யூடியூப் சாட் ஹார்லி வெற்றியாளர்கள்!

இரண்டு வயது குழந்தைகள் முதல் எண்பது வயதான முதியோர் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் இணைய ஊடகம் யூடியூப். கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகமாக உலகெங்கும் மக்கள் பயன்படுத்தும் ஊடகம்
யூடியூப் சாட் ஹார்லி வெற்றியாளர்கள்!


இரண்டு வயது குழந்தைகள் முதல் எண்பது வயதான முதியோர் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் இணைய ஊடகம் யூடியூப். கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகமாக உலகெங்கும் மக்கள் பயன்படுத்தும் ஊடகம் இதுவே என்கிறது புள்ளிவிவரங்கள். உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் 76 மொழிகளில் யூடியூப் காணொலிகளைப் பார்த்து ரசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 500 மணி நேரத்திற்கும் மேல் ஓடக் கூடிய காணொலிகளை இதில் புதிதாக பதிவேற்றுகிறார்கள். ஒரு கோடி செல்பேசிகளில் யூடியூபை அன்றாடம் மக்கள் பார்க்கிறார்கள்.

"நீங்களே ஒளிபரப்புங்கள்' என்பதே இதன் பெயருக்கு கீழே உள்ள பொருள் பொதிந்த சொற்கள். யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள அனைத்து காணொலிகளையும் ஒருவர் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒருவருக்கு 4,600 ஆண்டுகள் வாழ்நாள் தேவைப்படும்.

யூடியூப் என்ற இணையதளத்தை பிப்ரவரி 2005- இல் உருவாக்கியவர்கள் சாட் ஹார்லி, ஸ்டீவன் சேன் மற்றும் ஜாவேத் கரீம் ஆகிய மூவர்தான். இவர்கள் மூவரும் பே-பால் என்ற நிறுவனத்தில் இருந்து விலகி அதிலிருந்து கிடைத்த தொகையிலிருந்து யூடியூபைத் தொடங்கினார்கள். சாட் ஹார்லி இதற்கு தலைமையேற்று இதை வடிவமைத்தார். மற்ற இருவரும் கணினி நிபுணர்கள். இதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். இது உருவாவதற்கு முன்பே வீமியோ போன்ற சில காணொலிகள் இருந்தாலும் யூடியூப்பின் வளர்ச்சியை அவற்றால் அடைய முடியவில்லை.

இதன் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் சென்னின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாம். அதனாலேயே இப்படி ஓர் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் இவர்களுக்குத் தோன்றியது என்று சொல்லப்படுகிறது. ஒரு சுனாமி காணொலி மற்றும் ஜேனட் ஜாக்சன் என்ற பாப் பாடகியின் காணொலியையும் இணையத்தில் பதிவேற்ற முடியாத ஆதங்கம் யூடியூப் உருவாக்கத்தின் மூலம் அவர்களுக்கு நிறைவேறியது.

யூடியூபில் ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் காணொலி "உயிரியல் பூங்காவில் நான்' (மீ அட் தி ஜூ) என்ற 19 நொடிகளே ஓடக் கூடிய காணொலியாகும். இரண்டு யானைகள் பின்புறமாக நிற்க ஜாவேத் கரீம் ஓர் இரும்புக்கம்பி வேலிக்கு வெளியே நின்று பேசுவதே இக்காணொலி. இன்று வரை யூடியூப்பில் இதைப் பார்க்க முடியும். இக்காணொலியை இதுவரை 10 கோடி பேர்கள் பார்வையிட்டுள்ளனர்.

யூடியூப் வலைதளம் ஆரம்பித்த பின்னரும் பல மாதங்கள் வரை இதற்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை. ஆகவே, பொதுமக்கள் யாராக இருந்தாலும் தங்கள் சொந்த அனுபவக் காணொலிகளை இதில் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவித்த பிறகுதான், இது "மளமள'வென அதிகம் பேர் பார்க்கிற தளமாகியது. இதைப் பயன்படுத்துபவர்கள் தாங்களே படம் பிடித்த உரிமையுள்ள காணொலிகளைப் பதிவேற்றவும், இணையத்தில் உள்ள அனைவரும் அவற்றைப் பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும், தங்கள் கருத்துகளை அவற்றின் அடிப்பகுதியில் குறிப்புகளாகப் பதிவு செய்யவும் முடியும்.

