங்களுக்குச் சொல்லணும். அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துடுச்சி. ஜுரமோ 100 டிகிரிக்கு மேல அடிக்குது. ஆனா அவர் எப்பவும் போல குளிச்சிட்டு சூட்டிங் கிளம்பிட்டாரு. அவரோட டைரக்டர் போன்ல பேசறாரு. "ரொம்ப ஜுரம் அடிக்குது. வீட்டுக்கு போங்கன்னா கேக்கவே மாட்டேங்கறார்'ன்னு அவரு புலம்புறாரு. ஆனா அவரு சூட்டிங் நல்லா முடிச்சிட்டே வீட்டுக்கு வந்தாரு. கடுமையான காய்ச்சல். பத்து நாள் ஆஸ்பிட்டல்ல இருந்து உடம்பு சரியாச்சு...'' என்றார்.
என்னோட தம்பி கேமரா மேன். பாரதிராஜாவின் கண்கள். கண்ணனுடைய முதல் படம் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'. தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்தவர். அவருடைய நண்பர் வெங்கையா பாபு, கே.ஆர். (கோதண்டராமன்) ஆகியோரும் டைரக்ஷன் பயின்றவர்கள். அவர் முதல் படம் ஞதரஞ சஇ3 (ஞதஐஉசபஅக ரஞகஊஉஐச) என்ற ஜெர்மனி கம்பெனியுடைய ஃபிலிம் நெகட்டிவில் செய்த படம். அதன் பெயர் "பகடால படவா' (படவா என்றால் படகு). லோக்சிங்கும் கூட இருந்து அப்படத்தில் பணியாற்றினார். படத்தின் கதாநாயகன் ஹரிநாத். கதாநாயகி விஜயலலிதா. என்னுடைய எடிட்டிங்கில் இப்படம் உருவானது. அதில் படகில் விஜயலலிதாவும், ஹரிநாத்தும் பாடுவதுபோல காட்சி. படகு மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோதாவரி நதி கரையோரம் இரவு நேரத்தில் படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஜெனரேட்டரின் மின்சாரம் போதவில்லை என்பதால் பக்கத்தில் மேலே சென்ற மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் எடுக்க அங்கு இருந்த மரக்கட்டையால் ஆன மின்சார கம்பத்தின் மேலே ஒருவன் ஏறினான். அந்தக் கம்பம் ஆற்றின் கரையோரமாக நீரில் இருந்தது. லோக்சிங் ஒரு கட்டையில் மின்சாரம் பெறுவதற்கான கொக்கியைப் பொறுத்தி மேலே அனுப்ப மேலே இருந்தவன் அதனை வாங்கி அதனை மின்சார கம்பியில் பொறுத்த இருக்கும்போது மின்சாரம் செல்லும் கம்பியில் இருந்த மின்சாரத்தின் வேகத்தில் சொக்கி, மின்சார கம்பியின்பால் இழுக்கப்பட்டது. மேலே இருந்தவனை மின்சாரம் தாக்குவதற்கு முன் கீழே இருந்த லோக்சிங் தன் கையில் வைத்திருந்த கட்டையால் அவனை ஓங்கி அடிக்க மேலே இருந்தவன் தண்ணீரில் விழுந்தான். அப்படியும் அவனது கைவிரல்கள் மின்சாரத்தின் தாக்கத்தால் சிறிது தீய்ந்துவிட்டது. அவ்வாறு லோக்சிங் செய்திருக்காவிட்டால் மின்சாரம் எடுக்க முயன்றவனும், படகில் இருந்த எங்கள் மேலும் மின்சாரம் பாய்ந்து மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சமயோசிதப் புத்தியும், அசாதாரண தைரியமும் கொண்ட லோக்சிங்தான் படப்பிடிப்பின் போது விபத்தில் மாட்டிக் கொண்டு மரணம் அடைந்தான்.
திருமதி. கீதா தன் கணவர் லோக் சிங் பற்றிய நினைவுகளை நம்முடன் தொடர்கிறார்:
""அவருக்கு மஞ்சள் காமாலை வந்ததுன்னு சொன்னேன் இல்லையா? அப்பதான் என்னோட அண்ணா பொண்ணு கலாவுக்குக் கல்யாணம். கலா, நரேன் அண்ணா, செளமித்ரா அண்ணியோட மகள். செளமித்ரா அண்ணி (டைரக்டர் கிருஷ்ணன் - பஞ்சு) பஞ்சுமாமாவோட ஒரே பொண்ணு. இவங்களோட பொண்ணுதான் கலா. கலாவோட உண்மையான பெயர் அபரஞ்சி. அதன் அர்த்தம் புடம்போட்ட தங்கம். இந்தப் பெயரை பீம் மாமா வச்சாரு. கலாவுக்கு கலைஞர் டிவி இருக்குல்ல அங்க இருக்குற மண்டபத்துலதான் கல்யாணம் ஆச்சு. எப்பவுமே ஓடியாடி வேலை செய்ற என் கணவர் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால கொஞ்சம் சோர்ந்து போய்தான் அமர்ந்து இருந்தாரு. 
லோக்குக்கு வீடுன்னா அப்படி இருக்கணும். ஒரே கூட்டமா இருக்கணும். வீடு ஃபுல்லா ஜனங்க இருப்பாங்க. ஒரே சிரிப்பு... ஒரே கொண்டாட்டம். அவரோட நண்பர்கள், உறவுக்காரங்கன்னு எல்லாம் ஒரே கும்பலா இருக்கும். அப்பதான் அவருக்குச் சந்தோஷம். எப்போதுமே சிரிச்சிக்கிட்டு ஒரே கூச்சல்தான். சிரிப்புதான் நெறைய இருக்கும். பீம் மாமாவுக்கும் அப்படிதான், லெனின் அண்ணாவுக்கும் அப்படிதான் வீடு எப்பவும் ரொம்பி இருக்கணும். அதனாலதான் இவங்க குடும்பப் பாங்கான படங்களை எடுத்தாங்க.
இவ்வளவு கூட்டம் இருந்தா எவ்வளவு செலவு ஆகும். அதெல்லாம் பாக்கவே மாட்டாரு. சம்பாரிச்சி வந்து போட்டுட்டே இருப்பாரு. வர்றவங்க அவங்களே சமையல் எல்லாம் பண்ணுவாங்க. பால், பாயாசம் ரொம்ப ஸ்பெஷல். அப்ப மாடு இருந்தது இல்ல. பாலுக்குப் பஞ்சமே இருக்காது. சிவாஜிகணேசன் கூட பால் பாயாசம் கேட்டு அப்ப அப்ப சொல்லி அனுப்புவாரு. சோனா அத்தை பெரிய பெரிய கேன்ல செய்து கொடுத்து அனுப்புவாங்க.'' 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com