உழைப்பின் விதை... தூக்கம்!

உழைப்பின் விதை... தூக்கம்!

மனிதர்களுக்கான அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

மனிதர்களுக்கான அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றுள் உணவு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. ஆனால், உணவு நீருக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை தூக்கத்துக்குப் பெரும்பாலானோர் அளிப்பதில்லை.
மனிதர்களுக்கு மிகவும் அவசியமானவற்றுள் ஒன்று தூக்கம். உணவும், நீரும் மனிதர்களுக்குப் போதுமான அளவு கிடைத்தாலும், போதிய தூக்கம் இல்லாமல் போனால் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக அமையும்.
ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு நேரங்களைத் தூக்கத்துக்கென்று ஒதுக்காவிட்டால், அடுத்த நாள் பணிகளை சுறுசுறுப்பாக செய்வது இயலாத காரியமாகிவிடும். அத்தோடு மட்டுமில்லாமல் தூக்கமின்மையும் தூக்கத்தைத் தள்ளிப் போடுவதும் உடலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
வளர்ச்சிப் பாதையில் நகரங்கள் முன்னேறிக் கொண்டிருந்தாலும், அதற்கான பின் விளைவுகளையும் அவை
சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியானது பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
ஆனால், அதே தொழில்நுட்பங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் வாழ்க்கைமுறையிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக அறிதிறன்பேசி, மடிக்கணினி, கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றின் வரவு, மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக இரவிலும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால் அவர்களின் தூங்குவதற்கான சுழற்சி முறை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் இரவில் வெகு நேரம் வரை அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தூக்கத்தைத் தள்ளிப் போடும் அவர்களும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
தூக்கத்தைத் துச்சமாகக் கருதுபவர்களுக்கு மருத்துவர்கள்
பல்வேறு எச்சரிக்கைகளை முன்வைக்கின்றனர். தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களும் தூக்கத்தைத் தள்ளிப்போடுபவர்களும் உடல் பருமன், மன அழுத்தம், பதற்றநிலை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் போதுமான தூக்கம் இல்லாதவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், நீரிழிவு நோய், இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அனைவரும் முக்கியமாக இளைஞர்கள் தூக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுஅவசியம்.
தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம் மனிதர்களுக்கு மிக அவசியமானது. இரவு மட்டுமே தூக்கத்துக்கு மிக உகந்த நேரம். அப்போதுதான் உடல் முழு ஓய்வை அடைகிறது. இரவு வேளையிலும் அறையில் எந்தவித வெளிச்சமுமின்றி இருளில் மட்டுமே உறங்க வேண்டும். ஏனெனில், இருளில் மட்டுமே உடலுக்குத் தேவையான சில முக்கிய ஹார்மோன்கள் சுரக்கின்றன.
எனவே, பகல் வேளையில் தூங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். பகல் வேளையில் தூங்கினாலும் அதனால்ஏற்படும் நன்மைகள் மிகக் குறைவே. அது உடல்நலத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல் இரவில் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே போல், அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்துயிலெழுவதும் உடலுக்கு நல்லது.
வார இறுதி நாளாகவோ விடுமுறை நாளாகவோ இருந்தாலும் கூட படுக்கைக்குச் செல்லும் நேரத்திலும், துயிலெழும் நேரத்திலும் எந்தவித மாற்றத்தையும் புகுத்தக் கூடாது. சரியான நேரத்தில் உறங்கி எழுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சி செய்வதும் இரவில் நன்றாகத் தூங்குவதை ஊக்குவிக்கும்.
அதேபோல், படுக்கையறையிலோ அல்லது படுக்கையிலோ மற்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் படுக்கையறைக்குள் நுழைந்தால் தூக்கம் மட்டுமே நினைவுக்கு வர வேண்டும். வேறெந்த நினைவும் நமது மூளையை எட்டக் கூடாது. படுக்கையறை என்று தனியாக இல்லாதவர்கள் குறைந்தபட்சம் படுக்கையிலாவது எந்தவிதப் பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இரவில் ஆழ்ந்து உறங்குவதற்கு நாம் முக்கியத்துவம் செலுத்த வேண்டிய மற்றொரு விவகாரம் உணவு. இரவு படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக உணவு உட்கொள்வது சிறந்தது.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் ஆழ்ந்த உறக்கத்துக்கு உறுதுணையாக அமையும். மேலும், மனதுக்கு இதமான இசையைக் கேட்பது, புத்தகம் படிப்பது உள்ளிட்டவையும் சிறந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும். முக்கியமாக படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தொலைக்காட்சி பார்ப்பதையோ, அறிதிறன்பேசி, மடிக்கணினி, கையடக்கக் கணினி உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
அந்தச் சாதனங்களிலிருந்து வெளிவரும் கதிர்கள் இரவு வேளையில் நம் கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அவற்றை அணைத்து வைத்து விட வேண்டும். தூங்குவதற்கு முன்பாக படுக்கையும் தலையணையும் நமக்கு வசதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் இரவில் பணியாற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவில் அவர்களுக்கு முறையான உறக்கம் கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே அவர்களால் உறங்க முடிகிறது. அவ்வாறான சூழலில் அறையில் இருள் சூழ்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதே வேளையில், அத்தகைய இளைஞர்கள் வார விடுப்பு நாள்களில் இரவில் தூங்குவது நல்லது. வார நாள்களில் பகலில் உறங்கினோம்; ஓரிரு நாள் இரவில் தூங்குவதால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற மனநிலையை அவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் 7 முதல் 8 மணி நேரங்கள் உறங்குவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
தூங்கும்போது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. தூக்கம் உடல் உறுப்புகளின் இயக்கத்தைச் சீராக்குகிறது. உறக்கம் மனதை அமைதியடையச் செய்கிறது. நன்றாகத் தூங்கினால்தான் நன்றாக உழைக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com