முக நூலிலிருந்து....
பிரிந்த தண்டவாளம்
சேர்ந்தே செல்கிறது...
தொடர் வண்டி.
கவி முத்து
ஏறியவனுக்கு இறங்கத் தெரியும்...
ஏற்றி விடப்பட்டவர்களுக்கு இறங்கத் தெரியாது.
பொன்குமார்
எல்லாக் குழு
புகைப்படங்களிலும்
ஒருவர் கண்களை
மூடிக் கொள்கிறார்
வாயைக் கோணிக்
கொள்கிறார்
புகைப்படக் கருவிக்குப் புன்னகைக்கத் தவறிவிடுகிறார்
மேலும்... அதில் இல்லாது போன ஒருவரைப் பற்றியே
பேசித் தீர்க்கிறோம் எப்போதும்.
இரா. பூபாலன்
நினைக்கும் போதெல்லாம் புதிதாகவே கீறிக்கொள்கிறது...
என்றோ ஏற்பட்ட காயம்.
கனகா பாலன்
சுட்டுரையிலிருந்து...
ஒருவரின் பிரிவு
மற்றொருவரைப்
பாதிக்கவில்லை
என்றால்...
அங்கே யாரோ
ஒருவர்
போலியாக
நடித்துள்ளார்
என்று அர்த்தம்.
குமரேஷ் நடராஜ்
பாட்டி சொல்!
தவளை கத்தினால் மழை.
அந்தி ஈசல் பூத்தால்
அடைமழைக்கு அச்சாரம்.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
தை மழை நெய் மழை.
மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
புற்றுகண்டு கிணறு வெட்டு.
வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
காணி தேடினும் கரிசல்மண் தேடு.
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.
சரியான எண்ணமும்
தெளிவான
சிந்தனையும்
மட்டுமே
போதுமானது...
ஆரோக்கியமாக
நெடுநாட்கள்
வாழ்வதற்கான
சிறு கோட்பாடு...
அவ்வளவே.
கர்ணன்
தனிமை...மிகக் கொடுமையானது
நமக்குப் பிடித்தவர் தந்தால்
தனிமை...வரமானது தான்
நாமாக எடுத்துக் கொள்ளும் போது.
தனிமை...வலியானது
நிரந்தரமாகக் கிடைக்கும் போது.
அமைதினி
வலைதளத்திலிருந்து...
குழந்தைகளையும் மின்னணு சாதனங்களின் கையில் ஒப்படைத்து விட்டு நாம் வாழ்க்கையின் அவசரச் சக்கரத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் அப்பா அம்மாவின் குரலை விட அதிகமாக தொலைக்காட்சி மற்றும், மொபைல் ஃபோனில் வருகிற குரல்களையே அதிகம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு வெறி கொண்டு அடம்பிடிக்கிறார்கள்.
கையில் மொபைல் ஃபோன் இல்லாத குழந்தைகளைக் காண்பது அரிது. அதுவும் நகரங்களில் சர்வ சாதாரணம்.
குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடுவது, கதைகள் சொல்வது, சினிமா பார்ப்பது, கார்ட்டூன் பார்ப்பது என்று குழந்தைகளின் வளர்ப்பில் மிகமுக்கியமான மிக அடிப்படையான மனதைக் கட்டமைக்கிற வேலையை மின்னணுசாதனங்களின் கையில் விட்டு விடுகிறோம்.
குழந்தைகளின் வளர்ச்சியில் முதன்மையாக பெற்றோர், ஆசிரியர், இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே பெற்றோர் குழந்தைகளோடு உரையாடுவதை அத்தியாவசியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அவர்களுக்குப் பாடல்களைப் பாடிக்காட்ட வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். தினம் ஒரு முறையாவது குழந்தைகளை அணைத்து தங்களுடைய அன்பைப் பரிமாற வேண்டும்.
பெற்றோர் முதலில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை - குறிப்பாக தொலைக்காட்சியை, கணிணியை, மொபைல் ஃபோனை - குறைத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகள் முன்னால் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அவையெல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும்.
http://udhayasankarwriter.blogspot.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.