1960 - களின் பிற்பகுதியில், இந்தியா பல அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கான மொத்த மருந்துகளுக்கு இறக்குமதியை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தது. மருந்து இறக்குமதியினால் அந்நியச் செலாவணி அதிகமாக குறைந்து நமது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதித்தது. தயாரிப்பு காப்புரிமைச் சட்ட முறை 20 -ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முதன்மையாக தங்கள் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளின் நலனுக்காக நிறுவப்பட்டது. இதனால் இந்திய உற்பத்தியாளர்கள் நம் மக்களுக்காக மருந்து தயாரிப்பதைத் தடைசெய்தார்கள். அதோடு நமக்கு அந்த மருந்துகளை உற்பத்தி செய்யும்திறனும், திறமையும் இல்லை என்ற நிலை. இதன் விளைவாக, மருந்து உற்பத்தித்துறையில் உலக நிறுவனங்களோடு போட்டியும்இல்லாததால், மருந்தின் விலை மிக அதிகமானது. இன்றைக்கும் அதே நிலைமைதான்.
நகரங்களைத் தாண்டி கிராமங்களுக்கு மருத்துவம் சென்றடையவில்லை. இதன் விளைவாக, 1960 -களில் இந்தியா தனது ~ 55 கோடி இந்திய மக்களுக்கு மலிவு விலை மருந்து வழங்க முடியவில்லை.
1972 - ஆம் ஆண்டில் காப்புரிமைச் சட்டத்தை அரசாங்கம் திருத்தி (காப்புரிமைச் சட்டம் - 1970), மருந்துகளுக்கான உலக தயாரிப்பு காப்புரிமையை இந்தியாவில் ரத்து செய்தது. 1972 - க்குப் பிறகு தான்இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் திரும்பக் கண்டறியும் பொறியியல் (Reverse Engineering) நுட்பத்தின் மூலம் மருந்து உற்பத்தி இந்தியாவில் ஊக்கப்படுத்தப்பட்டது. மேலும் மலிவான, ஆனால் உயர்தர மொத்த மருந்துகளைத் தயாரிப்பதற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கி, பின்னர் பல்வேறு மருந்து உருவாக்கும் வழிமுறைகளை வடிவமைப்பதில் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தேர்ச்சி பெற்றனர். அது மட்டுமல்லாமல், 1950-60 -களில் இறக்குமதி சார்ந்த மருந்து தொழில்துறையிலிருந்து, ஒவ்வொரு நாட்டிற்கும் தரமான மருந்தை ஏற்றுமதி செய்வதன் மூலம், அசல் விலையின் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான விலையில், பொதுவான விலைக்கான மருந்து ஏற்றுமதியில் உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது மற்றும் குறைந்த விலையில் உயர்தர மருத்துவத்திற்கான உலகளாவிய நற்பெயரைப் பெற்றது இந்தியா. இன்று, இந்திய மருந்துத் தொழில் உலகம் முழுவதும் பொது சுகாதாரத்தை, மருத்துவத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
உலகில் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா உருவாகியிருக்கிறது. மருந்து உற்பத்தியில் உலகின் முன்னனி நாடாக மாறிய இந்தியாவிற்கு அதற்கான முழுமையான விதை போடப்பட்ட ஆண்டு 1972.
ஆனால் புதிய மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலை எங்கே இருக்கிறது? இது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. காரணம், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்தியா மதிப்பளிக்காததினால் ஏற்பட்ட நிலையினால், நாம் அறிவியல் கண்டுபிடிப்பில் பின்தங்கி இருக்கிறோம். மொத்த மருந்துகள் மற்றும் மருந்து உருவாக்கும் சூத்திரங்களுக்கான உற்பத்தி தொழில்நுட்பத்தை உருவாக்க, தலைகீழ் பொறியியலில் (Reverse Engineering) இந்தியா சிறந்து விளங்க முடியும் என்றாலும், புதிய மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா போதுமானதாக செய்ய முடியவில்லை.
