கண்டதும் கேட்டதும் - 47

கீதா லோக் சிங் தொடர்ந்து பேசினார்: ""பீம் மாமா பால் பாயசம் ரொம்ப நல்லா பண்ணுவாரு.
கண்டதும் கேட்டதும் - 47

கீதா லோக் சிங் தொடர்ந்து பேசினார்: ""பீம் மாமா பால் பாயசம் ரொம்ப நல்லா பண்ணுவாரு. முதல் நாளே பச்சைத் தண்ணியில் பாதாம் பருப்பை ஊற வைத்து, அதை மறுநாள் எடுத்து அது மேல் இருக்குற தோலெல்லாம் உறிச்சி, பொடிசா அதை வெட்டி வச்சிக்கினு, பெரிய இரும்பு கடாய்ல பாலை சுண்டக் காய்ச்சி பாயசம் செய்வாங்க. ஒரு வாய்க்கு அவ்வளவு பருப்பு வரும். பாதம் பருப்பு, முந்திரி பருப்பு, சார பருப்புன்னு எல்லாம் அதுல இருக்கும். சுவைன்னா சுவை, தேவாமிர்தம் மாதிரி இருக்கும். சோனா அத்தை காப்பி கலக்குனாங்கன்னா 40 -50 கப் வரும். எல்லாம் சின்னச் சின்ன டம்பளர் இல்லை. பெரிய லோட்டா. அதுவும் ஃபில்டர் காபி. வீடே மணக்கும். சோனா அத்தையைப் பற்றி சொல்லணும்னா அவங்க எனக்கு அத்தைன்னு சொல்லக் கூடாது. எனக்கு நல்ல ஃபிரண்டாக இருந்து எல்லாத்தையும் எனக்குச் சொல்லித் தருவாங்க. நானும் அவங்க கிட்ட நெறைய கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். காலையில 6 மணிக்கெல்லாம் சமையல் முடிஞ்சிருக்கும். ஓட்டல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எப்ப வந்தாலும் சாப்பிடலாம். யார் வந்தாலும் மொதல்ல சமையல் கட்டுக்குத்தான் போவாங்க. டைனிங் டேபிள் எல்லாம் இருக்கும். ஆனா எல்லாரும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவாங்க. அதுதான் எல்லாருக்கும் புடிக்கும். 
தினமும் ஏகாதசிதான். ஆனா உண்மையிலேயே ஏகாதசி வருதே அப்ப பார்க்கணும். கோயிலுக்குப் போறது. சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு நைட் ஷோ போறது, சீட்டு ஆடுறது. லோக் சிங்குக்கு சீட்டு ஆடுறது ரொம்ப பிடிக்கும். கீழே உட்கார்ந்தார்ன்னா இந்தப் பக்கம் ஒரு தலைகாணி, அந்தப் பக்கம் ஒரு தலைகாணி வச்சிக்குவாரு. ரொம்ப நேரம் உட்காரணும்ல்ல. முதுகே நிக்காது. ஆனா ஜெயிச்சிடுவாரு. ஒரே கொண்டாட்டம் தான்.
ஆடி மாசம் வந்துச்சின்னா கூழ் எல்லாம் ஊத்தி பெரிய பாளையத்தில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோயிலுக்குப் போவாங்க. அங்க ஆடு கோழியெல்லாம் வெட்டி சாமிக்குப் படையல் போடுவாங்க. ஆனா லெனின் அண்ணா அவங்களோட போக மாட்டாரு. அவருக்கு ஆடு, கோழி வெட்றதெல்லாம் புடிக்காது. அவர் சுத்த சைவம். பெரிய பஸ் எடுத்துட்டுப் போவணும். இவ்வளவு கூட்டம் இருக்குதே. பஸ்தான் சரியா இருக்கும். லோக் சிங்குக்கு கார், பஸ், லாரி எல்லாம் ஓட்டத் தெரியும். அதுவும் இல்லாம நல்ல மெக்கானிக். ஏதாவது கோளாறு ஆச்சின்னா இவரே சரி பண்ணிடுவாரு. ஏ.சி.மெக்கானிக் வேலை கூட தெரியும். அப்பா உகும்சிங் கோட 6567 அம்பாசிடர் காரை எடுத்துட்டு அவரோட திருப்பதிக்குப் போவாங்க. லோக் சிங்தான் காரை ஓட்டுவாரு. அங்க நிலபுலங்களெல்லாம் இருக்குல்ல. அத பாக்கறதுக்கு. பீம் மாமா படம் எடுத்து முடிச்சதும் பெட்டியைத் திருப்பதிக்கு எடுத்துட்டுப் போயி 5 ஆவது ரீலை வெங்கடாஜலபதி காலில் வச்சிதா எடுத்து வருவாரு. அந்த காலத்துல திருப்பதி கோயில்ல உகும்சிங் மாமாவுக்கும், பீம் மாமாவுக்கும் அவ்வளவு மரியாது. ரைட் ராயலா கோயில் உள்ள போவாங்க.
