முந்தி இருப்பச் செயல் - 16
மனிதர்கள் தம் உணவை வேட்டையாடியும், பின்னர் சேகரித்தும் திரிந்த காலத்தில் சிந்திக்க வேண்டிய தேவை பெரிதாக இருந்திருக்காது. நதிக்கரைகளில் குடியேறி, வேளாண்மையில் ஈடுபட்டு, இனக்குழுக்களாக


மனிதர்கள் தம் உணவை வேட்டையாடியும், பின்னர் சேகரித்தும் திரிந்த காலத்தில் சிந்திக்க வேண்டிய தேவை பெரிதாக இருந்திருக்காது. நதிக்கரைகளில் குடியேறி, வேளாண்மையில் ஈடுபட்டு, இனக்குழுக்களாக தங்களை நிறுவி வாழத் தொடங்கியபோதுதான், தீவிரமாகச் சிந்திக்கவும் தொடங்கியிருப்பார்கள்.
ஆனால் இன்றைய மனிதருக்கோ சிந்தித்தல் மிக மிக முக்கியமான செயல்பாடாக மாறியிருக்கிறது. இப்போது நாம் பெற்றிருக்கும் மொழிகள், இலக்கியங்கள், தத்துவங்கள், அறிவியல், நுண்கலைகள் என வாழ்வின் அனைத்துமே நம் சிந்தனைகளின் வெளிப்பாடுகள்தானே?
சிந்தித்தல் என்பது நமது மூளையில் நடக்கும் செயல்பாடு. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதுபோல, மூளை ஆரோக்கியமாக இருந்தால்தான் முனைப்போடு சிந்திக்க முடியும். மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஜான் மெடினா என்கிற உயிரியல் நிபுணர் சில ஆலோசனைகளைச் சொல்கிறார். முக்கியமான மூன்றை மட்டும் சொல்கிறேன்:
ஒன்று, நாம் நடந்து திரிந்த பிறவிகள் என்பதால் நமது மூளை இன்னும் அந்த அனுபவத்துக்காக ஏங்கித் தவிக்கிறது. உங்களின் நினைவாற்றல், கவனித்தல், பகுத்தறிதல், சிக்கல்களைத் தீர்த்தல் என அனைத்துத் திறன்களும் மேலோங்கிச் சிறக்க, உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி, அவசியம். மூளை தலையில் இருக்கலாம்; ஆனால் "ஸ்விட்ச்' காலில் இருக்கிறது. எனவே இயலும்போதெல்லாம் நடந்து செல்லுங்கள்.
இரண்டு, நம்மில் வெகுசிலர் ஒரே நேரத்தில் பல விடயங்களைச் செய்யும் (சதாவதானி போன்ற) கவனகர்களாகத் திகழ்ந்தாலும், பெரும்பாலானவர்களின் மூளை பெரும்பாலான நேரங்களில் ஒரே ஒரு விடயத்தில் மட்டும்தான் ஊன்றிக் கவனம் செலுத்துகிறது. எனவே பல விடயங்களை ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டுச் செய்வதற்குப் பதிலாக, ஒன்றே செய்யுங்கள்; அதை நன்றே செய்யுங்கள்.
மூன்று, போதுமான தூக்கம் இருந்தால்தான், மூளை சிறப்பாகச் சிந்திக்கிறது. நமது மூளை தீவிரமான, தற்காலிக ஆபத்துக்களை மட்டுமே குறுகியகால அடிப்படையில் திறம்படக் கையாளும் தன்மைகொண்டது. அதை பகைமை, வெறுப்பு, கோபம் போன்ற நீண்டகால நிரந்தர ஆபத்துக்களுக்குள் தள்ளும்போது, அது நிலைகுலைந்து போகிறது. உங்கள் சிந்தனைத் திறன் தடம்புரண்டு விடுகிறது. எனவே மூளையை அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள். போதுமான அளவு தூங்குங்கள்.
