கரோனா... மூக்குக் கண்ணாடி...பாதுகாப்பு!
நாம் வீட்டைவிட்டு வெளியே செல்கிறபோது, யாராவது தும்மினால், இருமினால் காற்றில் சிதறுகிற கரோனா வைரஸ் உள்ள சளி மற்றும் நீர்த்துளிகள் நம் கண்களில் படாமல் தடுக்க நாம் அணிந்திருக்கும் கண்ணாடி பயன்படுகிறது


நாம் வீட்டைவிட்டு வெளியே செல்கிறபோது, யாராவது தும்மினால், இருமினால் காற்றில் சிதறுகிற கரோனா வைரஸ் உள்ள சளி மற்றும் நீர்த்துளிகள் நம் கண்களில் படாமல் தடுக்க நாம் அணிந்திருக்கும் கண்ணாடி பயன்படுகிறது. ஆனால் அதேவேளையில் அவை நமது கண்ணாடியின் லென்சில், பிற பகுதிகளில் படிந்துவிடுகின்றன.
அவ்வாறு படிந்துவிடுகிற கரோனா வைரஸ் ரொம்ப நாட்கள் இல்லை... வெறும் நான்கு நாட்கள் மட்டும் லென்சிலேயே உயிர் வாழ்கிறது என ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. கரோனா வைரஸ் பிளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றில் குறைந்தது மூன்று நாட்கள் உயிர் வாழ்கிறது என்று அந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது. அப்படி என்றால், கண்ணாடியில் உள்ள லென்ஸ்களிலும், ஃபிரேம்களிலும் குறைந்தது மூன்று நாட்கள் கரோனா வைரஸ் மூச்சுவிட்டுக் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் 9 நாட்கள் வரை வைரஸ் உயிர் வாழ வாய்ப்புகள் உள்ளன என அவற்றின் வாழ்நாளை நீட்டித்துக் கூறியிருக்கிறார்கள்.
கதவின் கைப்பிடி, சுவர், கணினி கீ போர்ட், மவுஸ் என எல்லா இடங்களிலும் கரோனா வைரஸ் படர்ந்திருக்கக் கூடும். அதனால்தான் நாமும் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்கிறோம். கண், மூக்கு, வாய் பகுதியில் கை போகாமல் மிக மிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.
ஆனால் மூக்குக் கண்ணாடியைத் தொடும்போது மட்டும் இந்த விழிப்புணர்வு நமக்கு ஏனோ இல்லாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் அடிக்கடி தொடும் பொருளாக நாம் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி இருக்கிறது. கரோனா வைரஸ் உள்ள மூக்குக் கண்ணாடியைத் தொட்டுவிட்டு அந்தக் கையால் கண்களைத் தொட்டால், வைரஸ் கண்களின் வழியாக உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யாரும் யோசிப்பதில்லை. கண்ணாடியைத் தொட்ட கையோடு எதைத் தொட்டாலும் வைரஸ் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
பொதுவாக 40 வயது ஆகிவிட்டால் பலர் "ரீடிங் கிளாஸ்' அணிய வேண்டியிருக்கிறது. இந்த ரீடிங் கிளாûஸ வைத்து "படிப்பது' குறைவாக இருந்தாலும், செல், கம்ப்யூட்டர் என்று எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருப்பது அதிகமாக உள்ளது.
சிலர் ஒரு நாளில் பல தடவை கண்ணாடியைக் கழற்றுவதும் மாட்டுவதுமாக இருப்பார்கள். அதே கையோடு கண்களை கசக்குவார்கள். வாயைத் தொடுவார்கள், மூக்கை நோண்டுவார்கள். நோயை உண்டாக்கும் கிருமிகள், வைரஸ்கள் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு இருப்பதைப் பற்றி யோசிக்கவே
மாட்டார்கள்.
எனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், பொது இடங்களுக்குச் சென்று வந்த பிறகு அதைத் தூய்மை செய்வது மிகவும் அவசியம். அதுவும் மிகவும் சரியாக, முறையாகத் தூய்மை செய்ய வேண்டும். அது எப்படி?
