தனிமை... வெற்றிக்கு உரம்!

கல்வி வெறுமனே வேலையை மட்டும் கற்பிக்கக் கூடாது; அது வாழ்க்கையையும் கற்பிக்க வேண்டும்.
தனிமை... வெற்றிக்கு உரம்!

கல்வி வெறுமனே வேலையை மட்டும் கற்பிக்கக் கூடாது; அது வாழ்க்கையையும் கற்பிக்க வேண்டும்.

- டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்

""இப்படி தனியாவே உட்கார்ந்திருந்தா பைத்தியம்தான் பிடிக்கும். வெளிய போயி... மனுஷ மக்கள்னு பார்த்துட்டு... நாலு இடத்துக்கு போயிட்டு வா'' என்று பெரியவர்களும், நண்பர்களும் எப்போதாவது, யாரிடமாவது சொல்லிக் கேட்டிருப்போம். எப்போதும் பரபரப்பாக, மனிதர்களோடும் ஏதாவது காரியத்தோடும் இயங்கிக் கொண்டே இருப்பதுதான் நேர்மறையானது மற்றும் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கான வழிமுறை என்கிற பொதுவான புரிதலோடு சொல்லப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், தனிமை... பலர் சொல்வதுபோல அவ்வளவு எதிர்மறையானதா? நாசகரமானதா?

பலர் தனிமையில் மெளனவிரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அவர்களது சிந்தனைக்கு கடிவாளம் போடாமல் கட்டவிழ்த்துவிட்டு அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் சிரங்கு வந்தவன் கைபோல தங்களது அலைபேசியைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பார்கள். வள்ளலார் சொன்ன, "தனித்திரு, விழித்திரு, பசித்திரு' என்பதெல்லாம் மனதையும் செயலையும் சேர்த்தே கட்டுப்படுத்துகிற தனிமையைத்தான்.
"தனிமை ஆபத்தானது, அபாயமானது' என்பதெல்லாம், துயரத்தில், ஏமாற்றத்தில், துக்கத்தில், விரக்தியில் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்து; அனுபவம். தனிமை - அழகானது, ஆழமானது, அதற்கும் மேலாக, தனிமை உண்மையானது என்பதை உணர்ந்தவர்கள் அதை அவர்களது வளர்ச்சிப் பாதைக்கு முழுவதுமாக வித்திட்டிருக்கிறார்கள்.
தனிமை, ஒருவனை தன்னைத்தானே உணர வைக்கிறது என்பதைப் புரிந்தவர்கள், அதிலும் சொல்லிப் புரியவைக்க முடியாத மகிமை கொண்ட இரவின் தனிமையை அனுபவித்திருப்பவர்கள் பலருக்கு முன்னுதாரணமாக முன்னேறிக் காட்டியிருக்கிறார்கள். தனிமையில்
தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு இந்த உலகிற்கே கலங்கரை விளக்கமாக ஒளி வீசியவர்களின் வாழ்க்கைக் கதைகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன.
பல ஆண்டுகால தனிமைதான் கெளதமனை, புத்தர் ஆக்கியது. மகாவீரரின் கதையும் அப்படியே. இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல ஆண்டுகள் அவர் எங்கிருந்தார், எப்படியிருந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை என்பதில் இருந்தே தெரிகிறது, அது அவரது தனிமையான காலகட்டம் என்பது.
தியானம் என்பது கூட எண்ணத்தாலும், செயலாலும் தனித்து இருப்பதுதானே? இதை உணர்ந்து உள்வாங்கி ஞானிகளாகவும், சித்தர்களாகவும் ஆனவர்களைப் பற்றிய செய்திகள் ஆன்மீக வரலாற்றில் நிறையவே இருக்கின்றன.
சாதாரண கல்வித்தகுதி மட்டுமே பெற்றிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரானது, அவரது நீண்ட நெடிய ஆன்மீகத் தனிமை அனுபவத்திற்குப் பிறகே.
புதிய உயிர்களை ஈன்றெடுக்கும் பிரசவ நிகழ்வுகள், மனிதர்களைத் தவிர அனைத்து உயிர்களுக்கும் ஆள் அரவமற்ற தனிமையிலேதான் நடந்தேறுகிறது. மனிதர்களுக்குத்தான் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவி தேவைப்படுகிறது.
தன் முட்டைகளைக் குஞ்சுகளாக்க அடைகாக்கும் கோழி முதல் பிரம்மாண்டமான யானை ஒன்று குட்டி போடுவது வரை... எல்லாமே தனிமையிலேதாம் நடந்தேறுகின்றன. அந்த வகையில் தனிமை என்பது பல அற்புதங்களைச் செய்யும் தொழிற்சாலை. அது பல உயிர்களை, ஆற்றல்களை, பிரம்மாண்டங்களை உற்பத்தி செய்யும் தன்னம்பிக்கையின் பேரூற்று.
உணவும், ஓய்வும் ஓர் உயிருக்கு எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியமானது தனிமை. தனிமை என்பது அனைத்து தொடர்புகளிடமிருந்தும் நம்மை துண்டித்துக் கொள்வது மட்டுமல்ல; அது நமக்கும் இயற்கைக்கும், இந்த பிரபஞ்சத்திற்குமான தொடர்பு காலம். இந்த பிரபஞ்ச சக்தியை நம்முள் கொண்டு வர உதவும் அற்புதமான பொற்காலம்.
இன்று நோயின்றி நடமாடுகின்ற பலமானவர் யார், நோயோடு திரியும் பலவீனமானவர் யார் என்பதை இனம்கண்டு, வேறுபடுத்தி தெரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு கரோனா தீநுண்மி, சாட்டையைச் சுழற்றியிருக்கிறது. இதன் விளைவு... ஒட்டுமொத்த உலகமும் தனிமையாய் உணர்ந்து, அச்சத்தோடு வாழவேண்டிய நெருக்கடி. மனிதர்கள் மட்டுமல்லாமல் மற்ற அனைத்தும் தனிமையாக்கப்பட்ட இந்த விசித்திர சூழல் தனிமையைப் பற்றி, தனித்திருத்தலைப் பற்றி இந்த உலகெங்கும் ஒரு புதுவித புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. நம் ஒவ்வொருவரது நிறை, குறை, துக்கம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தத் தனிமை நமக்கு உதவியிருக்கிறது.
"உலகம் உறங்கும் வேளையில் நீ விழி ... உன்னை நீயே செதுக்கிக்கொள் .. அப்பொழுது நீ உலகம் போற்றும் அற்புத படைப்பாவாய்' என்கிற வரிகள் இங்கு தனிமையின் மகத்துவத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றன. இந்த மந்திரச் சொற்களை நாம் மறந்துவிடலாகாது.
தனிமை நமது மனதில் தோன்றும் எண்ணங்களில் எது அற்பமானது, எது உன்னதமானது, உயர்வானது என்று தரம்பிரித்து இனம்காண ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. கோபம், அச்சம், குழப்பம் என்று சிதறிக் கிடக்கும் நம் மனதின் கூறுகளை ஒருங்கிணைத்து அமைதி, ஆற்றல், கவனம், பேராற்றல், நம்பிக்கை என்று கூர்தீட்டிய ஆயுதமாக, ஒளிரும் வைரமாக தனிமையே நம்மை மாற்றுகிறது.
"அமைதி எப்போதுமே அழகானது' என்கிறார் வால்ட் விட்மன். அந்த அழகான அமைதிக்கு தனிமை ஒரு வரம்; அதுவே வெற்றிக்கு உரம். புரிந்துகொள்வோம்... தனிமையே நிரந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com