சிந்திப்பது எனும் சொல் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. (சிவகாமி மகனை, சண்முகனை) "சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே' எனும் கே. டி. சந்தானம் அவர்களின் பாடலில், சிந்தனை செய்வது
என்பது பிரார்த்தனையோடு கூடிய தன்னாய்வு என்றாகிறது.
"சிந்தை யொன்றினி இல்லை, எது சேரினும் நலமெனத் தெளிந்து விட்டேன்' என்று பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் எழுதும்போது, சிந்தை மறுபரிசீலனையற்ற, தெளிவான முடிவையும், மனஉறுதியையும் குறிக்கிறது.
எத்தியோப்பியாவில் ஒருவர் அமைதியாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், "மின் தசபால' (எதைப் பற்றி கவலைப்படுகிறாய்?) என்று கேட்டு, அவரது மோனநிலையைத் தகர்ப்பது நண்பர்களின் கடமை என்றியங்குவார்கள். சிந்திப்பதைக் கவலைப்படுவது என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
நாம் இங்கே விவாதிக்கும் சிந்தனைத் திறன் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட விடயத்தின் உண்மைத்தன்மையை, சரி தன்மையை, மதிப்பை நிர்ணயிக்க முயல்வதும்; முழு நிலைமையையும் உள்வாங்கி அதற்கான காரண காரியங்களையும், மாற்றுக்களையும் தேடிக் கண்டுபிடிப்பதும்; தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நமது பார்வையை மாற்றிக் கொள்வதும்தான்.
இந்த சிந்தனைத் திறனில் விமர்சனமும், தர்க்கமும், பகுப்பாய்வும் கலந்திருப்பதால், சிந்திக்கும் திறனை விமர்சனச் சிந்தனை, தர்க்கச் சிந்தனை அல்லது பகுப்பாய்வுச் சிந்தனை என்றெல்லாம் பலவாறாக
அழைக்கிறோம்.
நம்மில் பலர் நமக்குப் பிடித்தமான சாதி நிறுவனம், மத நிறுவனம், கட்சி, அமைப்பு, நாளிதழ் மற்றும் ஆளுமை போன்றவர்கள் சிந்திப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதே வழியில் சிந்திக்கிறோம். ஆனால் சுயசிந்தனை உடையவர்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு முனைகிறோம்.
அப்படிச் சிந்திப்பதற்கு நாம் பயன்படுத்தும் ஒரு சில உத்திகளைப் பார்ப்போம். முதலாவதாக, ஒரு துலாக்கோல் போல நாம் சிந்திக்கலாம். ஒரு குறிப்பிட்ட விடயத்தின் நிறை-குறைகளை, நன்மை-தீமைகளை, சாதக-
பாதகங்களை, நேர்மறை-எதிர்மறைகளை சீர்தூக்கிப் பார்த்து, எது மிகுதியாக இருக்கிறதோ அதனடிப்படையில் அதனை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் ஓர் எளிமையான, அடிப்படையான உத்தி.
வள்ளுவம் அழகாகச் சொல்கிறது:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (குறள்-504)
இந்த அடிப்படைச் சூத்திரத்தோடு, இன்னுமொரு
கருதுகோளையும் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட வேறொரு உத்தியையும் சொல்கிறார் வள்ளுவர்:
அழிவதூம் ஆவதூம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (குறள்-461)
என்னுடைய பார்வையில், ஒரு செயலைச் செய்யும்போது எவ்வளவு அழிவு நேர்கிறது, எவ்வளவு ஆக்கம் நேர்கிறது, அந்தச் செயல்முறை உருவாக்குகிற ஊதியம், தாக்கம் போன்றவற்றை ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். அதேபோல, "முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் எனும் மூன்று விஷயங்களையும் பார்த்துச் செயல்படுங்கள்' என்கிறார் தெய்வப்புலவர்.
