

கரோனா தீநுண்மி தொற்றுநோய் உலக வாழ்க்கையை மட்டும் புரட்டிப் போடவில்லை, மக்களின் வேகத்தையும் ஊக்கத்தையும் தரைமட்டமாக்கியுள்ளது.
பலருடைய வாழ்க்கையில் கரோனாவை விட மிகவும் மோசமான பெருந்தொற்றாக தோல்வி மாறிவிடுகிறது. இது தனிமனிதமுன்னேற்றத்திற்கு மனரீதியாக பெரும் தடைக்கல்லாக நிலைத்து விடுகிறது.
அப்படியானால், தோல்வியில் இருந்து விடுபடவே முடியாதா? தோல்வியில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பு மருந்து கிடையாதா? என்று ஏங்குபவர்கள் உண்டு. தோல்வியை எதிர்கொள்ளும் பயணமே வெற்றியை நோக்கி நடைபோடுகின்றன. அது எப்படி?
தோல்வியே மருந்து:
1721-ஆம் ஆண்டில் இருந்து தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து முறை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்தமுறையில் பெரும்பாலான மக்கள் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடிந்தாலும், அந்நோயின் பிடியில் சிக்காமல் தப்பிக்க முடியவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியம்மை நோய் உலகை உலுக்கி வந்தது. மாட்டம்மையின் கிருமிகள் கொண்ட பாலை எடுத்து பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உட்செலுத்தியபோது, பலரும் குணமாகி வந்ததால் கிராம மக்கள் அதையே பயன்படுத்தத் தொடங்கினர். கிராம மக்களின் "நம்பிக்கை'யை அடிப்படையாகக் கொண்டு 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, நோய்க்கான கிருமியே நோய்க்கான மருந்தாகப் பயன்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து 1798-இல் உலகிற்கு அறிவித்தார் எட்வர்ட் ஜென்னர். நோய் எதிர்ப்பு அல்லது தடுப்பு மருந்தின் தந்தை என்று போற்றப்படும் எட்வர்ட் ஜென்னரின் கூற்றுப்படி,"சிக்கலே சிக்கலுக்கான தீர்வு',"தோல்வியே தோல்விக்கான மருந்து' என்பதை உணரலாம்.
தோல்வி வெற்றியின் நண்பன்!
1914-ஆம் ஆண்டு தொடங்கி தான் இறந்த 1956-ஆம் ஆண்டுவரை உலகப்புகழ்பெற்ற ஐ.பி.எம். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர் சர்.தாமஸ் ஜே.வாட்சன். இவர், தனது நிறுவனத்தைக் கட்டமைக்க, வளர்த்தெடுக்க, வெற்றிமுகட்டில் நிலைநிறுத்த ஏராளமான தோல்விகளையும், பின்னடைவுகளையும் கண்டவர். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுபோகாதவர். "வெற்றிக்கான ஒரு சூத்திரத்தை என்னிடம் கேட்டீர்கள் என்றால்? அது மிகவும் சுலபம் என்பேன். உங்களின் தோல்வியை இரட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாகப் பார்க்கிறீர்கள். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம் அல்லது அதில் இருந்து கற்றுக் கொள்ளலாம். அதனால் தைரியமாகத் தவறுகளைச் செய்யுங்கள். என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள். தோல்வியில் இருந்து தான் நீங்கள் வெற்றியைக் கண்டெடுக்கமுடியும்' என்பது சர்.தாமஸ் ஜே.வாட்சனின் அனுபவத்தில் கண்டெடுத்த கருதுகோள்.
தவிர்க்கக் கூடாத தோல்வி:
1306 முதல் 1329-ஆம் ஆண்டு வரையில் ஸ்காட்லாந்து நாட்டின் மன்னராகப் புகழ்பெற்று விளங்கியவர் ராபர்ட் தி புரூஸ். இவரது வாழ்க்கையே ஒரு பாடம். ஸ்காட்லாந்து நாட்டை எதிரிகளுக்குப் பறிகொடுத்து, துவண்டிருந்த ராபர்ட் தி புரூஸ் மன்னர், மீண்டும் படைகளைக் கட்டிக்கொண்டு தனது நாட்டை மீட்க போர் புரிந்தான். அந்த பெரும்படையை எதிரி படைகள் தோற்கடித்துவிட்டன. தோல்வி தந்த வலியால் துவண்டிருந்த மன்னன், மீண்டும் நம்பிக்கை கொண்டு, படைகளைத் திரட்டி இழந்த தனது நாட்டை மீட்க போர் புரிந்து, மீண்டும் தோல்வியைத் தழுவினான்.
மறுபடியும் ஊக்கம் பெற்று போர் புரிந்து தோல்வியைத் தழுவினான். இப்படி 8 முறை பெரும்படைகளுடன் போர்புரிந்தும் வெற்றி பெற முடியாமல் சோர்ந்துவிட்டான். தனது நாட்டை மீட்க முடியாத இயலாமையை நினைத்து வருந்தினான்.
