வெற்றியாளர்கள்! - ஆப்பிள்: ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் என்ற பெயரைக் கேட்டவுடன் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த ஆப்பிள் பலரின் நினைவுக்கு வரலாம்.
வெற்றியாளர்கள்! - ஆப்பிள்: ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பிள் என்ற பெயரைக் கேட்டவுடன் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த ஆப்பிள் பலரின் நினைவுக்கு வரலாம். ஆனால், தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் கணினி நிறுவனம் என்ற பெயரையே இது குறிப்பிடுகிறது. ஆப்பிள் நிறுவனம் தயாரித்து  அறிமுகப்படுத்திய "மெக்கின்டாஷ்' கணினியே உலகின் முழுமையான முதல் தனிநபர் கணினி என்று கூறப்படுகிறது. 2007- ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவன தலைமை அலுவலர் ஸ்டீவ் ஜாப்ஸ் "ஐஃபோன்' என்ற விலையுயர்ந்த செல்பேசியை அறிமுகப்படுத்தினார். இதுவரை 2.2 பில்லியன் ஐஃபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் டிரில்லியன் டாலர் நிறுவனம் என்றும் உலகின் அதிக மதிப்பு மிக்க நிறுவனமாகவும் ஜூலை 31, 2020 இல் ஆப்பிள் மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் கணினி (பிசி)யை உருவாக்கிய முன்னோடியாக ஜாப்ஸ் கருதப்படுகிறார். 

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவரும் அதன் அடையாளமாகக் கருதப்படுவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை ஒரு புதினம் அல்லது திரைப்படம் போன்றே பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.

1955 பிப்ரவரி 24 - ஆம் நாள் ஸ்டீவன் பால் ஜாப்ஸ் அமெரிக்காவில் சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்தார். திருமணமாகாத கல்லூரி மாணவர்களான இவரது பெற்றோர், இவர் பிறந்த உடனே  இவரை பால் ஜாப்ஸ், கிளாரா தம்பதியிடம் தத்துக் கொடுத்துவிட்டு இவரது வாழ்க்கையில் இருந்து விலகினார்கள். அவர்களின் வளர்ப்பில் ஹோம்ஸ்டீட் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது தனிமை விரும்பியாக இருந்தாலும் அறிவுக்கூர்மை மிக்கவராகவே விளங்கினார். ரீட் என்ற கல்லூரியில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஆறே மாதங்களில் படிப்பில் ஆர்வம் குறைந்து அங்கே நடைபெற்ற படைப்புத்திறன் வளர்க்கும் "காலிகிராஃபி'(அழகிய எழுத்து வடிவம்) போன்ற கலைகளில்  கவனம் செலுத்தி பின்னர் ஒரேயடியாக கல்லூரியில் இருந்து விலகினார்.

இவருக்கு "நான் யார்?' என்ற தேடல் எழுந்தது. அதன் விளைவாக 1974- இல் ஆன்மீக அறிவொளியைத் தேடி இந்தியா வந்தார். வட இந்தியாவில் நைனிடாலில் உள்ள கைஞ்சி ஆசிரமத்தில் நீம் கரோலி பாபா என்ற துறவியை தேடிச் சென்றார். ஆனால், இவர் வருவதற்கு ஓராண்டு முன்பே பாபா இறந்து விட்டிருந்ததால் இவரால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், டில்லி, உத்தரபிரதேசம், இமாச்சல  பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏழு மாதங்கள் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்ட பின்னர்,  தான் தேடும்  அறிவொளி தன்னிடமே உள்ளது என்பதை உணர்ந்து அதே ஆண்டில் சொந்த ஊர் திரும்பினார். 

கலிஃபோர்னியாவில் அட்டாரி என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இவருக்கு முதலில் ஒரு வேலை கிடைத்தது. அதன் தொடர்பாக இவரது பள்ளி, கல்லூரிக்கால நண்பரான ஸ்டீவ் வொஸ்நியாக் என்ற கணினி தொழில்நுட்ப வல்லுநரைச் சந்தித்தார். அவர் "நீலப்பெட்டி' என்ற சாதனத்தை ஏறக்குறைய கணினியின் அடிப்படையில் உருவாக்கி வைத்திருந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்து போனார் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு கணினி தயாரிப்பு நிறுவனம் தொடங்க முடிவு செய்தனர்.

1976 ஏப்ரல் 1-ஆம் நாள் ஜாப்சின் வீட்டில் இருந்த கார் நிறுத்தும் பகுதியில் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதற்கு மூலதனமாக ஸ்டீவ் ஜாப்சின் வோக்ஸ்வேகன் சிறு பேருந்தையும் வோஸ்னியாக்கின் அறிவியல் கணிப்பானையும் விற்றுப் பணம் திரட்டினர். வோஸ்னியாக் கணினிகளை வடிவமைக்க, ஜாப்ஸ் அவற்றை உருவாக்கி விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதே ஆண்டில் ஆப்பிள்-I என்ற கணினியை உருவாக்கினார்கள். அதில் சில மேம்பாடுகள் செய்து 1977- இல் ஆப்பிள் - II கணினி அறிமுகம் ஆனது. 

