எங்கேயும்... எப்போதும்!

குடலில் ஏற்படும் புற்றுநோய் கல்லீரலிலும் பரவக் கூடியதாக உள்ளது.
எங்கேயும்... எப்போதும்!


மரபணு மருத்துவம்!

குடலில் ஏற்படும் புற்றுநோய் கல்லீரலிலும் பரவக் கூடியதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஷாம்ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஜீன் தெரபி என்றழைக்கப்படும் மரபணு மருத்துவத்தின் மூலம் கல்லீரலில் புற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

உருவாக்கப்பட்ட ஒரு வைரûஸ எலியின் கல்லீரலில் தொற்றச் செய்திருக்கிறார்கள். இதனால் எலியின் ஈரலில் இருந்த கட்டி சுருங்கிவிட்டது. இதை மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.

இந்த மரபணு மருத்துவத்தின் மூலம் கல்லீரல் புற்றுநோயை மட்டுமல்ல, மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் எல்லாவற்றையும் குணமாக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

இவர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ், கல்லீரலுக்குள் செலுத்தப்படும்போது, அது எலும்பு புரத உயிர் அணுக்களை கல்லீரலில் உருவாக்கத் தூண்டுகிறது என்றும், இந்த எலும்பு புரத உயிர் அணுக்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்துகிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


ரோபோட்டிக் சர்ஜரி!

மருத்துவத்துறையில் பல புதுமைகள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்று ரோபோட்டிக் சர்ஜரி. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மிக அதிகமாக இந்த ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை செய்யும் இந்த ரோபோவின் கை ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும், இன்னொரு கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர், அறுவைச் சிகிச்சை செய்யப்படும் படுக்கையருகே உள்ள கணினி கட்டுப்பாட்டு அமைப்பின் அருகே அமர்ந்து இந்த அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோவை இயக்க முடியும்.

இந்த ரோபோ வெளிப்படையாக உடலை அறுத்து உள்ளிருக்கும் பகுதிகளைச் சீர் செய்யக் கூடியதல்ல. தோலில் ஒரு சிறு கீறல் அல்லது சிறு வெட்டின் மூலம் உடலுக்குள் சென்று, உள்ளுறுப்புகளில் அறுவைச் சிகிச்சை செய்யும் திறன் உள்ளது. உள்ளுறுப்புகளில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் பகுதிகள் படம் பிடிக்கப்பட்டு முப்பரிமாண தோற்றத்துடன், பெரியதாக்கப்பட்டு, அதிகத் துல்லியத்தன்மையுடன் வெளியில் உள்ள கணினித் திரையில் தெரியும். இதனால் மிக எளிதாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.

இந்த ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைமுறையால், பிற அறுவைச் சிகிச்சைகளைப் போல, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகளில் கிருமித் தொற்று ஏற்படாது. நோயாளிக்கு வலி குறைவாக இருக்கும். அதிக ரத்த இழப்பு ஏற்படாது. மேலும் அறுவைச் சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறிவிடும். அறுவைச் சிகிச்சை செய்ததற்கான அடையாளமாக சிறு தழும்பு, வடு மட்டுமே இருக்கும்.


வெளியே தலைகாட்ட உதவும் செயலி!


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரம், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான ஏராளமான மக்களையும், போதை மருந்து விற்பனை செய்யும் நிறையக் குழுக்களையும் கொண்ட நகரமாகும். இந்தக் குழுக்களிடையே அவ்வப்போது நடக்கும் மோதல்கள், குழுக்களை அடக்க காவல்துறையினர் நடத்தும் தாக்குதல்கள் எல்லாமும் இந்த நகரத்தை துப்பாக்கிச் சண்டைகளின் மையமாக மாற்றி இருக்கிறது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்து தாக்கும் துப்பாக்கிக் குண்டுகளால் கொல்லப்படுகின்றனர்; பலர் காயமடைகின்றனர். ஒவ்வோராண்டும் 1,500 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில் "ஆன்டீ டெம் டிரோடியோ' (ஓடிடி) என்ற செயலி, எந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியிருப்பவர் செசில்லா ஒல்லிவெய்ரா என்ற பத்திரிகையாளர். துப்பாக்கிக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி செய்திகளைச் சேகரிக்க 2016 - இல் அவர் சென்றபோது, அவருக்குப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இது பற்றிய தகவல்களைத் திரட்ட "கூகுள் டாகுமென்ட் ஸ்பிரட்ஷீட்' ஒன்றை ஏற்படுத்தினார். அதில் எங்கே, எப்படி, எத்தனை தடவைகள் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் அதனால் பாதிக்கப்பட்டனர் என்பன போன்ற தகவல்களைப் பதிவிட்டார். இது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உதவியோடு 2018 - ஆம் ஆண்டு ஒரு செயலியாக உருவெடுத்தது.

இந்தச் செயலியை ஒருவர் தனது செல்லிடப் பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர் செல்லும் பாதைகளில் ஏற்கெனவே நடந்த துப்பாக்கிச் சண்டைகள், போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்கள், சமீபத்தில் நடந்த பாதிப்புகள் என எல்லாத் தகவல்களையும் உடனடியாகத் தெரிவித்துவிடும். ஆபத்தான பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல இது வழிகாட்டுகிறது. இந்தச் செயலிக்கான தகவல்களை அந்தந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்துவிடுவதால், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே தலைகாட்ட இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கிறது.


கண்காணிக்கும் டிரோன்!


பெரிய பெரிய தொழிற்சாலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றின் செயல்களை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும் என்று தோன்றினால் உடனே அவற்றைச் சரி செய்ய வேண்டும். இதையெல்லாம் மனிதர்கள்தாம் செய்து வந்தார்கள். ஆழமான சுரங்கங்களில் மனிதர்களை நிறுத்தி, அலையவிட்டு, கண்காணிப்பது சிரமம் என்பதால், பெர்செப்டோ அட்டானமஸ் சொல்யூஷன்ஸ் என்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், கண்காணிப்பதற்கான டிரோன் ஒன்றை வடிவமைத்துள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள டிரோன் ஒரு முறை பறக்கத் தொடங்கினால் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்து பறக்கும். 7 கி.மீ. தூரம் செல்லும். அப்படிப் பறக்கும்போது, இதில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள்,

வெப்பநிலையை அளக்க உதவும் கருவிகள், சென்சார்கள் மற்றும் பிற கருவிகள், பறந்து செல்லும் பகுதிகளில் நடைபெறும் பணிகளில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அவற்றைத் தெரிந்து கொள்ளும்.

உதாரணமாக ஓர் இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்றாலோ, எங்காவது வாயு, எண்ணெய் போன்றவற்றின் கசிவு இருந்தாலோ, புகை வந்தாலோ உடனே இந்த டிரோன் தெரிவித்துவிடும்.

ஏற்கெனவே இதுபோன்ற தானியங்கும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டு, அதன் தயாரிப்பான இடம் விட்டு இடம் செல்லும் ரோபோவின் தொழில்நுட்பத்தை இந்த பறக்கும் டிரோனில் இணைத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த டிரோன் வானில் பறப்பதோடு மட்டுமல்லாமல், தரையில் நடந்து செல்லும்; நீரிலும் மிதந்து செல்லும் திறனுடையதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com