விதைகள்... விதைக்கப்பட வேண்டும்!

இளைஞர்கள் என்றாலே சமூக அக்கறையில்லாதவர்கள், பொறுப்பில்லாதவர்கள் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  
விதைகள்... விதைக்கப்பட வேண்டும்!

இளைஞர்கள் என்றாலே சமூக அக்கறையில்லாதவர்கள், பொறுப்பில்லாதவர்கள் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுடை நினைப்பைப்  பொய்யாக்கும்விதத்தில், எத்தனையோ இளைஞர்கள் சாதனைகள் பல புரிந்து வெற்றிகரமாக தங்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் விஷ்ணு வரதன்.

தகவல்தொழில்நுட்பத்துறையில் பி.டெக் படித்தவரான அவர்  "அக்கமை' என்ற ஓர் அமெரிக்க நிறுவனத்தில்  மூன்று ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார். 

2014 -இல் நாடு முழுவதும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி  அவரைக் கடுமையாகப் பாதித்து இருக்கிறது.  

""ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்காக  இரவும் பகலும் நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு படு மோசமான நிலையில் இருக்கிறார்கள்.  விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  அதனால் அந்த வேலையை விட்டுவிட்டேன்'' என்கிறார் விஷ்ணு வரதன். 

அதன் பிறகு அவர் என்ன செய்தார்? என்பதுதான் முக்கியமானது. தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து...

""அரசு  விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று பேசிக் கொண்டிருப்பதை விட,  நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பது சிறந்தது என்று நினைத்தேன். விவசாயிகளின் விளைபொருள்கள் அதைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று சேர்வதற்குள் பல இடைத்தரகர்களைச் சந்திக்கிறது.  விவசாயிகளிடம் பொருள்களை வாங்கி மொத்த வியாபாரிகளுக்கு அனுப்புபவர்கள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வணிகர்களுக்குத் தருபவர்கள், விவசாயிகளின் விளை பொருள்களை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் என பல குறுக்கீடுகள் உள்ளன.  இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தாம்.

இந்தநிலையை மாற்ற "இந்தியன் சூப்பர் ஹீரோஸ்' என்ற நிறுவனத்தை நான் தொடங்கினேன்.  இதற்காக தமிழ்நாட்டில் கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள  பல  விவசாயிகளையும் - சுமார் 800க்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்தேன்.  

அதன் பிறகு விவசாயிகளையும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் நேரடியாக  இணைக்கும் ஆன்லைன் சேவையைத் தொடங்கினேன்.  இதனால்  விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இடையில் உள்ள பல தரகர்கள் இல்லாமல் போனார்கள்.  நேரடியாகப் பொருள்களை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விலை குறைவாகக் கிடைக்கும். விவசாயிகளுக்கும் அதிக விலை கிடைக்கும்.  

அடுத்து, விளைபொருள்களை அப்படியே நேரடியாக விற்பதை விட,  அவற்றின் மதிப்பைக் கூட்டி  விற்பனை செய்தால் அதிக விலை கிடைக்கும் என்பதால் அதற்கான வழிகாட்டுதல்களை,  செய்முறைகளை விவசாயிகளுக்கு எங்களுடைய நிறுவனம் மூலமாகச் சொல்லிக் கொடுத்தோம்.  உதாரணமாக விவசாயி ஒரு தேங்காயை நேரடியாக விற்றால் ரூ.10 தான் கிடைக்கும். அதே தேங்காயைக் காய வைத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யாக மாற்றி விற்றால் அதிக விலை கிடைக்கும். இதனால் நிறைய விவசாயிகளுக்கு மரச்செக்குகள் அமைத்துக் கொடுக்கும் வேலைகளையும் செய்தோம். இதைப்போன்று பிற விளைபொருள்களுக்கு உரிய வழிகாட்டுதல்களைக் கொடுத்தோம்.  

விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியைத் தரிசாகப் போட்டுவிட்டு, அவர்களால் முடிந்த அளவுக்கு பயிர் செய்வார்கள்.  இதனால் அவர்களுக்கு லாபமில்லை.  அதேசமயம் விவசாயம் செய்யத் தெரிந்த, நிலமில்லாதவர்களும் அங்கே இருப்பார்கள்.  இந்தநிலையை மாற்ற  ஒரு திட்டத்தை நாங்கள் வகுத்தோம். விவசாயிகள் காலியாக வைத்திருக்கும் நிலத்தை பிறருக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பெறுவதற்கு ஏற்பாடு செய்தோம்.  வாடகைக்கு நிலத்தை எடுத்தவர்கள் அதில் விவசாயம் செய்து அதிலிருந்தும் அவர்களுக்கும் வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்தோம். 

என்றாலும் இதோடு நாங்கள் நின்றுவிடவில்லை. விவசாயிகள் சந்திக்கும் இன்னொரு பிரச்னை வானம் பொய்த்துவிடுவது.  இதற்கு மூல காரணம், மரங்களை நாம்  அதிக அளவில் வெட்டுவதுதான். மரங்களை வெட்டாதீர்கள் என்று சொல்வது ஒருபுறமிருக்க, மரங்களை வளர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம். 

நமது பள்ளி மாணவர்கள் எழுதப் பயன்படுத்தும் பென்சில்களைச் செய்ய நிறைய மரங்கள் பயன்படுகின்றன. உதாரணமாக 20 அடி உயரமுள்ள ஒரு மரத்தை வெட்டி அதிலிருந்து 2500 பென்சில்களைத் தயாரிக்க முடியும்.  உலக அளவில் 180 லட்சம் மரங்களை வெட்டி,  2000 கோடி பென்சில்களைத் தயாரிக்கிறார்கள்.  இந்தியா முழுக்க உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வளவு கோடி பென்சில்களைப் பயன்படுத்துவார்கள்? எத்தனை லட்சம் மரங்கள் இதற்காக வெட்டப்படுகின்றன? என பென்சிலுக்காக வெட்டப்படும் மரங்களைக் கணக்கிட்டால் தலைசுற்றும். அதுபோல நிறுவனங்களில் பயன்படுத்தும் காகிதங்களைச் செய்ய வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையும்  கணக்கில் அடங்காதது.

எனவே வெட்டப்படும் மரங்களை விட அதிக அளவில் மரங்களை நட வேண்டும். அதற்காக  விதைகளைப் புவியெங்கும் நாம் விதைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தபோது கிடைத்த விடைதான்,  காகிதத்தில் செய்யப்பட்ட பென்சில்கள், பேனாக்கள். இந்த பென்சில்களை, பேனாக்களைப் பயன்படுத்தி நாம் அவற்றைத் தூக்கியெறிந்ததும் அதில் நாங்கள் வைத்திருக்கும் விதைகள் மண்ணில் விழுந்து முளைக்கத் தொடங்குகின்றன.  

மரத்தால் செய்யப்பட்ட காகிதங்களுக்குப் பதிலாக பழைய பருத்தித்துணிகள் உட்பட  விரைவில் மக்கும் பல பொருள்களைக் கொண்டு காகிதம் செய்து, அதில் விசிட்டிங் கார்டு, திருமண அழைப்பிதழ்கள்,  பைகள், மராத்தான் பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் கையில்  கட்டிக் கொள்ளும் அட்டைகள், நோட்டு புத்தகங்கள் என நிறையப் பொருள்களைத் தயாரித்தோம்.  இதில் முக்கியமானது என்னவென்றால்,  இந்தக் காகிதத்தில் விதைகளையும் கலந்து செய்தோம். பயன்படுத்திய காகிதத்தைத் தூக்கிப் போட்டவுடன் அது விழுந்த இடத்தில் செடி ஒன்று முளைத்து நிற்கும். இவ்வாறு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். என்னுடைய இந்தப் பணியில் தொடக்கத்திலிருந்தே துணையாக இருந்து வருபவர் திவ்யா ஷெட்டி.  இருவரும் இணைந்தே  இவற்றைச் செய்து வருகிறோம்.   இதற்காக டங்ல்ஹஹ என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம். 

இங்கு தயாரிக்கப்படும் பொருள்களில் நாங்கள் இணைக்கும் விதைகளை விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்குகிறோம். இதனால் விதைகள் விதைக்கப்படாமல் வீணாகி அழிவதில்லை'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com