மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல் அடிப்படையிலும், எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் 23 மார்ச் 2020- இல், 82 மாவட்டங்களில் ஒரு கோவிட்-19 நோய்த் தொற்று இருந்த நிலையில், ஏப்ரல் 28 - ஆம் தேதி, இந்தியாவில் 430 மாவட்டங்கள் குறைந்தது ஒரு கோவிட்-19 நோய்த் தொற்றைப் பதிவு செய்துள்ளது. இது மார்ச் 28 எண்ணிக்கையை விட 301 மாவட்டங்களில் இது அதிகமானதையும் மற்றும் நோயின் பரந்த மற்றும் விரைவான பரவலையும் குறிக்கிறது.
மகாராஷ்டிராவில் 29 மாவட்டங்கள் 100-க்கும் குறைவான கோவிட்-19 நோய்த் தொற்றையும், 1 மாவட்டம் 100-500-க்கும் இடையிலும், 2 மாவட்டங்கள் 500-க்கும் மேலும் பதிவு செய்திருக்கிறது. இதையடுத்து ராஜஸ்தான் (23 <100), குஜராத் (24 < 100), மத்தியபிரதேசம் (25 < 100), தமிழகம் (28 மாவட்டங்கள் 0-50, 4 மாவட்டங்கள் 51-100, 3 மாவட்டங்கள் 101-500 பேருக்கு) கோவிட்-19 நோய்த் தொற்றை ஏப்ரல் 28, 2020 -இல் பதிவு செய்திருக்கிறது.
சில மாநிலங்களில், கோவிட்-19 பரவலின் அளவு அதிகமாக இருந்தது; ஆனால் நோய்தொற்றின் தீவிரம் குறைவாக இருந்தது. உதாரணமாக, பீகாரில், ஒரு மாத காலப்பகுதியில் 14 புதிய மாவட்டங்களில் தான் முதல் கோவிட்-19 நோய்த் தொற்றைப் பதிவு செய்துள்ளது. மற்ற எதுவும் 50 -க்கும் மேற்பட்ட கோவிட்-19 பதிவு செய்யவில்லை. குறிப்பாக பீகார் அதிகமாக மலேரியாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. அதனால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி கூட ஒரு காரணியாக இருக்கலாம்.
நோய் முற்றிய நிலையில் தேடி வரும் மக்களைச் சோதனை செய்வதை விட, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் படி (FITTT Strategy - FIND, ISOLATE, TEST, TREAT and TRACE) மக்களை தேடிச் சென்று பரிசோதனை செய்து பார்த்தால் தான் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரம் தெரியவரும். அதற்கு சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். சோதனைகளை அதிகப்படுத்த வழி தெரியாமல் அரசுகள் தடுமாறி ஏதாவது ஓர் அவசர ஆன்டி பாடி பரிசோதனைக் கருவியை அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்து பரிசோதனை செய்துவிடலாம் என்று ஊரடங்கால் ஏற்பட்ட பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது வரை ஐஇஙத திட்டத்தின் மூலம் அரசு சார்ந்த 288 கோவிட்-19 ஆய்வகங்களை (தப-டஇத RT}PCR (241), TrueNat(41), CBNAAT(06)) முக்கியமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும், தனியார் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து 97, ஆக மொத்தம் 385 சுகாதார PCR ஆய்வகங்கள் இதுவரை ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ளன.
2020 ஏப்ரல் 29 அன்று காலை 9 மணிக்கு ஐ.சி.எம்.ஆர் SARS}CoV}2 மொத்தம் 7,70,764 இரத்த மாதிரிகளை இந்திய அளவில் பரிசோதனை செய்திருக்கிறது. சோதனை தொடங்கப்பட்டதிலிருந்து சராசரியாக, திறம்பட 1000 முதல் 2000 நோயாளிகளின் COVID19 பரிசோதனைகளை, அதாவது ஓர் ஆய்வகத்தில் ஒரு நாளைக்கு தோராயமாக 60 மாதிரிகள் தாம் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பி.சி.ஆர் ஆய்வகத்தின் எதிர்பார்க்கப்படும் திறன் இதுவல்ல. 24 மணி நேரத்தில், 2 பேர் கொண்ட 4 முறை வேலைமாற்றுத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒருநாளைக்கு 370 பரிசோதனைகள் ஒரு PCR ஆய்வகத்தில் செய்ய முடியும். அசாதாரண சூழ்நிலையில் சாதாரணமாகப் பணியாற்றினால், அது விவேகமற்ற செயல். ஒரு அசாதாரண சூழ்நிலையில், தேசத்தின் மக்களை 40 நாள் ஊரடங்கில் வீட்டில் வைத்துவிட்டு விலைமதிப்பற்ற நேரத்தையும், முயற்சிகளையும் வீணாக்க முடியாது.