அலோபதி மருந்தைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? பல்வேறு நிலைகளைத் தாண்டிதான் கண்டுபிடிக்கப்பட்ட அலோபதி மருந்து சந்தைக்கு வரவேண்டும். இதில் மருந்து கண்டுபிடிக்க (Discovery) நீண்ட காலம் ஆகிறது. அதாவது 10 முதல் 14 ஆண்டுகள், அடுத்து இன் விட்ரோ (In-vitro) ஆய்வு, முன்கூட்டிய மருத்துவ ஆய்வு (Pre-clinical study) மற்றும் மருத்துவ ஆய்வு (Clinical Study in Phase 1 - 4). ஓர் அலோபதி மருந்தைக் கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான வேதியியல் செயற்கை மூலக்கூறுகளின் கலவையில் இருந்து அல்லது ஹெர்பல் மூலக்கூறுகளின் கலவையில் இருந்து ஒற்றை மூலக்கூறைப் பிரித்து எடுத்து, அது அந்த வியாதியை குணப்படுத்தக்கூடிய மூலக்கூறாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடிப்பது (Discovery Stage) தான் மருந்தைக் கண்டுபிடிக்கும் முதல் முறை.
வியாதியைக் குணப்படுத்தும் ஒற்றை மூலக்கூறை கண்டுபிடித்த பின்பு இதை இன்-விட்ரோ முறைப்படி இது கிருமியை அழித்து வியாதியைக் குணப்படுத்துமா என்று ஆய்வகத்தில் வைத்து நடைபெறுவதை (Pre-Clinical Stage) முன்கூட்டிய மருத்துவ ஆய்வு என்கிறார்கள். இதற்கு அடுத்து, விலங்கு ஆய்வு (Animal Study), இன்-வைவோ (In-Vivo) என்று சொல்கிறார்கள்; இந்த மருந்தை எலி, எலிகள், கினிப் பன்றிகள், நாய்கள் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களுக்கு கொடுக்கும் மருந்தின் அளவைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்து அதில் விலங்கிற்கு பாதுகாப்பும் (Safety), மருந்தின் செயலாக்க தன்மையும் (Efficacy) சரியாக இருக்கிறதா என்று விலங்குகளுக்கு கொடுத்துப் பார்ப்பது.
இந்த இரண்டு Pre-Clinical Study ஆய்வக நிலைக்கு முந்தைய நிலை ஆராய்ச்சி முடிந்தவுடன் தான் முதல் நிலை (Phase-1 - Safety) ஆய்வு ஆரம்பிக்கப்படுகிறது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட அலோபதி மருந்தை நல்ல உடல் நலம் உள்ள தன்னார்வலர்களுக்கு கொடுத்து அவர்களது உடல் நலத்தின் பாதுகாப்பு (Safety) எப்படி இருக்கிறது, வேறு ஏதும் பக்க விளைவுகளை உருவாக்குகிறதா என்று ஆய்வு செய்வது. இதை அடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆய்வு. இதில் அலோபதி மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்து நோயின் தன்மையில் இருந்து அவர்களை இந்த மருந்து எவ்வாறு காக்கிறது (Efficacy), அவர்களுக்கு உடல் பாதுகாப்பில் எப்படி செயல்படுகிறது (Safety), வேறு ஏதும் பக்கவிளைவுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது. இரண்டாம் நிலை ஆய்வில் (Phase-2 - Safety and Efficacy) 100 முதல் 300 வரையிலான நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்யப்படும். இதை அடுத்து மூன்றாம் நிலை ஆய்வில் (Phase-3 - Safety and Efficacy), இதில் 1000 முதல் 3000 வரையிலான நோயாளிகளுக்கு அலோபதி மருந்தை கொடுத்து ஆய்வு செய்யப்படும்.
இதை அடுத்து நான்காம் நிலை ஆய்வு (Phase-2 - Safety and Efficacy from Society after launch) மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று அறிவித்து மருத்துவர்களுக்குக் கொடுத்து நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் சந்தைப்படுத்துதலுக்குப்பின், இது சமூகத்தில் எவ்வாறு பாதுகாப்பையும், நோய் குறைப்பு அல்லது அழிப்பில் செயல்படுகிறது என்று செய்யப்படும் ஆய்வு.
இந்த 4 நிலை ஆய்வுகளை முடித்து ஓர் அலோபதி மருந்து வெற்றிகரமாக சந்தைக்கு கொண்டுவரப்படும். ஓர் அலோபதி மருந்து கண்டுபிடிப்பு என்பது வெறும் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிபுணத்துவம், புது மருந்து கண்டறியும் திறன் அல்லது படைப்பாற்றல் மட்டும் பற்றியது அல்ல, சுமார் 10-14 ஆண்டுகளில் சுமார் ரூ 4,000-ரூ.6,000 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. எனவே மருத்து கண்டுபிடிக்கும் மேற்கண்ட அனைத்துப்படி நிலைகளிலும் எந்த கட்டத்திலும் தோல்வி ஏற்படலாம். இதனால் முதலீட்டு இழப்பு ஏற்படும் என்ற மிகப்பெரிய ஆபத்து உள்ளது.