ஒருவரது பன்முகத் திறமைகளையும், அறிவாற்றல், படைப்பாற்றல்களையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் அவற்றை இலவசமாக அனைவரும் கண்டு களிக்கவும் மனித வரலாற்றில் முதன் முறையாக யூடியூப் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள சான் புரூனே என்ற இடத்தில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

படிப்படியாக வளர்ச்சி பெற்ற இந்நிறுவனத்திற்கு சில முதலீட்டாளர்கள் பத்து மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய முன் வந்தனர். 2005 செப்டம்பரில் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் காலணியான நைக் நிறுவனம் வெளியிட்ட ரொனால்டுநோ என்ற கால்பந்தாட்ட விளையாட்டு வீரரின் விளம்பரக் காணொலி ஒன்று ஒரு மில்லியன் பேர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டது. 2006- ஆம் ஆண்டில் 65,000 காணொலிகள் இதில் இடம் பெற்றன. 100 மில்லியன் தடவைகள் ஒவ்வொரு நாளும் யூடியூப் பார்க்கப்பட்டது.

2006 -ஆம் ஆண்டு "டைம் இதழ்' அதன் அட்டையில் அந்த ஆண்டின் புகழ்பெற்ற மனிதர் என்று யூடியூப்பின் படத்தை வெளியிட்டது. இதன் விரைவான வளர்ச்சியை உற்று நோக்கிய கூகுள் நிறுவனம் 2006 அக்டோபரில் 1.6 பில்லியன் டாலர்கள் கொடுத்து இதை விலைக்கு வாங்கியது. அதனால் இது மேலும் விரைவான வளர்ச்சி பெற வாய்ப்பாக அமைந்தது. இப்போது யூடியூப்பின் மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் ஆகும். 2019- இல் இதன் வருமானம் 19 பில்லியன் டாலர்கள்.
2007 முதல் இதில் விளம்பரங்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். உங்கள் பொழுதுபோக்குகளைக் காணொலியாக்கி பதிவு செய்யுங்கள் என்று இந்நிறுவனம் அறிவித்த பின்னர் ஏராளமான காணொலிகள் இதற்கு வந்து சேர்ந்தன. அதுவரை அமெரிக்காவில் மட்டுமே இணையத்தில் வெளிவந்த யூடியூப் காணொலிகளை உலகின் பல நாடுகளில் அறிமுகம் செய்தனர். இந்தியாவுக்கு 2008 மே 7- ஆம் நாள் இது வந்து சேர்ந்தது.

செய்முறை காணொலிகள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. எப்படி என்று தொடங்கும் கேள்விகளுக்கு விடை தேடியே அதிகம் பேர் இதில் நுழைகிறார்கள். டை கட்டுவது எப்படி, சேலை கட்டுவது எப்படி, நடன அசைவுகள் போன்றவை வந்தன. சமையல் செய்முறை காணொலிகள் அதிகம் புகழ் பெற்று வருகின்றன. பல கோடி பெண்கள் (ஆண்களும்) உலகம் முழுவதும் வகை வகையான முறைகளில் சமையல் செய்வதற்கு இதைப் பார்த்து அறிந்து கொள்கின்றனர். இந்த கரோனா ஊரடங்கில் இத்தகைய காணொலிகளைப் பார்த்து இதுவரை சமையலே செய்யாதவர்களும் கற்றுக் கொள்வது மேலும் அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் அமீத் பதானாவின் நகைச்சுவை காணொலிகள் முதலிடத்தில் உள்ளன. தமிழிலும் பல யூடியூப் காணொலி தளங்கள் பல இலட்சம் பேர்களால் பார்க்கப்படுகின்றன. அக்காணொலி உரிமையாளர்களுக்கு யூடியூப் மூலமும் விளம்பரங்கள் மூலமும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய்கள் வருமானம் கிடைக்கிறது. அவற்றை நடத்துபவர்களில் சிலர் திரைப்படங்களும் எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு காணொலியும் 15 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை யூடியூப் வைத்திருந்தது. பின்னர் அது நீட்டிக்கப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கப்பட்டது. யூடியூப் காணொலி தளத்தை ஒருவர் உருவாக்க வேண்டும் என்றால் அவரிடம் ஜிமெயில் மின்னஞ்சல், கைபேசி எண் ஆகிய இரண்டும் இருந்தால் போதும். கூகுளில் சென்று தனியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதை விளக்கும் பல யூடியூப் காணொலிகளும் இதே தளத்தில் உலா வருகின்றன.

உலக அளவில் கவனத்தை ஈர்த்த முதல் நேரடி ஒளிபரப்பு 2008 மே 9 அன்று அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளர் பராக் ஒபாமாவின் விவாதம் ஆகும். 2010 - இல் "இந்தியன் பிரிமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளை யூடியூப் நேரலையாக காட்டியதே பல உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காட்டப்படுவதற்கு ஆரம்பம் ஆகும். 2012- இல் ஒரு பாப் இசைக்கலைஞர் பதிவேற்றம் செய்த "கங்னம்' என்ற நடனக் காணொலி 2.5 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. அதே ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளும் நேரடியாக இதில் காட்டப்பட்டன. யூடியூப்பில் உலக அளவில் இப்போது முதலிடத்தில் இருப்பது "டாடி யாங்கி' என்பவர் இடம்பெற்ற "டெஸ்பாசிட்டோ' காணொலியாகும். இதை ஜூலை 2020 வரை 6.8 பில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர்.