அவரது விற்பனை திறமையாலும் கணினியின் தரத்தாலும் மளமளவென அவை விற்பனை ஆயின. மூன்றே ஆண்டுகளில் கணினிகளின் விற்பனை மதிப்பு 139 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. நிறுவனத்தின் வளர்ச்சியின் விளைவாக 25 ஆவது வயதில் 250 மில்லியன் டாலர் மதிப்புடையவர் என்று ஃபோர்பஸ் வெளியிட்ட அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் ஜாப்ஸ் இடம் 
பெற்றார். 

பெப்சி குளிர்நீர் நிறுவனத்திலிருந்து  ஜான் ஸ்கல்லி என்பவரை அழைத்து வந்து ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகியாக நியமித்தார். 1984- இல் இந்நிறுவனத்திலிருந்து உலகின் முதல் வண்ணமயமான திரை, மவுஸ் அடங்கிய முழுமையான கணினியாக "மெக்கின்டாஷ்' அறிமுகம் ஆனது. மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து இயங்க ஜாப்ஸ் ஒப்பந்தம் போட்டார். 

ஐபிஎம் கணினிகளில் இயங்குவது போன்ற பொதுவான மென்பொருளைச் சேர்க்காமல் மெக்கின்டாஷ் கணினிகளுக்கென்று தனித்துவமான மென்பொருளைச்  சேர்த்து விற்றதால் நிறுவன விற்பனை குறைந்தது. அதற்கு ஜாப்ஸ்தான் காரணம் என்று இவர் அழைத்து வந்து நியமித்த ஜான் ஸ்கல்லி மற்றும் நிர்வாகக்குழுவால் ஒதுக்கப்பட்டார். 1985- இல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தன் பங்குகளை விற்று விட்டு வெளியேற வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டது. இவருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய வோஸ்நியாக்கும் அங்கிருந்து வெளியேறினார். 

வெளிச்சத்தை மறைத்து வைக்க முடியாது என்பதுபோல் தன்னுடைய மூலதனத்தை வைத்து "நெக்ஸ்ட்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி மென்பொருள் தயாரிப்பு , கணினி துணைக்கருவிகள் உற்பத்தி துறையில் ஜாப்ஸ் மீண்டும் ஒளிர்ந்தார். அத்துடன் ஜார்ஜ் லூக்காசிடமிருந்து 1986- இல் "பிக்சார்' என்ற அனிமேஷன் படங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை வாங்கி இணைத்துக் கொண்டார். வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து புகழ்பெற்ற "டாய் ஸ்டோரி' போன்ற பல அனிமேஷன் படங்களை அடுத்த 15 ஆண்டுகளில் தயாரித்து பெருவெற்றி கண்டார். 2006- இல் டிஸ்னியின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரர் ஆனார். 

ஆப்பிள் நிறுவனம் பலவீனம் அடைந்தது. 1996- இல் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை 427 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆப்பிளுடன் ஒன்றிணைத்துக் கொண்டார். "வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று மீண்டும் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி ஆனார். பழைய நிர்வாகக் குழுவை கலைத்து புதிய குழுவை உருவாக்கினார். "மாத்தி யோசி' என்ற கோட்பாட்டை பயன்படுத்தி ஐமேக், மேக்மினி, மேக்ப்ரோ, மேக்புக்ஏர் ஆகிய மடிக்கணினிகளை,  புதிய தயாரிப்புகளாக படிப்படியாக அறிமுகப்படுத்தினார். தொலைநோக்கு, கடும் உழைப்பு, தளராத முயற்சி ஆகியவற்றால் ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் முதல் வரிசையில் தலைநிமிர்ந்து நிற்க வைத்தார். 

2001 - இல் அவர் அறிமுகப்படுத்திய "ஐபாட்' என்ற 1000 பாடல்களை அடக்கி இசைக்க வைக்கும் டிஜிட்டல் கையடக்க இசைக்கருவி அமோக வரவேற்பு பெற்றது. 2015 வரை அது 390 மில்லியன்கள் விற்பனை ஆனது. ஐடியூன்ஸ் மற்றொரு சிறந்த விற்பனை பொருளானது.

2007-இல் இசை, இணையம் இணைந்த செல்பேசியாக ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய விலையுயர்ந்த ஐஃபோன்கள் அந்தத் துறையையே மிரள வைத்தன. 2012 - க்குள் 3,40,000 ஐஃபோன்கள் விற்பனை ஆயின.  ஓர் ஆண்டில் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.2 பில்லியன் டாலர் ரொக்க இருப்பு இருக்கும்போது ஆப்பிள் நிறுவன பண கையிருப்பு 75 பில்லியன் டாலராக இருந்தது. இதன்மூலம் அமெரிக்க அரசின் கருவூலத்தை விட அதிக பணம் வைத்திருக்கும் நிறுவனம் ஆப்பிள் என்ற பெருமையைப் பெற்றது. 

