வாங்க இங்கிலீஷ் பேசலாம் 247
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.
இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான். அப்போது to know which side of the bread is buttered எனும் idiomatic expression -ஐப் பற்றி ஜூலி மன்னர் வீரபரகேசரி மற்றும் கணேஷிடம் விவாதிக்கும் சந்தர்ப்பத்தில் வீரபரகேசரி தெர்மோடைனமிக்ஸ் பற்றி குறிப்பிடுகிறார். அதன் அர்த்தமென்ன என கணேஷ் கேட்க அவர் விளக்குகிறார்.
வீரபரகேசரி (கணேஷிடம்): நீ கிரிக்கெட் பார்ப்பாய் எனில், ரிவர்ஸ் ஸ்விங் கேள்விப்பட்டிருப்பாய். வேகமாய் வீசப்படும் பந்தில் ஒரு பக்கம் எச்சில் மற்றும் வியர்வை ஊறி அதிக கனமாய் இருக்குமெனில் அது ஏறுக்குமாறாக ஸ்விங் ஆகும். உள்ளே வரும்படி வீசினால் காற்றில் தடுமாறி வெளியே போகும். வெளியே செல்லும்படி வீசினால் உள்ளே போகும். எப்படி இந்த பந்தின் கனம் சமச்சீரற்று இருக்கிறதோ, அப்படித்தான் ஒரு பக்கம் வெண்ணெய் தடவப்பட்ட ரொட்டியின் கதியும். அதை நாம் காற்றில் விசிறினால் இயற்பியல்படி கனத்த வெண்ணெய் தடவின பக்கமே கீழே செல்லும். இது ரொட்டியின் ரிவர்ஸ் ஸ்விங். இதை விளக்கும் அறிவியல் துறை தான் thermodynamics. இது ஒரு பொருளின் விசை எப்படி காற்றின் ஆற்றல் அதில் செயல்படுவதை வைத்து விளக்க முடியும் எனக் காட்டுகிறது.
அமைச்சர்கள் ஒருமித்து: அபாரம் மன்னா. நீங்கள் ஒரு இயற்பியல் மேதை. கிரிக்கெட்டையும் ரொட்டியையும் இணைத்து யோசிக்கும் அறிவியல் வித்தகர்.
ஜூலி (தனக்குள்): ஆரம்பிச்சிட்டாங்க ஜால்ரா மன்னர்கள்! Fawners, lackeys, toadies, bootlickers, yesmen.
கணேஷ்: ஆங்?
ஜூலி: Fawner, lackey, toady என்றால் வெளிப்படையாகவே காலைப் பிடிக்கும் கேஸ்கள்.
பூட்லிக்கர் என்றால் காலை நக்குபவர். Crawler என்றும் இத்தகையோரை சொல்வார்கள். அதாவது எழுந்துக்கவே முயலாமல் காலைப் பிடிப்பதற்காக ஊர்ந்து போகிறவர்கள். Lickspittle என்றும் சொல்வார்கள். அதாவது அதிகாரத்தில் இருப்பவரின் எச்சிலை நக்கத் தயங்காதவர்கள். bootlicker என்றால் நல்லபெயர் வாங்க அதிகாரம் மிக்கவர்களின் காலை நக்குபவர்கள். முதலாளி சொல்வதற்கெல்லாம் ஆமா சாமி போடுகிறவர்கள் தாம் yesmen.
வீரபரகேசரி: கிரிக்கெட் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது. அண்மையில் என்னுடைய படை குஜராத்தைப் படையெடுத்து வென்ற பிறகு அங்குள்ள ஒரு சிறிய கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைப்பு செய்து அதை உலகின் மிகப்பெரிய மைதானமாக மாற்றும்படி கட்டளையிட்டேன். அதன் கட்டுமானப்பணி பணிமுடிந்து விட்டது.
உலகில் அதிக கொள்ளளவு கொண்ட மைதானம், stadium. முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்தது. இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை உள்ளடக்கும் திறன் படைத்த இந்த இந்திய மைதானமே உலகசாதனை படைத்து நம்முடைய வெற்றிப் பெருமிதமாக இருக்கிறது. ஆனால் இதற்கு என் பெயர் வைக்க வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்.
ஜூலி: ஏன் மன்னா?
வீரபரகேசரி: எனக்கு தம்பட்டம் அடிக்கப் பிடிக்காது. அதனால் என் பெயரை ஞாபகப்படுத்தும்படியாய் "திக்வீரபரகேசரி மைதானம்' எனப் பெயரை சூட்ட முடிவெடுத்து விட்டேன். அடுத்த 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி அங்கே தான் நடக்கப் போகிறது. உனக்கு ஒன்று தெரியுமா, முன்பு இந்திய மைதானங்களின் தரவரிசைப்படி it came last. Now it is no 1.
அமைச்சர்கள் ஒருமித்து கைத்தட்டுகிறார்கள்.
வீரபரகேசரி: கணேஷ், உனக்கு அடுத்த கேள்வி இதில் இருந்து தான் கேட்கப்போகிறேன். வெறுமனே last என்பதற்கும் the last என்பதற்கும் என்ன வித்தியாசம்? He was the last batsman to get out என்பதற்கும் Among the other batsmen he got out last என்பதற்கும் என்ன வித்தியாசம்? பதிலளிக்க உனக்கு ஐந்து நிமிடங்கள் தருகிறேன்.
கணேஷ்: ஐயோ என் தலை போச்சே. (தன் கழுத்தைத் தடவியபடி) கடைசியா ஒரு தடவை தொட்டுப் பார்த்துக்கிறேன்.
ஜூலி : மன்னா நான் அந்த வெண்ணெய் தடவின ரொட்டி பற்றிய வேடிக்கைக் கதையை சொல்லி முடிக்கலியே, அதுக்குள்ள வேற கேள்வி கேட்டுட்டீங்க.
வீரபரகேசரி: ஆமா, நீ கதையைச் சொல்லி முடி. அவன் அதுவரை பதிலை யோசிக்கட்டும்.
கணேஷ் (தனக்குள்): அப்பாடா யோசிக்க டைம் கெடைச்சுது.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...