தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!
"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ.


"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. கரோனா நோய்த் தொற்று மிகுந்துள்ள இக்காலத்தில் அதைக் கட்டுப்படுத்த, அதிலிருந்து தப்பிக்க, அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்யலாம் என்று உலகம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. பல கண்டுபிடிப்புகளுக்கும் இந்தச் சூழ்நிலையே விதையாகவும் இருக்கிறது.
புதுதில்லியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு ட்ரோன்களின் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சில ட்ரோன்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களைப் படம் பிடித்துக் காட்டியதோடு, அவர்
களில் யாருக்கெல்லாம் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்து அடையாளம் காட்டின. புதுதில்லியில் உள்ள காவல்துறையினர் முகக்கவசத்தின் மேல் பகுதியில் ஒரு கருவியை அணிந்து கொண்டு அவர்கள்
அருகில் வரும் மக்களின் அதிக உடல் வெப்ப நிலையைக் கண்டுபிடித்தனர். இவற்றை யெல்லாம் செய்வதற்கு ஒரு நிறுவனம் உதவியது. அந்த நிறுவனத்தின் பெயர் "இந்தியன் ரோபோட்டிக் சொல்யூஷன்ஸ்'. 2015-ஆம் ஆண்டு தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தொடக்கத்தில் ரோபோட்டிக் பாகங்களை விற்கும் நிறுவனமாகவே இருந்தது.
கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட் பணிகளுக்கு உதவும் நிறுவனமாகவும் இருந்தது.
2017 - ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் தோற்றம் மாறியது. இந்திய ராணுவம், தில்லி காவல்துறை, ரயில்வே, உத்தரபிரதேச நீர்ப்பாசனத்துறை, தில்லி நகராண்மைக் கழகம் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவற்றுக்குத் தேவையான பணிகளைச் செய்து தந்தது. அதேபோன்று தனியார் நிறுவனங்களான ஸ்டெர்லைட் பவர், ஜிகே மின்டா, கேஇசி போன்ற நிறுவனங்களுக்கும் வேலை செய்தது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் தங்களுடைய தொழில்நுட்ப அறிவை அதை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்களான சாகர் குப்தா நாக்ரியா, பிரசாந்த் பிள்ளை ஆகிய இருவரும் நினைத்தார்கள். அவர்கள் எண்ணத்தில் உருவானவைதான் தில்லியைத் தூய்மைப்படுத்தும் ட்ரோன்களும், காவல்துறை அணிந்திருந்த கருவியும்.
காவல்துறையினருக்கு மட்டுமல்ல, மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பயன்படுவதுதான் இவர்கள் உருவாக்கிய "தெர்மல் கரோனா காம்பேட் ஹெட்கியர்' (Thermal Corona Combat Headgear). இதை ஒருவர் அணிந்து கொண்டால் அவரைச் சுற்றி 10 -15 மீட்டர் தொலைவில் உள்ள பலரின் உடல் வெப்பநிலையை இந்தக் கருவி கண்டுபிடித்துச் சொல்லிவிடும். இந்தக் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் யார் யாருக்கு அதிக உடல் வெப்பநிலை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, இந்தத் தகவலை படத்துடன் "மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு' அனுப்பி வைத்துவிடும்.
""இந்தக் கருவியை மக்கள் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்களில், காய்கறி சந்தையில், பொது இடங்களில் பயன்படுத்த முடியும். அதிக அளவிலான கரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை மிக விரைவில் கண்டுபிடிக்க இந்தக் கருவி உதவும்'' என்கிறார் சாகர்.
இவர்கள் கரோனாவுக்கு எதிராகக் கண்டுபிடித்த இன்னொரு கருவி, தெர்மல் கரோனா காம்பேட் ட்ரோன். இந்த ட்ரோன், தெர்மல் கரோனா காம்பேட் ஹைட்கியர் செய்யும் வேலையைச் செய்கிறது. அதோடு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தால்,
அந்தப் பகுதி முழுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியைச் செய்கிறது. ஒலிபெருக்கி மூலம் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்குத் தகவல்களைச் சொல்கிறது. கோவிட் -19 தேர்வுக் கருவிகளையோ, மருந்துகளையோ ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. இரவு நேரங்களில் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
""இந்த ட்ரோன் இந்த ஐந்து பணிகளையும் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் செய்யும். கிருமி நாசினி தெளிக்கும் பணி இல்லையென்றால் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை இயங்கும். 3 மணி நேரம் பறந்து சென்றால் குறைந்தது 500 பேர்களின் உடல் வெப்பநிலையை இது கணக்கிட்டுச் சொல்லிவிடும்'' என்கிறார் பிரசாந்த்.
இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இன்னொரு ட்ரோன், கரோனா காம்பேட் ட்ரோன். ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிருமிநாசினிகளைத் தெளித்துத் தூய்மைப்படுத்தும் பணியை இது செய்கிறது. மிகக் குறுகிய காலத்தில் மிகப்
பெரிய பகுதியை இந்த ட்ரோன்களைக் கொண்டு தூய்மைப்படுத்தலாம். குறைந்தது 5 லிட்டரில் இருந்து 20 லிட்டர் கிருமிநாசினி வரை இந்த ட்ரோன் எடுத்துச் செல்லும். 55 மீட்டர் உயரம் வரை பறந்து, 2 கி.மீ. சுற்றளவு வரை இந்த ட்ரோன் கிருமிநாசினியைத் தெளித்துச் செல்லும்.
""தில்லியின் சக்குர்பூர் பகுதியில் 15 குடியிப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தோம். கரோல் பாக், பட்டேல் நகர், சாதர் பஜார், அசோக் விகார், பஸ்சிம் விகார், பஹார் கஞ்ச் ஆகிய பகுதிகளிலும் இந்த ட்ரோன் மூலமாகக்
கிருமிநாசினி தெளித்தோம். நரேலா பாக் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 2000 பேர் இருக்கின்றனர். அங்கேயும் கிருமி நாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தினோம். நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் எங்களுடைய ட்ரோன்களின் மூலமாகக் கிருமி நாசினி தெளிக்க அழைப்பு வந்திருக்கிறது'' என்கிறார் சாகர்.
இவர்களைப் போலவே கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம், மும்பையிலிருந்து ஐடியா ஃபோர்ஜ், தெலங்கானாவில் இருந்து மாரூட் நிறுவனம் ஆகியவை ட்ரோன்களின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளைச் செய்து வருகின்றன.
மிகப் பெரிய பகுதியை தூய்மைப்படுத்தும் ட்ரோன்களையும், அதிக அளவிலான மக்களின் உடல்வெப்பநிலையைக் கண்டுபிடித்துச் சொல்லும் அகச்சிவப்பு கதிர் கேமரா பொருத்தப்பட்டுள்ள ட்ரோன்களையும் ஐஐடி - கவுகாத்தி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...