மென்பொருள் துறையிலிருந்து விவசாயத்துக்கு!
கிராமத்து விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்களைக் கட்ட முடியாமல் விவசாயத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி சென்று, கிடைக்கும் வேலையில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டி வரும் இன்றையச் சூழலில்


கிராமத்து விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்களைக் கட்ட முடியாமல் விவசாயத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி சென்று, கிடைக்கும் வேலையில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டி வரும் இன்றையச் சூழலில் மென்பொருள் துறையை விட்டு வெளியேறி ஆர்கானிக் விவசாயத்தில் புகுந்து அசத்தி வருகிறார் பொறியாளர் ஒருவர்.
பெங்களூருவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மாண்டியாவைச் சேர்ந்தவர் மதுசந்தன். பொறியியல் பட்டம் பெற்று கலிபோர்னியாவில் மென்பொருள் துறையில் கைநிறைய ஊதியத்துடன் பணியாற்றி வந்தார். மேலும், ஆட்டோமேடட் சாஃப்டுவேர் டெஸ்டிங் சொல்யூஷன்களை வழங்கி வந்த நிறுவனத்திற்கு இணை நிறுவனராகவும் அவர் இருந்தார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், கலிபோர்னியாவில் பணியில் இருந்தாலும் கூட மாண்டியாவில் உள்ள விவசாயிகளின் நிலையை நாள்தோறும் அறிந்து வருவதில் ஆர்வம் காட்டி வந்தார். விவசாயிகள் பலர் போதிய வருமானம் இன்றி விவசாயத்தை விட்டு வெளியேறி வரும் செய்தி அவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனால் தனது மென்பொருள் பணியிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விலகி தனது சொந்த பூமியானமாண்டியாவிற்கு வந்தார்.
மாண்டியாவிலிருந்த பல விவசாயிகள் வழக்கமானவிவசாயத்தை விட்டு மாறி ஆர்கானிக் விவசாயத்தை கையில் எடுத்திருந்தனர். ஆனாலும் கூட வழக்கமான முறையிலேயே அவர்களது விவசாயம் இருந்தது. புதிய வடிவங்களைப் பயன்படுத்தாமல் பழைய முறையிலேயே அவர்களின் விவசாயம் இருந்தது. இருந்தாலும் விவசாயத்தின் மூலம் விளைச்சலும் இருந்தது. இருப்பினும் முறையான சந்தை வணிகமும், போதிய தகவல் தொடர்பும் இல்லாததால் விவசாயிகளுக்கு குறைலான லாபமே கிடைத்து வந்தது.
இதைத் தெரிந்து கொண்ட மதுசந்தன், விவசாயத்தில்ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்து அவர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதியை திரட்டி, "ஆர்கானிக் விவசாயிகள் கூட்டுறவு சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதை முறையாகவும் பதிவு செய்தார். இதன் மூலம் 200 - க்கும் மேற்பட்ட ஆர்கானிக் விவசாயிகளை ஒன்றிணைத்தார். தொடர் முயற்சிகளை மேற்கொண்டு விவசாயிகள் தங்களது விளைச்சலை நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில் "ஆர்கானிக் மாண்டியா'-வை நிறுவினார்.
""விவசாயிகள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்களின் உற்பத்திக்கு உரிய லாபம் கிடைக்கும். விவசாயி ஒருவரின் உழைப்பின் மதிப்பை ஒரு வாடிக்கையாளரும், வாடிக்கையாளரின் தேவையை விவசாயியும் புரிந்துகொண்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்பதால், அத்தகைய சூழ்நிலையை உருவாக்க சிந்தித்தேன். அப்படி உருவானதுதான் ஆர்கானிக் மாண்டியா.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள் ஆர்கானிக் மாண்டியாவில் நிறுத்தி வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அப்பகுதியில் ஆர்கானிக் மாண்டியாவை ஆரம்பித்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு மக்கள் ஆர்கானிக் மாண்டியா கடைக்கு வரத் தொடங்கினர். ஆர்கானிக் விவசாயிகளையும், வாடிக்கையாளர்களையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். ஆர்கானிக் உணவிற்கு மாறுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் ஆர்கானிக் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்பதால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
முக்கியமான சமயத்தில் வேலைக்கு ஆள்கள் கிடைக்காத நிலையால் 20 சதவீதத்திற்கும் மேலான விளைச்சலை விவசாயிகள் இழந்து வருகின்றனர். இதை தவிர்க்க வியர்வை தானமளிக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கினோம். இதுகுறித்த தகவலை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தோம். விவசாயத்தை விரும்புபவர்கள், அல்லது வார இறுதி நாள்களில் ஓய்வாக இருப்பவர்கள் இதில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்திருந்தோம். முதல் முயற்சியாக விவசாயி ஒருவரின் நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சாகுபடியை வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் செய்வதற்கான பணம் அந்த விவசாயியிடம் இல்லை. எனவே, வியர்வை தானம் செய்ய விரும்பும் விவசாய ஆர்வலர்கள் உதவி செய்யலாம் என சமூக ஊடகங்களில் தெரிவித்தோம். அதன் மூலம் 24 தன்னார்வலர்கள் ஒன்று திரண்டு அரை நாளில் வேலையை முடித்தனர். இந்த பிரசாரத்தின் மூலம் தற்போது 1000 விவசாய ஆர்வலர்கள் ஆர்கானிக் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அடுத்ததாக ஆர்கானிக் விவசாயத்தில் நாட்டம் கொண்டவர்கள் குறிப்பிட்ட தொகையை நில உரிமையாளரிடம் கொடுத்து குறிப்பிட்ட மாதங்களுக்கு விவசாயம் செய்யலாம். சாகுபடி வந்தவுடன் அதை ஆர்கானிக் மாண்டியாவிற்கு விற்கலாம் அல்லது அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் ஆர்கானிக் விவசாயிகளுக்கு தொடர் வருமானம் உறுதிசெய்யப்படுவதுடன் நகர்புற மக்கள் ஆர்கானிக் விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டவும் வழி ஏற்பட்டு வருகிறது'' என்கிறார் மதுசந்தன்.
""எங்களின் கூட்டுறவு மையத்தில் 500 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். எல்லோரும் இணைந்து 200 ஏக்கர் நிலத்தில் அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உடல் நலனிற்கான பொருள்கள், பானங்கள், மசாலாக்கள் உள்ளிட்ட 70 வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறோம். நான்கு மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கான பொருட்கள் 999 ரூபாய், 1,499 ரூபாய் மற்றும் 1,999 ரூபாய் என பேக் செய்யப்பட்டு நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருவதால் ஆர்கானிக் பொருள்களை மக்கள் விரும்பி வாங்க தொடங்கி விட்டனர். வரும் ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆர்கானிக் மாண்டியாவின் வாடிக்கையாளர்களாக மாற்றி ரூ. 30 கோடி வருவாய் ஈட்டும் பணியை தொடங்கியுள்ளோம்.
இப்போது, ஆர்கானிக் விவசாயிகள் நேரடியாக ஆர்கானிக் மாண்டியாவிற்கு வந்து பொருள்களை கொடுத்து உரிய விலையை உடனடியாக பெற்று செல்லும் நிலை உருவாகிவிட்டது. எனது நோக்கமான தரகரின்றி , லாபம் நேரடியாக விவசாயிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதும் நிறைவேறிவிட்டது'' என்கிறார் மகிழ்ச்சியாக மதுசந்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...