தேனாம்பேட்டையில் இருக்குற இந்த வீட்டை 1983 இல்தான் லோக்சிங் கட்டினாரு. எல்லாம் பார்த்து பார்த்து டிசைன் பண்ணுனாரு. எல்லா பர்னிச்சர்களும் அவர் வாங்கினதுதான். நான் இத்தனை வருஷத்துக்கு வேற எந்தப் பொருளையும் அவர் போன பிறகு புதுசா வாங்கவேயில்லை. வீட்டோட ஹால்ல 50 பேர் வரைக்கும் உட்கார வச்சி பந்தி பரிமாறலாம். எவ்வளவோ விஷேசம், எவ்வளவோ பங்ஷன் எல்லாம் இந்த வீட்லதான் நடந்தது. வீடு சுத்தமா இருக்கணும். இது இவங்களோட பிறவி குணம். எல்லாம் பெர்ஃபெக்ட். அதுதான் என்னோட புகுந்த வீட்டோட பெருமை. ஆம்பளைங்க கூட வீட்டு வேலை செய்வாங்க. அதுக்குக் காரணம் எல்லாரும் ஆம்பள பசங்கதான். ஒரே பொண்ணு ஹேமலதா அத்தை மட்டும். அதனால அவங்களை யாரும் வேலை வாங்க மாட்டாங்க. அந்தம்மா ரொம்ப சொகுசு. இப்ப ஆஸ்திரேலியாவில் இருக்காங்க.
லோக் சிங்கோட பள்ளி நாளைப் பற்றி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். கண்ணன் அண்ணாவும் இவரும் முதல்ல சில்ரன்ஸ் கார்டன் பள்ளியில மூணாவது வரைக்கும் படிச்சாங்க. அப்புறம் கேசரி பள்ளி. இவரு தெலுங்கு மீடியத்துல படிச்சிருக்காரு. பள்ளியில் நடந்த விழாவுல இவரு தெலுங்குல பேசுவாரு. எல்லாரும் பாராட்டுவாங்க. தெலுங்குல படிச்சார்ன்னா தமிழ் தெரியாதுன்னு இல்லை. தமிழையும் ஊதித் தள்ளுவாரு. ஆங்கிலத்திலேயும் நல்லா பேசுவாரு.
நெறைய புக் வாங்குவாரு. அதுல கேமரா பத்தின ஆங்கிலப் புத்தகங்கள்தான் இருக்கும். வீடே புத்தகங்களா நிரம்பி ஒரு நூலகம் மாதிரிதான் இருக்கும். வீட்ல ஜனங்களும், புத்தகங்களும் நிரம்பி இருந்தா அந்த வீடு சொர்க்கம்தான். அப்படிப்பட்ட வீட்ல நான் மருமகளா வந்ததுக்கு எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும். ஆனா திடுதிப்புன்னு போயிட்டாரு. கொழந்தை கையில இருந்த தின்பண்டத்தை குரங்கு பறிச்ச கதையா ஆயிடுச்சி...'' (அழுகிறார்... இந்த இடத்தை நிரப்ப எழுத்துகளுக்கு உயிரில்லை)
""ம்.... வீணை பவானி எங்களோட பொண்ணு. லோக் சிங்குக்கு அவ மேல ரொம்ப பாசம்... உசிரு... அதுக்குன்னு எங்க பையன் மேல ஆசையில்லைன்னு சொல்ல வரல. எல்லா அப்பாவுக்கும் பொண்ணுங்க மேல பாசம் அதிகமா இருக்குறத தடுக்கவே முடியாது.
லெனின் அண்ணா கூட தன் தொடர்ல அப்பா - பொண்ணு பாசத்தை இலக்கியத்துல இருந்து மேற்கோள் காட்டி சொல்லி இருப்பாரு. நாம நெனைச்சிக்குறோம். அந்த காலத்து இலக்கியம் மாதிரி இந்த காலத்துல வாழ்க்கை இல்லைன்னு. இருக்குது... அப்படியேதான் இருக்குது... நாமதான் ஒப்பிட்டு பார்க்க மறந்துடுறோம்.
