

டிஜிட்டல் டெக்னாலஜிக்கு உட்படாத துறைகளே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் கண்ணுக்குத் தெரியாமல் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. புதிய தொழில்நுட்பம், தயாரிப்புகள், பொருள்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை பரந்துபட்டதாக இருக்கும்.
குறிப்பாக வேலைவாய்ப்புச் சந்தையில் தேவை அதிகரித்துவரும், பொருட்களின் இணையம், கட்டச்சங்கிலி (பிளாக்செயின்), செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், பெருந்தரவுகள் (பிக் டேடா), தரவுப் பகுப்பாய்வு (டேடா அனலிட்டிக்ஸ்) போன்றவற்றில் கல்வியை மேம்படுத்திக் கொண்டால்,
வெற்றிகரமான எதிர்காலம் உறுதி.
குறிப்பாக, தரவுப் பகுப்பாய்வாளர், விளையாட்டு மேம்பாட்டாளர், தகவல் தொழில்நுட்ப ஆலோசகர், வெப் டிசைனர், அப்ளிகேஷன் டிசைனர் போன்றவை தவிர, மேலும் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பொறியியல் பட்டமும், சரியான திறன்களும் இணைந்திருந்தால், பொறியாளர்களுக்கு வானமே எல்லை. அப்படிப்பட்ட உயர்தர வேலைவாய்ப்புள்ள சில சிறப்புத் திறன்களைக் காண்போம்:
செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்):
மனிதர்களோடு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யும் திறன் படைத்த இயந்திரங்களின் திறனே செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படுகிறது. முன்னனுபவங்களில் இருந்து கற்றறிவதோடு, மனிதர்களைப் போல வேலைகளை கணினிகள் செய்து முடிக்க வேண்டும். ஒலியைப் புரிந்துகொண்டு உதவியாளராகச் செயல்படுவது முதல் வாகனங்களைத் தானியங்கியாக இயக்கி ஓட்டுவது வரையிலான பற்பல பணிகளை கணினிகளே செய்வதுதான் செயற்கை நுண்ணறிவு. ரோபோக்கள், தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள், டிரோன்கள், விடியோ கேம்கள், ஆன்லைன் விளம்பர மேலாண்மை, ஸ்மார்ட் வீட்டுக்கருவிகள் போன்ற பலவற்றை செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இயந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங்):
தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டைமுழுமையாக மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் இயந்திரக் கற்றல். செயற்கை நுண்ணறிவின் ஒரு கிளை. ஆய்வு, ஆணை அல்லது அனுபவத்தின் மூலமாகப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு உணரி மற்றும்/அல்லது தரவுத்தளத்தில் உள்ள
தரவுகளைச் செயல்படுத்தி, குறிப்பிட்ட வேலைகளை முடிப்பதற்காக நிரல்படுத்தப்பட்டிருந்தாலும், அதையும் மீறி துல்லியமான முன்கணிப்புகளை வரையறுத்து கணினிக்கு கற்றுக் கொடுப்பதே இயந்திரக் கற்றலாகும்.
அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ப உள்ளீடு செய்யப்படும் பெருமளவிலான தரவுகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களில் ஈடுபடுத்திக்கொள்வதும் இயந்திரக் கற்றலாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவத்தைக் கண்டுபிடித்தல், வாக்கிய மொழிபெயர்ப்புகள் சாத்தியமாகின்றன.
சேர்க்கை உற்பத்தி(அடிட்டிவ் மேனுபேக்சரிங்):
முப்பரிமாண அச்சாக்கம் (3டி பிரிண்டிங்)அல்லது சேர்க்கை உற்பத்தி என்பது முப்பரிமாணப் பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எண்ம வடிவமைப்பின் மூலம் திடப்பொருட்களை முன்கூட்டியே கணித்து, அதன்படி தொழிற்சாலைகளில் உற்பத்தியைச் சாத்தியமாக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தின் வாயிலாக லேசான, வலிமையான இயந்திர பாகங்களையும், கட்டமைப்பையும் உருவாக்க இயலும்.
எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப் பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். சுகாதாரம், மருந்தியல், கட்டுமானம், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு, விமானவியல், தானியங்கி வாகனங்கள் போன்ற பல தொழில்களில் சேர்க்கை உற்பத்தி முறைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுவருகிறது.
கட்டச்சங்கிலி (பிளாக்செயின்):
வங்கி, காப்பீடு, விருந்தோம்பல், சில்லறை வர்த்தகம், சுகாதாரம், மருந்தியல் உள்ளிட்டபல துறைகளில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவரும் தொழில்நுட்பம் கட்டச்சங்கிலி ஆகும்.
கட்டச்சங்கிலி, பல ஏடுகள் அல்லது கட்டங்களால் ஆனது. தகவல்கள் ஒவ்வொரு ஏட்டிலும் (கட்டத்திலும்) எழுதப்பட்டு, அவை சங்கிலிபோல இணைக்கப்பட்டிருக்கும். சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம் போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு ஒரு தகவலை அழிப்பதோ, அல்லது மாற்றுவதோ இதில் கடினமானது.
ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் கணுக்கள்(நெட்வொர்க் நோட்ஸ்) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் வாயிலாகவும் சரிபார்க்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம்; தருகிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை கணுக்களும், பராமரிப்பாளர்களும் உறுதி செய்வார்கள். இடம் யாருக்குச் சொந்தம்,
எப்போது பரிமாற்றம் நடந்தது போன்றவை அதிநவீனக் கணினி மூலமாக உறுதி செய்யப்படும். இவ்வாறு பரிமாற்றம் உறுதிசெய்தபின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது. சொத்து மேலாண்மை, பணப் பட்டுவாடா போன்ற அனைத்துவகை செயல்பாடுகளையும் சீரமைக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பம் இது. இதன் மூலமாக இடைத்தரகர்களின் தேவை நீங்குகிறது.
பொருட்களின் இணையம்:
ஸ்மார்ட் கடிகாரம் முதல் ஸ்மார்ட் தொலைக்காட்சி வரையில் நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலான பொருட்களின் செயல்பாட்டில் பொருட்களின் இணையத்தின் பங்களிப்பு இருப்பதைக் காண முடியும். வாடிக்கையாளரின் அணுகுமுறை, பயன்பாடு, முன்னுரிமை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திரை மறைவில் இருந்து துல்லியமாகக் கண்காணித்து, நமக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை அளிக்க வல்லது பொருட்களின் இணையத் தொழில்நுட்பம்.
பொருட்களின் இணையம் என்பதில் அந்தப் "பொருள்', இருதய கண்காணிப்புக் கருவியாகவும்; தானியங்கி வாகனத்தில் எரிபொருள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் உணரியாகவும் (சென்சார்), இணைய நெறிமுறை முகவரியுடன் (இன்டர்நெட் புரோட்டோகால் அட்ரஸ்) இணைக்கக்கூடிய அனைத்து வகையான பொருள்களையும் குறிக்கும்.
மனிதனில் இருந்து மனிதன் அல்லது மனிதனில் இருந்து கணினிக்கு எந்தப் பரிவர்த்தனைகளும் இல்லாமல் வலைப்பின்னல் (நெட்வொர்க்) வழியாக தரவுகளைச் சேகரிக்கவும், பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்புள்ள தொழில்நுட்பமே பொருட்களின் இணையமாகும்.
கணினி உதவியுடன் செயல்படக் கூடிய பல்வேறு வகையான பொதுப் பயன்பாட்டுப் பொருட்களுக்கு, பொருட்களின் இணையம் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் அத்தியாவசியமாகிவிடும்.
இதுவரை பார்த்த பல்வேறுஅதிநவீன, எண்ம அடிப்படையிலான, அறிவியல் முன்னேற்றத் தொழில்நுட்பங்களே எதிர்காலப் பொறியாளர்கள் செயலாற்றக்கூடிய தொழில்நுட்ப அகம் ஆகும்.
இத்துறைகளில் அறிவியல்சார் மனப்பான்மை உள்ள, தொழில்நுட்பத்தின் மீது தணியாத தாகம் கொண்ட, சிறப்புத்திறனும், ஆழ்ந்த அறிவும் கொண்டவர்
களுக்கு நம்பவே முடியாத எண்ணற்ற வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.