மன்னன், மகுடம், மாண்பமை, மாளாத பெருமைகளை இழந்து நின்ற ராபர்ட் தி புரூஸ், உயிர் பிழைக்க காடுகளில் ஓடியாடி, குகையில் ஒளிந்துகொண்டான். மனத்தளர்வுற்று, நம்பிக்கை இழந்து, ஊக்கம் குலைந்து, உற்சாகம் சிதைந்து, தோல்வியால் மனம் நொறுங்கிக் கிடந்தான்.
விரக்தியின் விளிம்பில் இருந்த அவன், குகையின் சுவரில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலந்தியைக் கவனித்தான். வலையைப் பின்னிக் கொண்டிருந்த சிலந்தி, இருமுனைகளை மட்டும் இணைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. விடவில்லை முயற்சியை. வலையை இணைக்க, அது அறுந்து போக; மீண்டும் வலையை இணைக்க, அது அறுந்துபோக....இப்படி பலமுறை நிகழ்ந்தும் வலையை இணைக்கும் வேலையை மட்டும் சிலந்திவிடவே இல்லை. இறுதியில் சிலந்தி வலையும் முழுமையடைந்தது. இது ராபர்ட் தி புரூஸ் மன்னனின் மனதைப் புரட்டிப்போட்டது. அறுந்த இழைகளை இணைக்கும் முயற்சியில் சிலந்திக்கு கை கொடுத்ததே விடா முயற்சிதான். அறுபட அறுபட ஒட்ட வேண்டும்; விழ விழ எழ வேண்டும்... சிலந்தியால் முடிந்தது நம்மாலும் சாத்தியமாக வேண்டும் என்ற எண்ணம் ராபர்ட் தி புரூஸ் மனதில் எழுந்தது. இழந்த படைகளை மட்டுமல்ல ஊக்கத்தையும், முயற்சியையும் மீளப்பெற்றான். அது இழந்த நாட்டை அவனுக்கு மீட்டுத்தந்தது.
சறுக்கும் தோல்வி:
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னெளவைச் சொந்த ஊராகக் கொண்ட குஞ்சன் சாக்சேனாவுக்கு விமானியாக ஆசை. விமானியாக பெண்களுக்கு வாய்ப்பில்லை. முயற்சி... விடாமுயற்சி எடுத்து, 1994-இல் குறுகிய சேவை ஆணையத் தேர்வெழுதி வெற்றி பெற்று இந்திய விமானப்படையில் சேர்ந்துவிட்டார். ஆனால், விமானம் ஓட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை. நல்லவேளையாக 1996-இல் பெண்களுக்கு விமானியாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. உற்சாகமடைந்த குஞ்சன் சாக்சேனாவுக்கு இந்தியாவின் போர்விமானமான சீத்தா ஹெலிகாப்டரை இயக்கும் வாய்ப்பு கண்ணில் பட்டது. அந்த தேர்வுக்குச் சென்றபோது, விமானிக்கான உடல்வாகும், எடையும் இல்லை என்று கூறிவிட்டார்கள். குஞ்சன் சாக்சேனா பருமனாக இருப்பதாக வாய்ப்பை நிராகரித்துவிட்டார்கள். விடாமுயற்சியைக் கையில் எடுத்த அவர் கடுமையான பயிற்சியின் மூலம் ஹெலிகாப்டர் விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆண்களால் நிரப்பப்பட்டிருந்த விமானிகள் அறை, குஞ்சன் சாக்சேனாவைப் பெண்ணாக பார்த்து விமானியாகச் செயல்படுவதில் பல தடைகளை உருவாக்கியது. ஆண் விமானிகளுக்கு இடையே "பெண்' விமானியை ஏற்க ஆண் மனப்பான்மை மறுத்துவிட்டது. இருந்தாலும், குஞ்சன் சாக்சேனா தனது முழுத்திறனை வெளிப்படுத்த ஓயாமல் உழைத்தார்.
1999-இல் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் கார்கில் போர் மூண்டது. இப்போரில் பணிபுரியும் வாய்ப்பு குஞ்சன் சாக்சேனாவுக்கு வாய்த்தது.
போரில் காயமடைந்த, உயிரிழந்த வீரர்களை போர்க்களத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்துவரும் வேலையில் இடைவிடாது ஈடுபட்டார். ஸ்ரீநகரில் முகாமிட்டு திறம்பட பணியாற்றிய குஞ்சன் சாக்சேனா, கார்கில் பெண் என்ற நீங்காபுகழ்பெற்று, வரலாற்றில் நிலைத்திருக்கிறார். தோல்வியை தழுவும்போது பிறக்கும் விடாமுயற்சி, வெற்றி முகம் காட்டும். தோல்வியே வெற்றியின் அறிகுறி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.