ஐஐடி - ரோபார் உருவாக்கிய அறை... கரோனா காற்றே... வெளியே செல்!
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பிறரின் அருகில் செல்லாமல் விலகி இருக்கச் சொல்கிறார்கள். பொது இடங்களில் கூட்டமாகச் செல்லாமல் வீடுகளில் தனித்திருக்கச் சொல்கிறார்கள்.


கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பிறரின் அருகில் செல்லாமல் விலகி இருக்கச் சொல்கிறார்கள். பொது இடங்களில் கூட்டமாகச் செல்லாமல் வீடுகளில் தனித்திருக்கச் சொல்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடங்களில் வேலை செய்பவர்கள், பிற பணியாளர்கள் என்ன செய்வது? நோயாளிகளின் அருகே செல்லாமல் எப்படி அவர்கள் மருத்துவப் பணிகளைச் செய்ய முடியும்?
நோயாளிகளைச் சோதிப்பதாகட்டும், அவர்களின் உடல் நிலைக்கேற்ற மருந்துகளை அவர்களுக்குத் தருவதாகட்டும், நோயாளிகளுக்குத் தேவையான உணவு கொடுத்து, கழிவுகளை நீக்கி அவர்களைப் பராமரிப்பதாகட்டும் எல்லாப் பணிகளையும் நோயாளிகளுக்கு அருகில் செல்லாமல் செய்யவே முடியாது.
மருத்துவப் பணி செய்பவர்களுக்கு சாதாரண மனிதர்களை விட அதிகமான பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவ்வாறான ஒரு பாதுகாப்பைத் தருவதற்காக - மருத்துவப் பணி செய்பவர்களுக்கு உதவும்விதமாக பஞ்சாப் மாநிலம் ரூப் நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் "எதிர்நிலை அழுத்த அறைகளை' (NEGATIVE PRESSUREROOMS) உருவாக்கியிருக்
கிறார்கள்.
ஐஐடி - ரோபாரின் (ரூப் நகர்) பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய குழு இதை உருவாக்கியிருக்கிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வார்டுகளிலும், பரிசோதனைக் கூடங்களிலும் பயன்படுத்துவதற்காக இந்த எதிர்நிலை அழுத்த அறைகளை உருவாக்கியதாக இதை உருவாக்கிய குழுவின் தலைவர் தீரஜ் குமார் மகாஜன் தெரிவித்திருக்கிறார்.
""தென்கொரியாவில் கரோனா வைரஸ் பெரிய அளவில் பரவாமல் தடுக்க இந்த எதிர்நிலை அழுத்த அறைகள் பயன்பட்டன. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சுவிடும்போதும், தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் கிருமிகள் காற்றில் கலந்து, அங்கேயே தங்கிவிடாமல் இந்த அறை தடுக்கிறது.
அந்தக் காற்றைச் சுவாசிக்கும் பிறருக்கும் வைரஸ் தொற்றிக் கொள்வதைத் தடுக்க இந்த அறை உதவுகிறது. கிருமிகள் நிறைந்த காற்றை உறிஞ்சி வெளித்தள்ளுகிறது. அதற்காகவே இந்த எதிர்நிலை அழுத்த அறைகளை உருவாக்கியுள்ளோம்'' என்கிறார் மகாஜன்.
இந்த எதிர்நிலை அழுத்த அறையில் உள்ள காற்று வெளித்தள்ளப்படும் முறை வித்தியாசமானது. நல்ல காற்று அறைக்குள் வரும். வைரஸ் நிரம்பிய கெட்ட காற்று வெளியே தள்ளப்படும்.
""தொடர்ந்து இந்த அறையில் உள்ள கெட்ட காற்று வெளித்தள்ளப்படுவதும், நல்ல காற்று உள்ளே வருவதுமாக இருக்கும்போது, நோயாளியுடன் தொடர்பில் இருக்கிற மருத்துவப் பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது பெரும் அளவில் தவிர்க்கப்படும்'' என்கிறார் மகாஜன்.
ஒன்பதடி அகலம், ஒன்பதடி நீளம், எட்டடி உயரம் உள்ள இந்த அறையை உருவாக்க 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே போதும். இந்த அறையில் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உள்ளன. அறையின் சுவர்கள் எல்லாம் நல்ல தரமான பிளாஸ்டிக் சீட்களால் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த அறையிலிருந்து காற்று வெளியேறும் மற்றும் காற்று உள்ளே வரும் வழிகளைத் தவிர இதர பகுதிகள் எல்லாம் முற்றிலும் நன்றாக மூடப்பட்டிருக்கின்றன. எந்தவிதமான கசிவும் இல்லை.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து வெளியே வரும் வைரஸ்கள் காற்றில் கலந்துவிடுகின்றன. அந்தக் காற்றை அப்படியே இந்த அறையில் இருந்து வெளித்தள்ளினால் அறையின் வெளிப்புறத்தில் உள்ள காற்றில் வைரஸ் பரவாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் இந்த எதிர்நிலை அழுத்த அறையில் இருந்து வெளித்தள்ளப்படும் காற்று முற்றிலும் வைரஸ் நீக்கம் செய்யப்படுகிறது.

இதை உருவாக்குவதற்கான திட்டத்தை ஐஐடி- ரோபார், மத்திய அரசின் மனித ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறைக்கு (MHRD) அனுப்பி வைத்துள்ளது.
இந்த அறைகளை ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிறையப் பொருத்தினால், பெரிய அளவுக்கு கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மருத்துவர்கள், செவியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தப்பிக்க முடியும் என்ற குறிப்புடன் இதை அனுப்பி வைத்துள்ளது.
மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் தனது சுட்டுரைப் பக்கத்தில் பெரிய அளவுக்கு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் இந்த எதிர்நிலை அழுத்த அறையை உருவாக்கிய ஐஐடி - ரோபார் குழுவைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...