அவர் சூட்டிங் போற போது வீணா தூங்கிட்டு இருந்தாலும் அவளை எழுப்பி மீட்டர அவ கையில கொடுத்து அதை வாங்கிட்டுப் போவாருன்னு நான் சொல்லி இருக்குறேன். அவ முதல்ல ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படிச்சா. அது ரொம்ப நல்ல ஸ்கூல். நடந்தே போயிடுவாங்க. 
அவ லோக் மாதிரி இருப்பா. லோக்குக்கு பொம்பள வேஷம் போட்டா எப்படி இருப்பாரோ அதோ மாதிரி இவ இருப்பா. அவர் சிரிச்சா கன்னத்துல குழி விழும். இவளுக்கும் அப்படிதான். லோக்குக்கு இருக்கிற கமாண்டிங் பவர் இவ கிட்ட அப்படியே இருக்கும். எல்லாரையும் கண்ட்ரோல் பண்ற திறமை அதுவும் இல்லாம, அவர மாதிரியே ரொம்ப பெர்ஃபெக்ட் . அவ இங்க பிஇ முடிச்சிட்டு அமெரிக்காவுல போயி எம்எஸ் முடிச்சா. இப்ப அமெரிக்காவுல நல்ல ஸ்டேஜ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கா. இவ கீழே 4 அமெரிக்கன்ஸ் வேலை பாக்குறாங்கன்னா பார்த்துக்கங்களேன்.
ஜெயேஸ் பாபு பத்தி சொல்லணும்ன்னா அவன் சின்ன போதுல ரொம்ப சுட்டி. இங்க ஓடுவான்.. அங்க ஓடுவான்... ஜன்னல் மேல் ஏறுவான்... திடீர்ன்னு பார்த்தா மரத்துல மேல உக்காந்துட்டு இருப்பான். அவனைக் கண்ட்ரோலே பண்ண முடியாது. 16 -17 வயசுப் பையனை நான் எப்படி அடக்குறது? அதுக்கு ஒரு சுவிட்ச்தான் வீணா. எப்பவாவது வீட்டுக்கு வரலைன்னா அவகிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன். அவ இவன்கிட்ட போன்ல பேசுன பத்தாவது நிமிஷம் இவன் வீட்டுக்கு வந்துடுவான். அதையும் வீணா போன் பண்ணி தெரிஞ்சிக்குவா. அக்கா கிட்ட அவனுக்கு ரொம்ப பயம். ஆனா இப்ப அப்படியே மாறிட்டான். ரொம்ப அமைதி. படிக்க படிக்க அவன் ரொம்ப சமத்தாய்ட்டான்னு தான் நான் நெனைக்
குறேன். 
எல்லாரும் கேட்டாங்க. ஜேயேûஸ நீ கேமரா மேனா உருவாக்கலாம் இல்லையான்னு. அதே நேரத்துல அவனுக்கு இண்ட்ரஸ்ட் ஏதும் இல்லை. ஒரு வேளை கெய்ட் பண்ணியிருந்தா வந்து இருப்பான். பெரியப்பாவோட போடா... சித்தப்பாவோட போடான்னா வந்திருப்பான். அவனோட ரத்தத்துல அது இருக்கும். ஆனா எனக்கு பெரிய அடி இல்லை. ஏன்னா இவனும் ரொம்ப ஆக்ரோசமா இருப்பான். நெறையப் பேரு சொல்லுவாங்க. பெரிய கேமரா மேனை முடக்கிப் போடுறீங்கன்னு.
லோக்குக்கு 10 அசிஸ்டென்ட் கேமரா மேன்கள் இருந்தாங்க. படத்துக்கு 5 பேர். யாராவது வரலேன்னா வேற உடனே ஒருத்தர் வந்திடுவார். படப்பிடிப்பு கொஞ்சம் கூட தடைபடக் கூடாது. அதுல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாரு. இவர்கிட்ட அசிஸ்டென்டா இருந்தவங்கள்ல விஜயகுமார், சரத் பெரிய கேமராமேனா ஆயிட்டாங்க. அடிக்கடி வந்து பேசிட்டுப் போவாங்க. 
"லோக் மாதிரி யாரும் வரமாட்டாங்க. அவர மாதிரி உதவியாளர்களை யாரும் பார்த்துக்க முடியாது. கொழந்தை மாதிரி பாத்துக்குவாரு. அதட்டல் இருக்கும். ஆனா அதுல அன்புதான் அதிகமா இருக்கும். நாங்க எல்லாரும் அப்படியே கட்டுப்படுவோம். அது இல்லாம கேமராவை எப்படிப் பயன்படுத்தி படம் எடுக்கணும்ன்னு சொல்லி கொடுப்பாரு' ன்னு சொல்லுவாங்க'' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கீதா லோக் சிங். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com