புதிய திரைப்படங்களை வெளியிடப்படும்போது அதற்கு டீசர், டிரைலர் என்று முன்னோட்டங்களை யூடியூப்பில் வெளியிட்டு அவற்றை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது கவனிக்கப்படுகின்றது. ஒரு திரைப்படம் வெளியான உடனே அதற்கு திரை விமர்சனங்கள் பலரால் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. யூடியூப் திரை விமர்சனங்களைப் பார்த்து விட்டு அதற்குப் பிறகு அப்படத்தை பார்க்கச் செல்கிறவர்கள் ஏராளம். ஆயிரக்கணக்கான பழைய, புதிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள், செய்திப்படங்கள் போன்றவை யூடியூப்பில் உள்ளன. கார்ப்பரேட்டுகளின் காணொலிகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வி ஒளிபரப்புகள் ஆகியவையும் இதில் இடம் பெறுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவை. 2016 முதல் 360 டிகிரி கோணத்தில் பார்க்கக் கூடிய காணொலிகளைப் பதிவேற்றும் வசதி அளிக்கப்பட்டது.

யூடியூப் காணொலிகளில் பிரிமியம், இசை, தொலைக்காட்சி போன்ற பிரிவுகள் உள்ளன. நேரடி ஒளிபரப்புகளை பிரிமியம் சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்க முடியும். 2015- இல் குழந்தைகள் பிரிவு தொடங்கப்பட்டது. இதன் காணொலிகளில் தர உரிமம் பெற்றவை, படைப்பாக்க பொது காணொலிகள் போன்ற சில வகைகள் உள்ளன. பங்கேற்பாளர் என்ற திட்டத்தின் மூலம் ஒருவரது காணொலியை அதிகமானோர் பார்ப்பதைக் கணக்கிட்டு அதன் உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை யூடியூப் நிறுவனம் அளிக்கிறது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் இயங்கி வருகின்றனர். பலர் இலட்சக்கணக்கில் வருமானம் பெறுகின்றனர். வீடியோகேம்கள் மூலம் புகழ்பெற்ற மில்டன் என்பவர் யூடியூப் மூலம் 107 கோடி ரூபாய் வருமானம் பெற்றதாக "ஃபார்ச்சூன்' இதழ் கூறியது. நூறு சந்தாதாரர்களைப் பெறும் எவரும் யூடியூபில் தனக்கென தனி காணொலி தளங்களை(சேனல்கள்) உருவாக்கலாம். அத்துடன் குழுக்கள் அமைக்கும் வசதிகளும் உண்டு.

இருப்பினும் யூடியூப் மீது சில குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. வன்முறையை தூண்டுதல், பாலியல், சிறார்களைத் தவறாகப் பயன்படுத்தல் போன்ற கருத்துகளில் பதிவேற்றம் செய்யப்படும் காணொலிகள் வருகின்றன என்று புகார்கள் கூறப்படுகின்றன. 59 உலக நாடுகள் யூடியூபை இன்னும் அனுமதிக்கவில்லை. புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தணிக்கைக் குழுக்களை அமைத்தும் யூடியூப் இவற்றைக் கண்காணிக்கிறது. புகார்கள் பரிசீலிக்கப்பட்டு அத்தகைய காணொலிகள் நீக்கப்படுகின்றன. இந்தியா போன்ற பல நாடுகளில் ஆபாச காணொலிகளை நீக்கி வருகிறார்கள். ஆயினும், சிறுவர்கள் எத்தகைய காணொலிகளைப் பார்க்கிறார்கள் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்காணித்து வருவது நல்லது.

"அழுத குழந்தைதான் பால் குடிக்கும்", என்பது பழமொழி. அழுகின்ற குழந்தைகளிடம் யூடியூப் காணொலிகளை காட்டுங்கள். அழுகையை நிறுத்தி விட்டு குழந்தைகள் அவற்றைப் பார்க்கத் தொடங்கும் என்பது பல பெற்றோர்களின் அனுபவ மொழி.யூடியூபை பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் இதில் செலவிடுகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. தொலைக்காட்சி ஊடகத்திலிருந்து கைபேசி ஊடகத்துக்கு இளைய தலைமுறையினர் மாறிவரும் இன்றைய உலகில் மனிதன் தன்னுடைய நேரத்தை எவ்வாறு செலவழிக்கிறான் என்பதை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக யூடியூப் விளங்குகிறது. இதன் எதிர்காலம் அளப்பரியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com