தரமற்ற பரிசோதனைக் கிட்டை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில் காட்டிய அக்கறையை, நமக்கு இருக்கும் பரிசோதனை செய்யும் வல்லமையைச் செயலாக்கத்திற்கு கொண்டுவந்து, தேவையான மனிதவளம், PCR kit and Consumables கொடுத்து, பாதுகாப்புக் கவசங்களைக் கொடுத்து, பாதுகாப்பு வழிமுறைகளோடு, பாதுகாப்பான ஆய்வகச் சூழலில் இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் 30 நாட்களில் முனைந்திருந்தால், கடந்த 30 நாட்களில் 40 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பை வீணடித்துவிட்டார்கள். இதில் 50%, அதாவது பகலில் மட்டும் 12 மணிநேரம் முழுமையான செயல்பாட்டிற்கு பரிசோதனை செய்திருந்தால் கடந்த 30 நாட்களில் 20 லட்சம் பேருக்கு இந்தியா பரிசோதனை செய்திருக்கும். ஆனால் இந்தியா கடந்த 30 நாட்களில் செய்த பரிசோதனை 7.7 லட்சம் பேருக்குதான்.
ICMR அறிக்கையின்படி, பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் CSIR/DBT/DST/DAE/ICAR/DRDO மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவி பெற்ற அறிவியல், வேளாண் அறிவியல், கால்நடை, மீன்வள அறிவியல், IIT, NIT, IISC, IISER ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட பிற பி.சி.ஆர் ஆய்வகங்களை இதுவரை ICMR சோதனைக்கு உபயோகப்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் மட்டும், 41 ஐ.சி.எம்.ஆர் ஆய்வகங்கள் தவிர, மற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இருந்து 126 -க்கு மேல் பி.சி.ஆர் ஆய்வகங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அப்படி என்றால், ICMR நிறுவிய 288 பி.சி.ஆர் ஆய்வகங்களைத் தவிர்த்து, இந்திய அரசின் பிற ஆராய்ச்சி நிறுவனங்களில் 2 முதல் 3 மடங்கு PCR ஆய்வகங்கள் இருக்கின்றன. ஐ.சி.எம்.ஆரின் 385 பி.சி.ஆர் ஆய்வகங்களை மட்டுமே உபயோகப்படுத்தும் நேரத்தில், இந்தியாவில் மற்ற அறிவியல் ஆராய்ச்சி துறைகள் ஏறக்குறைய 1000 பி.சி.ஆர் ஆய்வகங்கள் உபயோகப்படுத்தபடாமல் வைக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷவர்தன், 31 மே 2020- இல் PCR kit உற்பத்தியை மனதில் கொண்டு ஒரு நாளைக்கு 1 லட்சம் பரிசோதனைகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கிறார். ஆனால் இதுபோன்ற அசாதாரணச் சூழ்நிலையில், 1000 பி.சி.ஆர் ஆய்வகங்களை மத்திய அரசு செயலில் இறக்க முடியுமென்றால், தோராயமான மதிப்பீட்டின்படி, 100% ஆய்வகப் பரிசோதனைக்கு தேவையான விநியோகச் சங்கிலி உறுதி செய்யப்பட்டு, ஆய்வகத்தை 24ல7 க்கு மத்தியஅரசு செயல்படுத்தினால், ஒரு நாளைக்கு சுமார் 3.70 லட்சம் கோவிட்-19 மாதிரிகள் பரிசோதனையை உடனே செய்ய முடியும். எனவே அடுத்த 30 நாட்களில், மே 31, 2020 -க்கு முன்னர், ஒரு கோடி கோவிட்-19 மாதிரிகளை சோதிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இது 30 நாளில் அமெரிக்காவின் 50 லட்சம் சோதனைகள் செய்யும் திறனை விட இரு மடங்கு அதிகமாகும். இந்திய அரசு குறைந்தது 50% PCR ஆய்வகங்களைத் தயார் செய்தால், அடுத்த 30 நாட்களில் 50 லட்சம் மக்களுக்கு கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். WHO இன் வழிகாட்டுதலின்படி FITTT வியூகத்தை செயல்படுத்தி, சோதனைகளை அதிகப்படுத்தி, தனிமைப்படுத்தி சிகிச்சை செய்தால்தான், 3 மே 2020-க்குப் பிறகு இரட்டை ஊரடங்கு காலம் முடிந்த பின்பு COVID-19 பரவலின் 3 வது கட்டத்தில் கோவிட்-19 நோய்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