2013 முதல் இதன் 40% வருவாய் ஐஃபோன்கள் மூலமே வருகிறது. பல நிறுவனங்கள் செல்பேசியை விற்பனை செய்தாலும் ஐஃபோனின் தரமும், திறனும், பெருமையும் ஈடு இணையற்றதாகக் கருதப்படுகிறது. "பணத்தை விட தங்கள் நேரத்தைப் பெரிதாக நினைப்பவர்கள் மட்டும் இதை வாங்கினால் போதும்' என்ற கோட்பாட்டில் அவை வெளியிடப்படுகின்றன. அவற்றின் தரம் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு இப்போது ஐஃபோன்-11 விற்பனை ஆகிறது. ஏறக்குறைய 70,000 ரூபாய் இதன் ஆரம்ப விலையாக உள்ளது. 

உலக நாடுகள் சீனா மீது கொண்டுள்ள அதிருப்தியின் விளைவாக சீனாவில் இருக்கும் ஐஃபோன்கள்  உற்பத்தி வசதிகள் இந்தியாவில் தொடங்கப்படலாம் என்று இதன் துணை நிறுவனம் ஒன்று இந்த ஆண்டில் கருத்து தெரிவித்துள்ளது. அதுவும் சென்னை அருகிலுள்ள  ஸ்ரீபெரும்புதூரில் அமையப் போகிறதாம். இதன்மூலம் இறக்குமதி வரி குறைவதால் குறைந்த விலையில் இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாகும். 

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அந்தரங்கமாகவே வைத்திருந்த ஸ்டீவ் ஜாவ்ஸ் 1991- இல் லாரன்ஸ் போவல் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து மூன்று பிள்ளைகளின் தந்தையானார்.

இதற்கிடையில், இவரது 23- ஆவது வயதில் கிறிசான் பென்னன் என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டதன் விளைவாக லிசா  பிறந்தார். தன் மகளின் பதின் பருவத்தில்தான் அவரை பகிரங்கமாக அறிவித்து தன் குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டார். 

2003-இல் அவருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டது. அதைப்பற்றி ஓராண்டுவரை வெளியில் சொல்லவில்லை. 2004- இல் அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு புற்றுநோய்க்கட்டி அகற்றப்பட்டது. ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகளை ஆரவாரமாக அறிவித்தாலும் தன் உடல்நலம் பற்றிய தகவல்களை மறைத்தே வைத்தார். 

2007-இல் வணிகத் துறையில் உலகின் சக்திமிக்க மனிதர் என்று ஃபார்ச்சூன் இதழால் அங்கீகாரம் பெற்றார். 2011- இல் ஐபேட் என்ற பல்ஊடகப் பயன்பாடுகளை தரும் டேப்லட்டை (வரைப்பட்டிகை) அறிமுகப்படுத்தி விட்டு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றார். 

தன்னுடைய 56- ஆவது வயதில் மூச்சடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். ஒரு கணினி தொழில்நுட்ப வணிக சாதனையாளரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அவரது வாழ்க்கை "ஜாப்ஸ்'என்ற தலைப்பில் ஆங்கிலப்படமாக 2015- இல் வெளியாகி பல விருதுகள் பெற்றது. அமேசான் பிரைம், யூடியூப்பில் இதை இப்போதும் பார்க்கலாம். 

விடுப்பில் செல்வதற்கு முன்பாக டிம் குக் என்பவரை ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகியாக்கினார். அவரும் திறம்பட செயல்பட்டு ஆப்பிள் நிறுவனத்தை அதே உயர்நிலையில் நிற்க வைத்திருக்கிறார். ஆப்பிள் கடிகாரம், டிவி, ஹோம்பேட் என்ற அறிவார்ந்த பேசும்கருவி, மென்பொருள்கள், புதிய நிறுவனங்களை இணைத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் உலகின் மதிப்பு மிக்க வணிக நிறுவன அடையாளமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் கடிகாரம் பத்தாயிரம் டாலர்கள் வரை மதிப்புள்ளதாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

2017-இல் 728 மில்லியன் ஐஃபோன்கள் இயங்கும் நிலையில் இருந்தன. 900 மில்லியன் மக்கள் இன்றும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதை கையில் வைத்திருப்பது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது.  

தனது இறுதி நாட்களில் மனித குலத்துக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லிவிட்டுப்போன செய்தி இதுதான்: "தொழில்நுட்பத்துறை வணிகத்தில் நான் உச்சத்தை அடைந்தேன். செல்வம் சேர்ப்பது மட்டுமே எனக்குப் பெருமை அளிப்பதாக இருந்தது. ஆனால், எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்திருந்தாலும் ஒருவருக்கு கிடைக்க முடியாத ஒன்று உண்டு. அதுதான் நல்ல உடல்நலம். அதை தேடிப் பெறுங்கள்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com