வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 245
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும்ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும்ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.
இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.
மன்னர் வீரபரகேசரி தன் அமைச்சர்கள் சகிதம்
திரும்புகிறார்.
வீரபரகேசரி: சரி எனதருமை அமைச்சர்களே, உங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கை முழுக்க எட்டிவிட்டீர்களா?
அமைச்சர்கள் ஒருமித்து: ஆம்... மன்னர் மன்னா
வீரபரகேசரி: நான் இன்று நாட்டு மக்களிடம் வானொலியில் பேசியதை வரிக்கு வரி பாராட்டி ட்வீட் போட்டீர்களா?
அமைச்சர்கள் ஒருமித்து: ஆம் சக்கவர்த்தி திருமகனாரே...
வீரபரகேசரி: எமது எதிரிகள் எம்மை விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக தினமும் அவதூறுகளைப் பரப்புகிறீர்களா?
தலைமை அமைச்சர்: மன்னர் மன்னா... அப்பணிகளை நாம் வேலைக்கு அமர்த்தியுள்ள லட்சக்கணக்கான சேவகர்கள் - நம்முடைய hit squad - அவர்கள் வாட்ஸ் ஆப் கேந்திரம் மூலம் செவ்வனே செய்து வருகிறார்கள்.
வீரபரகேசரி: ஹா... ஹா... (பின்னால் திரும்பி)
கணேஷ்
கணேஷ்: மன்னா...
வீரபரகேசரி: இந்த hit squad என்பதற்கு இணையான ஒரு சொல் உள்ளது. அது ஒரு அரேபிய சொல்லில் இருந்து தோன்றியது. அது என்ன சொல்? பதில் சொல்ல உனக்கு ஐந்து நிமிடங்கள் அவகாசம்.
கணேஷ்: மன்னர் மன்னா, இது ரொம்ப ஈஸி. ஹிட் ஸ்குவாட் என்றால் கூலிப்படை என்று தமிழில் சொல்வோமே அதுதான். hitjob என்றால் இப்படி பணத்துக்காக கொலை செய்வது.
வீரபரகேசரி: இதற்கு ஈடான அரேபிய மூலம் கொண்ட ஆங்கிலச் சொல்?
கணேஷ்: Assassin. இந்த சொல்லுக்கும் வாடகைக் கொலையாளி என்றே பொருள். இது சிலுவைப்போரின் போது ஐரோப்பாவில் செயல்பட்ட அரேபிய கொலையாளிகளைக் குறிப்பிட்ட சொல். அவர்கள் hashish எனப்படும் போதை வஸ்துவை உட்கொண்ட பின்னர் கொலை செய்யக் கிளம்பியதால் அவர்களுக்கு hashish eaters எனப் பெயர் விளங்கியது. அது மருவி hashashins ஆகி பின்னர் நவீன ஆங்கிலத்தில் ஹள்ள்ஹள்ள்ண்ய்ள் ஆகியது.
வீரபரகேசரி: சிறப்பு. வழக்கமாக நிறைய நேரமெடுத்து யோசித்து நகம் கடித்து கவலைப்பட்டு பிறகு பதில் சொல்வாயே. இன்று என்னாயிற்று?
கணேஷ்: அந்தப் பெருமை எங்க புரொபஸருக்குத் தான் சேர வேண்டும். அவர் முன்னரே இந்த சொல்லை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்படி புரொபஸர் என்னைப் போன்றவர்களுக்கு கற்றுத்தரும் படியான சூழலை அமைத்த பெருமை மன்னர் மன்னா உங்களையே சேரும்.
வீரபரகேசரி: மிகவும் மகிழ்ச்சி.
ஜூலி (தனக்குள்): அடப்பாவி, வந்து கொஞ்ச நேரத்திலேயே மன்னரை ஜால்ரா அடிக்கக் கத்துக்கிட்டியே!
வீரபரகேசரி: என்ன சொல்கிறார் நாயார்?
ஜூலி மன்னரிடம்: நான் தங்கள் ஆட்சியில் people know which side of the bread is buttered என சொன்னேன்.
வீரபரகேசரி: ஓ... அப்படியா. ஏன் அப்படி நினைக்கிறாய்?
ஜூலி: சர்வ வல்லமை படைத்தவராக ஓர் ஆட்சியாளர் தன்னைக் காட்டிக் கொள்ளும் போது அவருக்குக் கீழே இருக்கும் அதிகாரிகள், சேவகர்கள் தாம் மதிப்பற்றவர் என சுய இரக்கம் கொள்கிறார்கள். அப்போது தமது சுயமதிப்பை உயர்த்த ஒரு வழியாக அவர்கள் தம் தலைவரை விடாமல் ஜால்ரா அடிப்பார்கள். பெரும்பாலான நேரத்தில் இதனால் பலனில்லை என்றாலும் ஓர் உளவியல் ஆறுதல் அவர்களுக்கு இருக்கும். இவர்களை நாம் psychophants என்கிறோம்.
வீரபரகேசரி: சரி, அதற்கு என்ன? நான் இதை சமூகமாக்கலின் ஓர் அங்கமாகவே பார்க்கிறேன். உரையாடலின் போது நீ யாரையாவது பாராட்டாவிட்டால் அவர் உன் பேச்சைக் கேட்பாரா என்ன? இதனை அடுத்து அவரும் உன்னைப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டாயா? அதிகாரம் படைத்தவர்கள் மிகையாகப் பாராட்டப்படும்போது இது தனியாகத் தெரிகிறது என்பது வேறு விசயம்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...