பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆணையிடுவோம்... நல்லதே நடக்க!

மிகப்பெரிய விஷயங்கள் உணர்ச்சி வேகத்தினால் செய்யப்படுபவை அல்ல; தொடர்ச்சியான சிறிய விஷயங்கள் ஒன்றிணைந்தே அவற்றைக் கொண்டு வருகின்றன.

News image
Updated On :12 நவம்பர் 2019, 4:12 am

கே.பி. மாரிக்குமார்

மிகப்பெரிய விஷயங்கள் உணர்ச்சி வேகத்தினால் செய்யப்படுபவை அல்ல; தொடர்ச்சியான சிறிய விஷயங்கள் ஒன்றிணைந்தே அவற்றைக் கொண்டு வருகின்றன.

- ஜார்ஜ் எலியட்

அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அலைக்கழிப்புகளால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும்   ஒரு சிலரே,  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அவர்களும் நல்ல பதவிகளை அடைகிறார்கள்.  ஏற்கனவே அரசு அலுவலகங்களில் அவ்வப்போது அவர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு  மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் மட்டும் நேர்மறையாகக்  கவனம் செலுத்தும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று அரசுப்பணியில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் திரைக்கு வந்து மிகப்பெரிய வணிக மற்றும் விமர்சன வெற்றியைப் பெற்ற "அசுரன்' என்னும் திரைப்படத்தில், “""படிச்சு பெரிய ஆளாகி, நல்ல பதவிக்கு வந்த பிறகு...  உனக்கு அடுத்தவன் செஞ்ச எந்த கெடுதலையும், நீ யாருக்கும் செய்யக் கூடாதுப்பா'' என்று ஒரு தந்தை தன் மகனுக்கு அறிவுரை சொல்வது போல ஒரு சிறப்பான வசனம் வரும். அரசுப் பதவியும், அதிகாரமும் சரியான மனிதர்களின் கையில் கிடைக்குமானால், அது எத்தனை நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு நாம் பல சான்றுகளை பட்டியலிட முடியும்.

அதிகாரி ஒருவருக்கு, அவரது பணி நிமித்தமான ஒரு பயணத்தின்  போது ஒரு தெருவில் இரு வகையான உரையாடலை கேட்க நேர்ந்தது. “

""சொன்ன நேரத்துல வாடகையை கொடுக்குறதில்ல...  அதுவும் எத்தனை மாசமா இழுத்தடிக்கிறீங்க. உங்க கஷ்ட காலத்தை சொல்லி என்னை ஏமாத்தாதீங்க. உடனே வீட்டை காலி பண்ணுங்க. நாங்க கஷ்டப்பட்டப்ப எங்களுக்கு யாரு உதவி செஞ்சா?'' - இது முதலாவது.

""வாடகை கொடுக்கிறதுல முன்ன பின்ன ஆகத்தான்தம்பி செய்யும். எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்குமா? வாடகைய அடுத்த மாசம் சேர்த்துக் கொடுங்க தம்பி... நான் சமாளிச்சுக்கிறேன்.  இதுக்குலாம் வீட்டை காலி பண்றதப் பத்தி பேசுறதுல அர்த்தமில்ல'' -  இது இரண்டாவது உரையாடல்.

ஒரே மாதிரியான சம்பவம். ஆனால், இருவேறு தாக்கங்கள், அனுபவங்கள். மனிதர்களில், மக்கள் பணியாற்ற அரசுப் பதவிகளுக்கு வரும் இளைஞர்களில் எல்லாரும் ஓர்  அனுபவத்தை, நாம் மேலே பார்த்த இரண்டாவது வகையான உரையாடலில் இருக்கும் நேர்மறையான, மனிதம் பேணுகிற எண்ணமாக  மாற்றி செயல்படுத்தினால்,  மக்களிடையே ஏழ்மை, வறுமை என்று எந்தப் பிணிகளும்,  பிணக்குகளும் இந்த தேசத்தில் இருக்காது.

