வாங்க இங்கிலீஷ் பேசலாம்
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும்ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும்ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர்.
ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.
இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.
வீரபரகேசரி குதிரை லாயத்தின் முன் கவலையில் குறுக்குமறுக்காய் நடந்து கொண்டிருக்கிறார்.
கணேஷ்: சக்கரவர்த்தி திருமகனே... என்னவாயிற்று? என்ன கவலை?
அமைச்சர்: ச்சூ... அமைதி. மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.
கணேஷ்: ஏன் குதிரைக்கு லூஸ் மோஷனா?
அமைச்சர்: இல்லை, குதிரையைப் பழிக்காதீர்.
மன்னருக்குப் பிரியமான ராஜ புரவியைப் பழிப்பது
மன்னரைப் பழிப்பதற்குச் சமம்.
கணேஷ்: நான் மன்னிப்புக் கோருகிறேன். சரி,
மன்னர் எதற்கு வந்திருக்கிறார்?
அமைச்சர்: அதோ நிற்கிறதே அந்த வெண்புரவி அதன் பெயர் ஷாஜஹான். மன்னர் அதை சுருக்கமாக "ஷா' என்று அழைப்பார். எல்லையில் எதிரிப்படையினர் அணிவகுத்து நிற்கிறார்கள். இப்போது போர் தொடுப்பதா இல்லை சமாதானப் புறாவைப் பறக்க விடுவதா என மன்னர் குழப்பத்தில் இருக்கிறார். அதனால் தான் ஷாவிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார்.
அப்போது அழகான வெண்புரவி ஒன்று கம்பீரமாக நடைபயின்று மன்னரை நோக்கி வருகிறது. மன்னர் அதை வணங்குகிறார். புரவி "ஷா' தலையசைத்து கனைக்கிறது.
ஷா: என் அன்பு நண்பனுக்கு என்னவாயிற்று? என்ன கவலை? அந்த நாட்டை நாம் இணைத்து இந்த ஆண்டு செழிக்கலாம் என திட்டமிட்டோமே. அது நிறைவேறுவதில் any roadblock?
கணேஷ்: அட, இந்த குதிரையும் உன்னைப் போல பேசுகிறதே ஜூலி. சரி அதென்ன roadblock?
ஏதாவது சாலைப் பணி திட்டத்தில் தடங்கலா?
ஜூலி: Roadblock என்றால் சாலையில் போக்குவரத்து காவலர்கள் அமைக்கும் தடை. அதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு. ஒருவர் தனது முன்னோட்டத்தில் தடை ஏற்படுவதாய்ச் சொல்லும் போது அதை roadblock என்று சொல்லலாம்.
கணேஷ்: ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? வெறுமனே barrier என சொல்லக் கூடாதா?
ஜூலி: Barrier என்றால் வெறும் தடை. அதை ஒருவர் தாண்டி குதித்துப் போகலாம். ஆனால் roadblock என்பது அப்படி சுலபத்தில் நேரடியாக வெல்ல முடியாத ஒரு தடை.
கணேஷ்: எப்படி?
ஜூலி: நீ ரோட்டில் பைக்கில் போகும் போது போலீசார் barricade வைத்திருக்கிறார்கள். அப்போது என்ன பண்ணுவாய்? எகிறி குதித்துப் போவாயா? இல்லை தடையை உடைத்து வண்டியை ஓட்டிப் போவாயா?
கணேஷ்: இல்லை, வேறு ஏதாவது மாற்றுவழி இருக்கிறதா எனப் பார்த்து அதில் செல்வேன்.
ஜூலி: கரெக்ட். இந்த சுற்றிப் போகும் மாற்று வழியைத் தான் detour என்கிறார்கள். இப்போது இந்த detourI ஐ வாழ்க்கையோடு பொருத்திப் பார். நீ ஒரு இலக்கை அடையப் போராடுகிறாய். அப்போது ஒரு எதிர்பாராத தடை வருகிறது. நீ சுலபத்தில் கடந்து செல்ல முடியாத தடை. அப்போதுதான் வழக்கத்துக்கு மாறான வழிகளில் தீர்வைத் தேடுவாய். புதிய முயற்சிகளை எடுப்பாய். உதாரணமாக உனக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்கிறாய் குறையவில்லை. இது ஒரு roadblock. ஏன் இப்படி என யோசித்து உன் டயட்டை மாற்றுகிறாய். இப்போது எடை குறைகிறது. You overcome the roadblock of weight gain.
கணேஷ்: ரொம்ப அழகா விளக்கினே ஜூலி.
ஜூலி: Internal roadblock என ஒன்று உள்ளது.
Management theory- யில் பயன்படுத்துவார்கள். ஒரு நிறுவனத்தை நிர்வாகம் பண்ணும் போது அவர்களுக்கு உள்ளார்ந்து - பணியாளர்கள், திட்டமிடல் போன்றவற்றில் - வரும் தடையை internal roadblock என்பார்கள். அதே போலத்தான் விளம்பரத் துறையில் roadblock advertising என்பார்கள் - ஒரு குறிப்பிட்ட விளம்பரத்துக்கு அதிக இடத்தைப் பெற்று எங்கெங்கு நோக்கினும் அந்தப் பொருளைக் குறித்த விளம்பரங்களே இடம்பெறுமாறு செய்வது.
கணேஷ்: நன்றி ஜூலி...
ஷா: யார் இந்தப் பையனும் நாயும்? இவ்வளவு ஆங்கில அறிவு நாட்டமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...