கண்ணாடியைத் தூய்மைப்படுத்தும்போது முதலில் செய்ய வேண்டியது, கண்ணாடியை வெதுவெதுப்பான வெந்நீரில் அலசுவதுதான். அப்படிச் செய்யாமல், சோப்புப் போட்டுக் கழுவுகிறேன் என்று யாராவது எடுத்தவுடனேயே சோப்புப் போட்டுத் தேய்க்கத் தொடங்கினால், கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத பொருள்கள் கண்ணாடியின் மேல் பரப்பில் கீறல்களை ஏற்படுத்திவிடும்.
அதற்குப் பிறகு ஒன்றிரண்டு துளி சோப் திரவத்தை லென்சில் விட வேண்டும். அதுபோல கண்ணாடியின் பிற பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான நீரில் அலசி, பின்பு சொரசொரப்பில்லாத, மெல்லிய துணி கொண்டு துடைக்க வேண்டும். இதற்கு கை
களைத் துடைக்கும் காகிதத்தைப் பயன்படுத்தக் கூடாது. அது கண்ணாடியில் மெல்லிய கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடும்.
கண்ணாடி மூக்கின் மேல் தொடுகிற பகுதியில் சாதாரணமாகவே அழுக்கு சேர்ந்திருக்கும். அந்தப் பகுதியைக் கவனத்துடன் தூய்மைப்படுத்த வேண்டும்.
சிலர் கண்ணாடியைச் சுத்தப்படுத்த அதன் மேல் காற்றை ஊதுவார்கள். அதில் உள்ள ஈரப்பதம் புகைபோல கண்ணாடியில் படிந்துவிடும். பிறகு துடைப்பார்கள். கரோனா வைரஸ் காலத்தில் கண்டிப்பாக அவ்வாறு ஊதக் கூடாது. நீங்கள் வெளிவிடும் காற்றில் ஒருவேளை கரோனா வைரஸ் இருந்தால் என்ன செய்வது? "மூக்கு'க் கண்ணாடி என்றாலும் அதன் மேல் மூச்சுவிடக் கூடாது.
கண்ணாடியைத் தூய்மைப்படுத்த சோப்புத்துளிகளுக்குப் பதிலாக, லென்சின் மேல் ஆல்கஹாலையோ, பிற சுத்தப்படுத்தும் பவுடரையோ அதன் மேல் போடக் கூடாது.
கம்ப்யூட்டரில் நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு கணினித் திரையின் ஒளி கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, மூக்குக் கண்ணாடியின் லென்ஸ் பகுதியில் ஒருவித இரசாயனப் பூச்சை பூசியிருப்பார்கள். ஆல்கஹால், பிளீச்சிங் பவுடர் போன்றவை அந்த பூச்சுகளைக் காணாமல் ஆக்கிவிடும்.
"ஆல்கஹால், பிளீச்சிங் பவுடர், சோப் எல்லாம் வேண்டாம். நான் இயற்கை வழியில் சுத்தம் செய்து கொள்கிறேன்' என்று இயற்கை ஆர்வலர்கள் சிலர் எலுமிச்சம் பழச்சாறைத் தடவி சுத்தம் செய்ய முயன்றாலும், கண்ணாடி தன் பூச்சுகளை இழப்பது உறுதி.
எனவே சாதாரண சோப்பும், தண்ணீரும் மட்டுமே கண்ணாடியைத் தூய்மைப்படுத்த போதுமானது.
இப்படி கண்ணாடியைத் தூய்மைப்படுத்தினால் அதில் உள்ள ஸ்க்ரூ துருப்பிடித்துவிடுமே என்று பெரிய அளவில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. துருப்பிடித்தால் வேறு ஸ்க்ரூவை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக இந்த ஸ்க்ரூ உள்ள பகுதியைத்தான் நன்றாகத் தூய்மைப்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...