உலக அளவில் வளரும் தொழில்நுட்பம்!
"ரயில் பயணத்தின்போது பயணிகளின் முகத்தை பரிசோதகர் ஸ்கேன் செய்து சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது' என்ற செய்தி விரைவில் நாளிதழ்களில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு


"ரயில் பயணத்தின்போது பயணிகளின் முகத்தை பரிசோதகர் ஸ்கேன் செய்து சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது' என்ற செய்தி விரைவில் நாளிதழ்களில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில், தொழில்நுட்பம் கணிக்க முடியாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இணைய தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நான்காம் தலைமுறை அலைக்கற்றை (4ஜி) தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. சில நாடுகள் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன. சில வளர்ச்சியடைந்த நாடுகள் ஆறாம் தலைமுறை அலைக்கற்றைக்கான முதல்கட்ட ஆய்வுகளைத் தொடங்கி விட்டன.
இவ்வாறான சூழலில், சிங்கப்பூர் புதிய ரக தொழில்நுட்பத்தை அரசின் சேவைகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசின் சேவைகளைப் பெறும் நபர்களின் முகத்தை ஸ்கேன் செய்து அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் நடைமுறையை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முக அடையாளத்தை உறுதி செய்யும் தொழில்நுட்பம் புதிதல்ல. அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதற்கும் செயலிகளுக்குள் உள்நுழைவதற்கும் அத்தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சில நிறுவனங்கள் பணியாளர்களின் வருகையைக் கண்காணிப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், அரசின் சேவைகளைப் பெறுவதற்கு முக அடையாளத்தை உறுதி செய்யும் நடைமுறையை உலகில் முதன் முதலாக அமல்படுத்தும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. இந்த நடைமுறையை மக்களின் தேசிய அடையாள அட்டையுடன் சிங்கப்பூர் அரசு இணைத்துள்ளது.
இந்த நடைமுறையின் மூலமாக அரசு இணைய வழியில் வழங்கும் சுமார் 500 சேவைகளை எந்தவித கடவுச்சொல்லின் தேவையும் இல்லாமல் மக்கள் பெற முடியும். முக அடையாளத்தை உறுதி செய்வதன் மூலமாக மக்கள் 180 அரசு
மற்றும் தனியார் வலைதளங்களில் உள்நுழைய முடியும்.
இந்த நடைமுறையை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சிங்கப்பூர் அரசு முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தி வந்தது. அதையடுத்து, அரசின் இணைய வழிச் சேவைகளை மக்கள் முக அடையாளத்தைப் பயன்படுத்தி எளிதில் பெறும் வகையில் மென்பொருள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்கான பொறுப்பை பிரிட்டனைச் சேர்ந்த ஐபுரூவ் என்ற நிறுவனத்திடம் சிங்கப்பூர் அளித்தது.
இந்த நடவடிக்கையில் பிரிட்டன் நிறுவனத்துக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த தொப்பான் ஈக்வரியா நிறுவனமும் உறுதுணை புரிந்தது. சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய முக அடையாளத்தை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தைப் புகைப்படத்தின் உதவியுடன் ஏமாற்றிவிட முடியும். ஆனால், ஐபுரூவ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் புகைப்படம் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ முறைகேட்டில் ஈடுபடுவது கடினம்.
அதேபோல், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் பயனாளர்களின் தகவல்களைத் தனியாகச் சேமித்து வைக்க முடியாது. அரசு வழங்கும் தரவுகளின் அடிப்படையில் பயனாளர்களின் முக அடையாளத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யும் நடவடிக்கையை மட்டுமே நிறுவனங்களால் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அதிக அளவிலான பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையின் அடிப்படையில், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் முக அடையாளம் விமான நிலையத்தில் சோதனை செய்யப்படவுள்ளது. சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட எவராவது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதைக் கண்டறிவதற்கு இந்த நடைமுறை உதவும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி அரசின் உதவிகளையும் சேவைகளையும் பெறுபவர்களைக் கண்டறியவும் இத்தகைய தொழில்நுட்ப நடைமுறை பெருமளவில் உதவும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பயனாளரின் முகத்தை அடையாளம் காணும் நடவடிக்கைக்கும் (ஃபேசியல் ரெகக்னிஷன்) உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கும் (ஃபேசியல் வெரிஃபிகேஷன்) ஒரே மாதிரியான வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. எனினும், அவற்றுக்கிடையே முக்கிய வேறுபாடு உள்ளது. முகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பயனாளர்களுக்கு ஏதேனும் பலன் கிடைக்கும்.
உதாரணமாக அவர்களின் முக அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு அறிதிறன்பேசியைப் பயன்படுத்த முடியும் அல்லது அரசின் சேவைகளைப் பெற முடியும். இது குறிப்பிட்ட நபருடன் மட்டுமே தொடர்புடையது.
ஆனால், முகத்தின் அடையாளத்தை மட்டும் காணும் நடவடிக்கையானது, பலரைச் சோதனை செய்து அவர்களில் ஒருவரையோ அல்லது குறிப்பிட்ட நபர்களையோ தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது.
இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட முக மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து நபர்களின் முக அடையாளத்தைக் கண்டறிவதே அடிப்படையாக உள்ளது.
சிங்கப்பூரில் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கும், வரி செலுத்துவதற்கும், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கும் பயனாளர்களின் முக அடையாளத்தைப் பயன்படுத்தும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது.
சிங்கப்பூர் அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு நிறுவனமும் மக்களின் முக அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட முடியும். அதே வேளையில், அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் முக அடையாளத்தை உறுதி செய்யும் முறையானது, சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், முக அடையாளம் உள்ளிட்ட தனிநபர்களின் தகவல்களைத் திருடி பலர் முறைகேட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வெவ்வேறு சேவைகளுக்காக
ஃபேசியல் வெரிஃபிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. சீனாவில் இணையவழி பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பத்தை அலிபாபா நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும்காலம் வெகு தொலைவில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...