இந்தப் பரிசோதனைகளை அதிகப்படுத்த முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் இருக்குமானால், இனிமேலும் ஊரடங்கை நீடிப்பது நாட்டில் மிகப்பெரிய பட்டினிச் சாவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். ஊரடங்கை மக்கள் மீறி வெளியே வரும் நிலை ஏற்படும். எனவே, இந்த குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு 500 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டிருக்கும் ஹாட் ஸ்பாட் தளங்களை மட்டும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்து, பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்துவிட்டு 500-க்கும் கீழ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதற்கட்டமாக திறப்பது தான் அறிவார்ந்த செயல். அப்படித் திறந்தால் வேலை செய்யும் உடல் நலம் கொண்ட மக்கள், மருத்துவர்கள் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொண்டு, கண்டிப்பாகத் தங்களை மாஸ்க் போன்றவற்றை வைத்துப் பாதுகாத்துக் கொண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, வேலைக்குச் சென்றால் மட்டுமே, மக்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும், பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும். அப்போது அவர்களைக் கரோனா தாக்கினாலும், சமூக நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) உருவாகும். அப்போது தான் ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த கரோனா பிடியில் இருந்து தப்பிக்க முடியும்.
சரி கரோனா வந்துவிட்டது; நமக்கு என்ன தீர்வு இருக்கிறது? இது வந்தால் சாதாரணமாக 97 சதவிகிதம் மக்கள் இதிலிருந்து மீண்டெழுந்து விடுவார்கள். 3 சதவிகிதம் இறப்புக்கு ஆளாக நேரிடும். கரோனாவிற்கு நோய் தடுப்பு மருந்துகள் (Vaccines) இல்லை என்ற இந்த சூழ்நிலையில், கரோனா நோய் தொற்று முற்றி 4- ஆவது ஸ்டேஜ் போய் பல்லுறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டும் மீளமுடியாமல் மரணமடையும் நோயாளிகளுக்கு ஏதேனும் நம்பிக்கை வெளிச்சம் இருக்கிறதா? ஆம். இருக்கிறது.
ஹைஃபா / இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஒரு பயோடெக் நிறுவனமான ப்ளூரிஸ்டெம் தெரபியூடிக்ஸ் இன்க்., என்ற கம்பெனி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 4 - ஆவது ஸ்டேஜில் முற்றிய நிலையில் சுவாசக் கோளாறு, சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் ஈரல் செயலிழப்பு உள்ளிட்ட பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இறப்பை எதிர்நோக்கியிருக்கும் ஏழு தீவிர கரோனா நோயாளிகள் இந்த மருந்தைப் பெற்ற பின் உயிர் பிழைத்தாக இந்த கம்பெனி 16 ஏப்ரல் 2020- இல் அறிவித்தது. ஏழு நோயாளிகளுக்கு ப்ளூரிஸ்டெமின் அலோஜெனிக் நஞ்சுக்கொடி விரிவாக்கப்பட்ட (PLX - Allogeneic Placental expanded cells) செல்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டன.
கடுமையான கரோனா நோய்தொற்று நிலையில் உள்ள, இறக்கும் தறுவாயில் உள்ள கரோனா நோயாளிகள் உண்மையில் கடுமையான மூச்சு திணறல் நிலைக்குச் சென்று இறந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்றால் கரோனா வைரஸால் தாக்கப்பட்டு, கடைசி நிலையில் மிக உயர்ந்த அளவிலான அழற்சி வீக்கம் (Inflamation) மற்றும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பே நோயாளியின் நுரையீரலைக் கடுமையாக மேக்ரோபேஜ்கள் மூலம் தாக்கும் நிலைக்குச் சென்று இறக்கும் நிலை ஏற்படுகிறது.