காந்தியவாதி மற்றும் வினோபாவின் விசுவாசமான சீடர், பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனிடம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்தது.  அம்மாவும், அவரது வாழ்க்கைத் துணையான ஜெகந்நாதனும் இணைந்து திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் உருவாக்கிய "லாஃப்ட்டி' என்கிற நிலமற்றவர்களுக்கான அமைப்பின் மூலம் இதுவரை 12,000-த்திற்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு, நிலச்சுவான்தார்கள் மற்றும் அரசிடமிருந்து தலா இரண்டு ஏக்கர் வீதம் நிலத்தைப் பெற்றுக் கொடுத்து அவர்களை நில உடமையாளர்களாக மாற்றியிருக்கிறார்கள். இப்பொழுது கடலோர  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் "கஜா' புயலால் வீடிழந்தவர்களுக்கு "கான்க்ரீட்' வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் வெகுமுனைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் அந்த அம்மாவுக்கு வயது 94 மட்டுமே. இந்த 94 வயது போராளி, என்னிடம் கடந்த அக்டோபர் 5 அன்று சொன்ன வார்த்தைகள்: 

""உடம்பு ஆட்டம் போடுது... வயசாயிட்டதால. சரியான "நேரத்திற்கு உணவு, நேரத்திற்கு மருந்து, நேரத்திற்கு ஓய்வு'ன்னு இருக்கிறதால எல்லாமே சரியா நடந்துக்கிட்டிருக்கு. எனக்கு உடம்புக்கு வேற வியாதியெல்லாம் ஒண்ணுமில்ல. என்ன...  இந்த நாட்டுல ஒரு குடிசை வீடு, ஒரு ஓட்டு வீடு கூட  இல்லாம ஆக்கிட்டேன்னா,  கொஞ்சம் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்'' என்றார். அவரின்  அந்த வார்த்தைகள் இன்றும் இலக்கற்று, சோம்பலில் திளைத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஓர்  உற்சாக  பானம், சர்வரோக நிவாரணி மற்றும் அருமருந்து.

சமயங்களில் அரசாங்கமே கூட செய்யத் தயங்குகிற பல சீரிய திட்டங்களை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுத்து செல்கின்றபோது அத்திட்டங்களைச் செயல்படுத்த, சட்டப்பூர்வமானதாக மாற்ற,  அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வழிகாட்டுதல் மற்றும் துணையின்றி சாத்தியமாகாது. அந்நேரங்களில் பல அரசு ஊழியர்கள்,  கோரிக்கையோடு வந்திருப்பவர் யார், அவரது நோக்கம் என்ன, இதனால் எத்தனை பேருக்கு நன்மை என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், அரசு இயந்திரங்களுக்கே உண்டான மெத்தனமான "சிவப்பு நாடாத்தன' (Red Tapism)  மனநிலையில் பொருந்தாத சட்டத் திட்டங்களைக் கூறி "லாஃப்ட்டி' போன்ற நிறுவனத்தின் ஊழியர்களை, ஏன், அந்த அம்மா உட்பட பலரை,  காத்திருக்கச் செய்து அலைக்கழிப்பார்கள். இதே சூழலில், இந்த தேசம் மற்றும் மக்களின் நிலையைப் புரிந்து அக்கறைக்கொண்ட சில ஊழியர்கள்- அரசு அதிகாரிகள்-   சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்தால் , இந்த மக்கள் நலத் திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்று துடிப்போடு, இரவு பகல் பார்க்காமல் பணியாற்றி அம்மாவின் திட்டங்களுக்கு உதவியிருக்கின்றனர். அத்தகைய தரமான, நல்ல, தகுதியான அரசு அதிகாரிகளை நமக்கு முன்மாதிரிகளாக நம் மனதில் நிறுத்தி, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பலருக்கு "நன்மை பயக்கும்' திட்டங்களை செயல்படுத்த "ஆணையிடும்' அரசு ஊழியராக நம் கடமையாற்றுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.