தூய்மையாக்கும் புற ஊதாக் கதிர்கள்!

கரோனா வைரஸ் தொற்று உலகத்தையே கலங்க அடித்துக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருக்க, கரோனா வைரஸிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்.
தூய்மையாக்கும் புற ஊதாக் கதிர்கள்!

கரோனா வைரஸ் தொற்று உலகத்தையே கலங்க அடித்துக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருக்க, கரோனா வைரஸிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். காற்றில் கலந்த வைரஸை முகக் கவசங்களால் தடுக்க வேண்டும். கைகளில் படர்ந்த வைரஸை அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதன் மூலம் விரட்ட வேண்டும். ஆனால் தொட்டமிடமெல்லாம் தொற்றிக் கொள்ளும் வைரஸை, தும்மும்போதெல்லாம் பரவும் வைரஸைத் தடுப்பது எப்படி? அழிப்பது எப்படி?

பெரிய இடப் பரப்பில் பரவியுள்ள கரோனா வைரஸை அழிக்க புற ஊதாக் கதிர் ஒளியைப் (UVC Light) பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் "ஸ்கூல்ஸ் சென்டர் ஆஃப் ரேடியாலஜிகல் ரிசர்ச்' பிரிவின் இயக்குநரான டேவிட் ப்ரென்னர் இது குறித்து தொடர்ச்சியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த புற ஊதாக் கதிர் வெளிச்சம் உதவும் என்கிறார் அவர்.

புற ஊதாக் கதிர்கள் மனிதர்களின் மீது பட்டால் அவர்களுக்கு தோல் புற்று நோய் ஏற்படவும், கண்களில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்ற அச்சம் உள்ளது. அதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும், புற ஊதாக் கதிர்களில் மூன்று வகைப் பிரிவுகள் உள்ளன; அவற்றில் இந்த UVC Light மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிறையப் பேர் உள்ள மருத்துவமனைகள், அங்கு உள்ள கருவிகள், பொருள்கள், சுவர்கள் என எல்லா இடங்களிலும் இருக்கக் கூடிய கரோனா வைரஸை நீக்க வேண்டும். அந்தப் பகுதியைத் தூய்மைப்படுத்த வழக்கத்தில் இப்போது உள்ள எந்த முறையும் தற்போது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள சீனாவிலும், தென்கொரியாவிலும் இப்போது பேருந்துகளையும், ரயில்களையும் தூய்மைப்படுத்த இந்த புற ஊதாக் கதிர் ஒளியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

""அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துத்துறையினர் இந்த புற ஊதாக் கதிர் வெளிச்சத்தின் மூலம் கரோனா வைரஸை அழிக்கும் எங்களுடைய ஆராய்ச்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் அங்கீகரித்தால், விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எல்லாவற்றையும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முடியும்.

ஓர் அறையில் ஒருவர் தும்மும்போது அவரிடம் இருந்து காற்றில் கரோனா வைரஸ் கலக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த அறையில் உள்ள காற்றை மட்டும் அல்ல; காற்று எங்கெல்லாம் பட்டிருக்கிறதோ அந்த இடத்தையெல்லாம் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, கதவு, கதவின் கைப்பிடிகள், படிக்கட்டுகள் என எல்லா இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு மிகச் சிறந்த ஒரே வழி இந்த புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்துவதுதான்.

ஆனால் இந்த புற ஊதாக் கதிர் ஒளியினால் வைரஸை அழிக்கும் முறை, எதிர்காலத்தில் தோன்றக் கூடிய வைரஸ்களையும் அழிக்க வல்லது. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியில் நாங்கள் ஈடுபட்டது கரோனா வைரஸை அழிப்பதற்காக அல்ல. சார்ஸ் நோய் பாதிப்பைத் தொடர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஆனால் அது இப்போது பயன்பட்டிருக்கிறது''
என்கிறார் டேவிட் ப்ரென்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com