முழு ஈடுபாடு... கடும் உழைப்பு... விருது!
ஒருவர் ஒரு துறையில் சிறந்து விளக்குவதற்கான அடையாளமாக விருது வழங்கப்படுகிறது.


ஒருவர் ஒரு துறையில் சிறந்து விளக்குவதற்கான அடையாளமாக விருது வழங்கப்படுகிறது. சாதனை, திறமை, ஒருவர் செய்யும் தொழிலின் சிறப்பு, தனித்தன்மை, சமுதாயப் பணி உள்ளிட்டபலவற்றை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு துறையில் பணியாற்றும் ஒருவர், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பணியாற்றுதல், அந்தத் துறையில் தனது திறமையை மேலும் மேலும் வளர்த்தல், அந்தத் துறையை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்தல், அத்துறை மூலம் செய்யப்படும் அவர் செய்யும் சமுதாயப் பணி உள்பட பல விஷயங்களை ஆய்வு செய்து, விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் - 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, பள்ளி ஆசிரியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து, டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
அதுபோன்று 2019-2020 ஆம் கல்வியாண்டில், தொழில் நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் , தேசிய அளவிலான விஸ்வேஸ்வரய்யா சிறந்த பொறியியல் ஆசிரியர் விருதினை செப்டம்பர் 15 - ஆம் தேதி வழங்கியுள்ளது.
இந்த விருது இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.நந்தகுமார் பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பார்மஸி கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறந்த பொறியியல் ஆசிரியர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக
அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் வேறு எந்த பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும் இந்த விருதினைப் பெற வில்லை. இது குறித்து எம்.நந்தகுமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""தலைசிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பெயரில் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜூகேசன் என்ற அமைப்பு இந்த ஆண்டு முதல் விருது வழங்க முடிவு செய்தது. அதற்கான தேர்வுகள் இணையதளம் மூலமும், காணொலி காட்சி மூலமும் நடத்தப்பட்டன. அதன் மூலம் விருதுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யட்டனர்.
கல்லூரியில் புதுமையான முறையில் கற்பித்தல், புதிய கற்றல் நடைமுறைகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் திறன் மேம்பாடு, கல்லூரியில் செய்யப்படும் ஆய்வுகள், நிறுவன மேம்பாட்டிற்காக அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியைச் சிறப்பாகப் பயன்படுத்துவது, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள், மாணவர்கள் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்து இந்த விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்கிறார்கள்.
எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதற்கு இந்தியாவில் ஆப் செட் அச்சு ஆய்வு படிப்புக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியது, தமிழ்நாட்டின் தொழில் கழகம் சார்பில் அச்சுக்கலை குறித்த சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப் படிப்புக்கு பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் குழு தலைவராக இருமுறை செயல்பட்டது, இணையதளம் மூலம் அச்சு பாடத்திட்டங்களைத் தயார் செய்து கொடுத்தது, மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது, மாணவர்களுக்கு கல்வியுடன் ஆங்கில மொழித்திறனை வளர்த்தது, அச்சுக்கலை தொடர்பாக ஆங்கிலத்தில் 7 புத்தகம் எழுதி வெளியிட்டது, சர்வதேச, தேசிய அளவிலான அச்சுக்கலை கருத்தரங்கில் பங்கேற்றது, அச்சுக் கலை தொடர்பாக ஆய்வு கட்டுரை வெளியிட்டது மாணவர்களுக்கு சுய தொழில் செய்ய வழிகாட்டியது என பலவற்றைச் சொல்லலாம்.
இந்த விருதினை வழங்கிய குழுவினர் என் பணிகளை ஆய்வு செய்தனர். இணையதளம் மூலம் என்னிடம் நேர்காணல் நடத்தினர். பாடத்திட்டங்களை உருவாக்கும் திறன், பேசும் திறன், தொழில் சார்ந்த அனுபவங்கள், சமுதாயப்பணிகள் உள்ளிட்டவை குறித்து கேள்வி கேட்டனர்.
இந்த விருது செப்படம்ப ர் 15 - ஆம் தேதி மத்திய அரசின் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிக் காட்சி மூலம் இந்த "தேசிய சிறந்த பொறியியல் ஆசிரியர்' விருதினை வழங்கினார். இதில் விஸ்வேஸ்வரய்யா உருவம் பொறித்த பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
எந்த ஒரு துறையில் இருந்தாலும், அதில் முழு ஈடுபாடு, ஆர்வம், அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது, சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கம் என வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட்டால் அந்தத் துறையில் சாதனைகளைச் செய்து வெற்றி பெற்று விருதினைப் பெறலாம்'' என்றார் நந்தகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...