அனைத்து முன்கூட்டிய மற்றும் மருத்துவ ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்து, மக்களுக்கு பக்கவிளைவுகள் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட மருந்துகள் கூட, பல ஆண்டுகள் மருத்துவ பயன்பாட்டிற்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களால் திரும்பப் பெறப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவிலும் பிற பிராந்தியங்களிலும் சுமார் 46 நாடுகளில் அறுபதுகளில் தாலிடோமைடு மருந்து தொடங்கப்பட்டது. இது காலை வியாதிக்காக (Morning Sickness) பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இது டெரடோஜெனிக் என்று கண்டறியப்பட்டது. அதாவது பிறப்புக் குறைபாட்டை ஏற்படுத்தும் நோயை உருவாக்கும் டெரடோஜெனிக் என்று கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஏற்கெனவே ஃபோகோமேலியாவுடன் பிறந்தனர் (கைகள் அல்லது கால்கள் தண்டுக்கு அருகில் இணைக்கப்பட்டிருக்கும் பிறவிக் குறைபாடு, கைகால்கள் மிகவும் வளர்ச்சியடையாதவை அல்லது இல்லாதிருத்தல்), இதன் விளைவாக குறுகிய கை, கால்கள் அல்லது அவை இல்லாதிருத்தல். இந்த தோல்வியை தாங்கும் முதலீட்டு வலிமை அந்த மருந்து கண்டுபிடிப்பாளர்களுக்கு இருக்க வேண்டும்.
இந்த மருந்தைக் கண்டுபிடித்தவர்களின் (Intellectual Patent Rights) கண்டுபிடிப்பு சொத்து காப்புரிமை அடுத்த 20 ஆண்டுகளுக்கு இருக்கும். இதை யார், எந்த நாடு உற்பத்தி செய்தாலும் அவர்களுக்கு ராயல்டி தொகை 20 ஆண்டுகாலம் கிடைக்கும். 20 ஆண்டுகளுக்கு பிறகு இது காப்புரிமையற்ற பொது மருந்தாக மாறுகிறது. இந்தியாவில் இதுவரை புதுமருந்து கண்டுபிடிப்பு காப்புரிமை என்பது கிட்டத்தட்ட இல்லை அல்லது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று தான் சொல்ல முடியும். ஆனால் மற்ற நாடுகள் கண்டுபிடித்த மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் தான் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 10% க்கும் குறைவாக உள்ள ஜப்பானால் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடிந்தபோது, 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா உலகம் முழுவதும் ஒரு தொகுதி பஸ்டர் மருந்துகளைக் கூட உருவாக்கி அறிமுகப்படுத்த முடியவில்லை.
ஜப்பானால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும் என்று அப்துல் கலாம் நம்பினார். அதனால் தான் "இந்தியா 2020'-இல் இதற்கான திட்டத்தைக் கொடுத்தார். இதை செயல்படுத்தும் அரசு தான் நமக்கு வாய்க்கவில்லை. ஆனால் இது உலகெங்கிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே விளையாடும் விளையாட்டாக மாறியுள்ளது.
புது மருந்து கண்டுபிடிப்புகள் வெறும் தனிமனித முதலீட்டில் மட்டும் செய்து விட முடியாது. இதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. அனைத்து நிலைகளிலும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஆராய்ச்சிக்கேற்ற வளர்ச்சிக்கொள்கை, முதலீடு, தோல்வியைத் தாங்கி நிற்க அரசின் உதவி போன்ற கொள்கை நிலைப்பாடுகள்தான் மிகவும் முக்கியம். புது மருந்து கண்டுபிடிப்பிற்கு, அதன் ஆராய்ச்சிக்கு இந்தியாவில் இதுவரை எவ்வித ஊக்கமும், ஆக்கமும் கொடுக்கப்படவில்லை.
