தேர்வு செய்யுங்கள்... வேலை முறையை!
பொதுவாக இந்த சமூகத்தில் வேலை கொடுப்பவர்கள், வேலை தேடுபவர்கள் என இரு வகையினர் உள்ளனர்.


பொதுவாக இந்த சமூகத்தில் வேலை கொடுப்பவர்கள், வேலை தேடுபவர்கள் என இரு வகையினர் உள்ளனர்.
இதில், வேலை கொடுப்பவர்கள் தங்களுக்கு எந்தவிதமான வகையில் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ற வகையில் பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.
அதுபோல், இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுபவர்களும் தங்களுக்கு விருப்பமான முறையில் வேலை செய்வதற்கு வசதியான பணியிடங்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
இப்படி, வேலை கொடுப்பவர்களும் வேலை தேடுபவர்களும் தத்தமது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படும் சூழ்நிலை அனைத்துப் பணி இடங்களிலுமே காணப்படுகிறது.
ஒரு பணியிடத்தில் முழு நேரப் பணியாளராகப் பணி செய்ய வேண்டுமா?அது நமக்கு நன்மை தருமா? இல்லையெனில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வேண்டுமா? அதுவும் ஃபிரீலான்ஸ் ஆக பணி செய்ய வேண்டுமா? என்பதெல்லாம் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் தோன்றக் கூடிய எண்ண ஓட்டங்களாக இருந்து வருகிறது.
பொதுவாக ஒரு நிறுவனம் ஒரு பணியாளரை நியமிக்கும்போது மாஸ்டர் - சர்வண்ட் உறவுமுறையில் நியமிக்கலாம். அப்படி என்றால் அந்த ஊழியர் அந்த நிறுவனத்தின் முழு நேர ஊழியராகக் கருதப்பட்டு அவர்கள் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்ற பட்டியலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
அந்தப் பட்டியலின் படி அவர்கள் கண்டிப்பாக வேலை செய்தே ஆக வேண்டும். அதேசமயம் அந்த நிறுவனம் அவர்களுக்கு என சில சலுகைகளையும் அளிக்க வேண்டியது இருக்கும்.
அதுபோல் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்களை நிறுவனங்கள் நியமிக்க முடியும். அப்படி நியமிக்க படுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க இவ்வளவு தருவோம் என அந்த ஒப்பந்தத்தை வழங்கிய நிறுவனம் தெரிவிக்கும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு அந்த பணியை முடித்துச் சென்று விடலாம். சில சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களின் ப்ராஜக்டை முடித்துக் கொடுக்க இவ்வளவு என கூறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் பணியை முடித்த பிறகு அந்த ஒப்பந்தத்தை வழங்கியவருக்கும், அந்தப் பணியைச் செய்தவருக்கும் வேறு எந்த வகையிலான தொடர்பும் நீடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இரவு பகல் பாராமல் வேலை செய்து அந்தப் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம் இந்த ஒப்பந்த அடிப்படையிலான பணிகளில் உள்ளது.
இந்த முறையில் ஒப்பந்தம் வழங்கியவர்களுக்கு பெரிய அளவிலான லாபமும் கிடைக்காத சூழ்நிலை கூட உருவாகலாம். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த பணி தவிர்த்து நிறுவனம் குறித்து எந்தவிதமான அக்கறையையும் காட்ட மாட்டார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதுபோல் ஃபிரீலான்ஸ் பணி என்பதும் பலரால் விரும்பப் பட்டு வரும் பணி முறையாக இருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவிலான பலன்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஃபிரீலான்ஸ் பணிக்கு என்று கால வரையறை இல்லாததால் நமக்கு கிடைக்கும் நேரங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து சம்பாதிக்க முடியும். பல நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. உதாரணமாக நாளிதழ்களில் , பருவ இதழ்களில் பணியாற்றாதவர்கள் கூட, தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி ரிலாக்சாக கட்டுரைகள் எழுத முடியும். இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், அந்த இதழிலும் நல்ல தகவல்களை கட்டுரையாக வெளியிட முடியும். அடுத்து அவர் எப்பொழுது விரும்புகிறாரோ அப்பொழுது வேறொரு விஷயத்தை கொடுத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
இதன் மூலம் நிறுவனமும் தங்களுக்குத் தேவையான விவரங்களைக் கொண்டவர்களை தேர்வு செய்து கொள்ள முடியும். அத்துடன் தங்கள் நிறுவனத்தின் வருவாய்க்கு ஏற்ற வகையிலான ஃபிரீலான்ஸ் பணியாளர்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாக ஃபிரீலான்ஸ் பணியாளர்கள் சொந்த பொருட்களைப் பயன்படுத்தியே அந்த பணியை செய்வார்கள் என்பதுடன் குறிப்பிட்ட காலத்திலும் அதை முடித்து விடுவார்கள். இவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே குறிப்பிட்ட பணிக்காக செயல்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் நிறுவனம் சொல்லும் நேரத்தில், சொல்லும் பணியை செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாஸ்டர் -சர்வண்ட் உறவு நிலையில் பணியாளர்களை நியமித்தால் மட்டுமே அதுசாத்தியமாகும்.
பெரும்பாலான நிறுவனங்கள் ஃபிரீலான்ஸ் பணி செய்பவர்களையே விரும்புகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பணிச் சூழலைப் பொருத்து நிறுவனங்களும், ஊழியர்களும் எந்த வழிமுறை தேவை என்பதை தீர்மானித்துக் கொள்வது நன்மை அளிக்கும் எனவும் அந்த முடிவுகள் கூறுகின்றன.
ஃபிரீலான்ஸ் பணி செய்பவர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.மேலும் ஒரே சமயத்தில் பல நிறுவனங்களிலும் அவர்கள் பணிபுரிவார்கள். அவர்களுக்கு பல் திறன்கள் இருப்பதால் தங்களுக்குத் தேவையான பணிகளைக் கூட அவர்களால் தேர்வு செய்து செயல்பட முடியும். சுருக்கமாகக் கூறினால் ஃபிரீலான்ஸ் பணியாளர்கள் விரும்பும் நிறுவனங்களில் சேர முடியும் . அது போல் நிறுவனங்களும் விரும்பியபடி ஃபிரீலான்ஸ் பணியாளர்களை தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். நிறுவனங்களின் பட்ஜெட்டுக்கும் ஃபிரீலான்ஸ் உதவியாக இருக்கும்.
ஒரு நிறுவனம் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலைகளைக் கொடுத்து அவர்களை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது நிறுவனத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
அதை தவிர்த்து அந்த நிறுவனம் தமது பணிகளைச் செய்வதற்கு ஃபிரீலான்ஸ் பணியாளர்களைப் பயன்படுத்தினால் நிறுவனமும் வளர்ச்சியை எட்டும். பணியாற்றும் ஃபிரீலான்ஸ் பணியாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
எனவே, இளைஞர்கள் நிரந்தர வேலை கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே காலத்தைக் கழித்துவிடாமல், நிரந்தர வேலை கிடைக்கும் வரை ஃபிரீலான்ஸ் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது நிரந்தர வேலைக்கான அனுபவமாகவும், பயிற்சியாகவும்இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...