ப்ளூரிஸ்டெம் தெரபியூடிக்ஸ் ஸ்மார்ட் செல்களை வளர்ப்பதற்கு முழுநேர பிரசவத்திற்குப் பிறகு "ஒரு நஞ்சுக்கொடியிலிருந்து பிளசென்டால் செல் எடுக்கப்பட்டு ஒரு பிளசென்டாவில் இருந்து 20,000 - க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய ப்ளூரிஸ்டெம் தெரபியூடிக்ஸ் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு PLX (Allogenic PLacental eXpanded cells) செல்களை தேவைக்கேற்ப செயல்பட வடிமைக்கிறது. பின்னர் அவை பரவலான நோய் சிகிச்சை புரதங்களைக் சுரப்பதோடு மட்டுமல்லாமல், அவை உடலில் இருந்து பெறும் சமிக்ஞைகளின் அடிப்படையில் தேவையான அளவில் சுரக்கும் வல்லமை பெற்றவைகளாக உருவாக்கப்பட்டு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
வைரஸ் உடம்பில் பரவி அது பல்கிப்பெருகியவுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் மேக்ரோபேஜ்கள் என்ற ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்களை அந்த வைரஸ் கிருமியை நோக்கி அனுப்பும். ஒரு கிருமி நமது இரத்த ஓட்டத்தில் நுழையும் போது, மேக்ரோபேஜ்கள் வெளி கிருமிகளை கண்டறிந்து, அதைச் சூழ்ந்துகொண்டு தனக்குள் மூழ்கடித்து, அந்த கிருமியை அல்லது உயிரணுக்களை அழிக்கின்றன.
ஆஸ்துமாவில், மேக்ரோபேஜ்கள் ஒரு திரவத்தை தொடர்ந்து வெளியிடும் அது காற்றுப்பாதைகளின் உயர்-பதிலளிப்பைத் (Hyper Responsiveness) தொடங்கும். அது சளியை உற்பத்தி செய்து வீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் நுரையீரலில் ஈசினோபில்களை உருவாக்கும்.
PLX செல்கள் இரண்டு வகையான புரதங்களைச் சுரக்கின்றன. இவை மேக்ரோபேஜ்களால் ஏற்படும் வீக்கத்தைக் (Inflamation) குறைக்கிறது; மற்றொன்று அதிவேகமாக செயல்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைத்து மேக்ரோபேஜ்களின் தாக்கத்தைக் குறைக்கும். கரோனா வைரஸ் நோயாளிகளில் இந்த PLX நஞ்சுக்கொடி செல்கள் நோயெதிர்ப்பு காரணிகளைச் சுரக்கச் செய்வதன் மூலம் உடல் அதன் சொந்த உறுப்புகளைத் தாக்குவதைத் தடுக்கின்றன. அடிப்படையில் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தளர்த்தும் செயலைச் செய்கின்றன. மற்ற புரதங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன. அதனால் மூச்சு திணறல் குறையும். நோய்வாய்ப்பட்டவர்களின் உடல்களில் சிகிச்சை புரதங்களை நோயாளிகளின் நோய் தன்மைக்கேற்ப தானே சுரக்க PLX செல்களில் திட்டமிடப்பட்டு உடலில் செலுத்தப்படுகிறது. அது அந்த கரோனா கிருமிகளின் புரதங்களைச் சிதைத்து அழிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் சோதனை முறையில் இந்த மருந்தைச் செயல்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. US}FDA வின் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற பின்பு மற்ற நாடுகளுக்கும் பயன்பாட்டின் அடிப்படையில் சிகிச்சையை விரிவுபடுத்த எண்ணியிருக்கிறார்கள். இப்படி உலகமெங்கும் நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும், அவற்றைப் பரிசோதித்துப் பார்க்க அந்த நாட்டு அரசுகள் தயாராக இருப்பதாலும் இந்த ஆராய்ச்சிகள் விரைந்து நோயாளிகளைக் காக்க முடிகிறது.
இப்படி நோய் தீர்க்கும் சிகிச்சைக்கு மற்ற நோய்களுக்கு கொடுக்கும் மருந்துகளை மாற்றியமைத்து இணைத்து கொடுத்து நோய் தீர்க்கும் மருத்துவ ஆய்வுகளில் 24 நாடுகள் இணைந்து WHO மூலம் “Solidarity Drive என்ற திட்டத்தின் மூலம் 20 மருந்துகளை மாற்றி அமைத்து சீனாவின் பாரம்பரிய மருந்துகளோடு இணைத்து 2500 கோவிட்-19 நோயாளிகளுக்கு கொடுத்து மருத்துவ ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் முடிவு வந்தால் தான் எந்த எந்த மருந்துகள் சிகிச்சை முறையில் நல்ல பலனை கொடுக்கும் என்பது தெரியவரும். சரி நவீன மருத்துவமுறையோடு சேர்ந்து சீனாவின் பராம்பரிய மூலிகை மருந்துகளை இணைந்து மருத்துவ ஆய்வு செய்யும் போது, ஏன் இந்திய பாரம்பரிய மூலிகை மருந்துகளைச் சோதனை செய்யவில்லை? ஏன் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்? என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து பார்ப்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