ஓர் உயிரில்லா வைரஸ், ஒரு செல் பேக்டிரியா, பல் செல் பூஞ்சை நோய் கிருமிகள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொண்டு, நோய் தடுப்பு மருந்துகளை எதிர்த்து எதிர்ப்புச் சக்திகளை உருவாக்கி பல்கி பெருகி கொள்ளை நோயாக மாறி மக்களை உலகெங்கும் பரவி கொன்றொழித்து வருகிறது. அது ஒவ்வொரு நொடியும் சிந்திக்கிறது தனது எண்ணிக்கையைப் பெருக்க. ஆனால் இப்படிப்பட்ட நோய் தொற்று உயிர் போரை எதிர்த்து வருங்காலங்களில் போராட மனிதர்களாகிய நாம் நம்மை தயார் படுத்திக்கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. உயிரில்லா வைரஸூக்கு இருக்கும் வலிமை, அதை எதிர்த்து போராடும் உயிருள்ள மனிதர்களால் நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கு இருக்கிறதா? கிருமி சிந்தித்தால் அழிவு, மனிதன் சிந்தித்தால் வாழ்வு.
சார்ஸ் வைரஸ் தன்னை புதுப்பித்துக்கொண்டு (Mutated Strain) பிறழ்ந்த திரிபாக மாறி SARS-CoV-2 வைரஸாக பிறந்து இன்றைக்கு 15 ஏப்ரல் 2020- இல் உலகில் 20.26 லட்சம் பேரை பாதித்து, 1.29 லட்சம் பேரை கொன்று, 5 லட்சம் பேர் இதிலிருந்து மீண்டெழுந்திருக்கிறார்கள். இந்தியாவில் 11,555 பேரை பாதித்து, 405 பேரை இழந்து, 1,432 பேர் மீண்டெழுந்திருக்கிறார்கள். சில நாடுகளுக்கு இந்த வைரûஸக் கட்டுப்படுத்தும் ஆளுமையும், அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி பலமும் இருப்பதால் நோய் எதிர்ப்பு மற்றும் மருந்தையும், நோய் தொற்றை சோதனைமூலம் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை கொடுத்து மக்களைக் காப்பதிலும், நோய்த் தொற்று பரவôமல் தடுப்பதிலும் முன்னனியில் இருக்கிறோம் என்று தென் கொரியாவும், ஜப்பானும், சீனாவும் இன்றைக்கு நிரூபித்திருக்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு, நோய் தடுப்பு, நோய் அழிப்பு மருந்துகளை, நோய் கண்டறியும் சோதனை உபகரணங்கள், மருத்துவ மேலாண்மை உபகரணங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க அரசு அதிக நிதியை ஒதுக்கி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது முதல் தேவை. மருத்துவ ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் வந்தால் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்ற உடனடி ஆட்சிமுறை, தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், பொருளாதார உதவியோடு விரைந்து செயலாற்றும் தலைமைக்கு உடனடி தேவை இருக்கிறது என்பதை இந்தியா உணரவேண்டும்.
ஒரு தனியார் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய மருந்தால், அந்த ஆய்வகத்தால் மட்டும், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கணிக்க முடியாது. இதை உருவாக்கி தோல்வியில் இருந்து வெற்றிபெற வலுவான நிதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட முதலீடுகள் செய்து, தோல்வியைத் தாண்டி நிற்கும் சக்தியுள்ள தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இந்திய மருந்து ஆராய்ச்சி மற்றும்
உற்பத்தி நிறுவனங்கள் எதுவும் இத்தகைய அதிக ஆபத்துள்ள நீண்ட கால மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் அளவுக்கு நிதி ரீதியாக வலுவாக இல்லை.
இந்த அலோபதி மருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிற்கே நிதி ஒதுக்காத இந்தியா எப்படி சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கும்? எனவே தான் இந்தியா அரசு நோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க ஒருங்கிணைந்த மருத்துக் கொள்கையை அறிவித்து, பொது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவி அதற்கு அதிக முதலீடு செய்து, உலகை அச்சுறுத்தும் நோய்த் தொற்று கிருமிகளை ஒழிக்க உதவ வேண்டும். அடிப்படை வாழ்வியல் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும், மூலக்கூறு உடலியல், பயோ டெக்னாலஜி துறை, மரபணு பொறியியல், பயோ மெடிக்கல் ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கி, அதோடு சேர்த்து நமது பாரம்பரிய சித்த, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் நிதி ஒதுக்கி இவை அனைத்தையும் சேர்ந்து ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தை ஒழிக்கும் நோய்த் தொற்று கிருமிகளுக்கு எதிரான போரை நாம் தொடங்கமுடியும்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