இரண்டாவதாக, ஒரு நல்ல மருத்துவரைப் போல சிந்திக்கலாம். ஒரு மருத்துவரிடம் நாம் சென்றால், அவர் நம்மைப் பீடித்திருக்கும் நோய் எதுவென்று துல்லியமாக ஆராய்ந்துணர்கிறார். நோயைக் கண்டறிந்த பின்னர், இதனுடைய வருங்கால நீக்குப் போக்குகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சிந்திக்கிறார். அதன் பின்னர்தான் அந்த நோய்க்கான நிவாரணம் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறார். இந்த ஆராய்ந்துணர்தல் - முன்னறிவித்தல் - நிவாரணம் எனும் மூன்று நிலைப் பகுப்பாய்வு முறையை
சமூக-பொருளாதார-அரசியல் பிரச்னைகள் எதுவானாலும் புரிந்து, தீர்வு காணப் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக, அரசியலில், ராஜதந்திரத்தில் பயன்படுத்தப்படும் "சுழிய விடை விளையாட்டு' (ஜீரோ சம் கேம்), "சுழியமற்ற விடை விளையாட்டு' (நான்-ஜீரோ சம் கேம்) போன்ற அணுகுமுறைகளைச் சார்ந்தும் சிந்திக்கலாம்.
"சுழிய விடை விளையாட்டு' என்பது ஒரு விளையாட்டில் ஒருவர் வெற்றி பெறும்போது, இன்னொருவர் தோல்வி அடைவதால், விளையாட்டின் நிகர மொத்தம் சுழியமாக அமைகிறது என்பதாகும். அதாவது ஒருவரின் தோல்விதான் இன்னொருவரின் வெற்றியாக அமைய முடியும் என்று சிந்திப்பதும், செயல்படுவதும் இந்த அணுகு
முறையின் அடிப்படை. செஸ் விளையாட்டில் அல்லது இரு நாடுகளுக்கிடையேயான போரில் இந்த "சுழிய விடை' மனப்பாங்கு உண்மையாக இருக்கலாம்; ஆனால் குடும்ப உறவுகளுக்குள் அல்லது ஓர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் இது பயனளிக்காது.
"சுழியமற்ற விடை விளையாட்டு' என்பது ஒரு விளையாட்டில் ஒருவரின் வெற்றி இன்னொருவரின் தோல்வியில்தான் அமைய வேண்டும் என்கிற நிலைமையின்மையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, "மொனாபலி' விளையாட்டில் விளையாடுகிற அத்தனை பேருமே சொத்துகள் வாங்கிக் குவிக்க முடியும். விளையாடுகிற அத்தனை பேருடைய வெற்றிகளும், தோல்விகளும் சேர்ந்து சுழியம் என்கிற விடையாக அமையாது. எல்லாருக்குமே கொஞ்சம் வெற்றி, கொஞ்சம் தோல்வி என்பதாக நிலைமை அமைகிறது.
மனித வாழ்வை, வாழ்வின் விஷயங்களை, உறவுகளை "சுழிய விடை விளையாட்டு'க்களாகப் பார்க்காமல், "சுழியமற்ற விடை விளையாட்டு'க்களாகப் பாருங்கள். இந்த கோணத்தில் சிந்திக்கத் தொடங்குங்கள். அன்றாட வாழ்வில், "வெற்றி- வெற்றி தீர்வு' (வின்-வின்- சொல்யூஷன்ஸ்) என்கிற ஓர் அணுகுமுறையைக் கைக்கொள்ளுங்கள். "வெற்றி-வெற்றி- வெற்றி தீர்வு' என்பது எல்லாத் தரப்பையும் வெற்றியாளர்களாக மாற்றுவது.
நீண்டகாலமாக நீங்கள் அடைபட்டிருக்கும் அந்தப் பெட்டிக்கு வெளியே வந்து, மாற்றிச் சிந்தியுங்கள். உரிய உத்திகளுடன் நேர்த்தியாக, நேர்மறையாகச் சிந்தியுங்கள். ரெனே தெய்காத் சொன்னதை நினைவுகூர்வோம்: "நான் சிந்திக்கிறேன், எனவே நான் ஆகிறேன்!'
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...