வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மின்சார மேஜை!

நாம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாழ்கிறோம்.   விரும்பிய உணவை  ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிலிருந்தபடியே சாப்பிடுகிறோம்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 12:30 am

ந. ஜீவா

நாம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாழ்கிறோம். விரும்பிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிலிருந்தபடியே சாப்பிடுகிறோம். வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இணைய வழியில் பிறருடைய வங்கிக் கணக்குக்கு ஒரு நொடியில் மாற்றித் தருகிறோம்.

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே நம் குழந்தைகள் படிக்கிறார்கள். அலுவலகத்துக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தே கணினியில் பலர் வேலை செய்கிறார்கள். "எல்லாம் விரல்நுனிகளில்' என்கிற அளவுக்கு நம் வாழ்க்கைமுறை மாறிவிட்டிருக்கிறது. அதிலும் கரோனா தீநுண்மி வரவுக்குப் பிறகு, நம் நாடு மட்டுமல்ல, உலகமே புதிய பாதையில் பயணிக்கிறது.
ஆனால் இதற்கு நேர் எதிரான இன்னொரு நிலையும் உள்ளது. இன்னும் போக்குவரத்து வசதியில்லாத கிராமங்கள் இருக்கின்றன. நம்நாட்டில் 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லாமல் இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் நீண்ட தூரம் பள்ளிக்கு நடந்து சென்று படிக்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள்.
மின்வசதி இல்லாத கிராமங்களில், மாலை வந்து இருள் சூழ்ந்துவிட்டால் மாணவர்கள் படிக்க முடியாமல் போகிறது. சிறிய சிம்னி விளக்குகளின் ஒளியில் படிப்பது மிகவும் கடினமானது.

Story image

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மின் இணைப்பு இல்லாத கிராமங்களில் உள்ள மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு புதிய
கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பு மின்சார மேஜை. மின்னிணைப்பு இல்லாத இடங்களில் கூட அந்த மேஜையில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி பல்புகள் எரியும்.
ஹரியான மாநிலம் குருúக்ஷத்ராவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் "இண்டஸ்டிரியல் & யூஎக்ஸ் டிசைன் இறுதியாண்டு பயிலும் மாணவர் அசுதோஷ் வசிஷ்தா. அவர்தான் இந்த மின்சார மேஜையை உருவாக்கியிருக்கிறார்.
"" என்னுடைய தாத்தா, பாட்டி வீடு உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ளது. அவர்களுடைய வீட்டுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை நாள்களில் எல்லாம் அடிக்கடி போய்வருவேன். அந்த கிராமத்தில் மின்வசதி இல்லை. அங்குள்ள மக்கள் சூரியன் மறைந்த பிறகு அன்றாட வீட்டு வேலைகளைச் செய்யவே அவதிப்படுகிறார்கள். பள்ளி மாணவர்களோ மின்விளக்கு இல்லாததால் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதைப் பார்த்த நான் இதற்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும் என்று யோசித்தேன்.
அதற்குப் பிறகு ஜனவரி 2020 - இல் முப்பரிமாண வடிவ முறையில் ஒரு மின்சார மேஜையைத் தயாரித்தேன். சமூக ஊடகங்களில் அது குறித்த தகவல்களை வெளியிட்டேன்.
நான் எதிர்பார்க்காத அளவு, அது சமூக ஊடகங்களில் அது மிகவும் பிரபலமாகிவிட்டது.
அதைப் பார்த்த என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், என்னைப் பாராட்டினார். "முப்பரிமாண வடிவில் இல்லாமல், மாணவர்கள் பயன்படுத்தும்வகையில் இதை ஏன் நீ செய்யக் கூடாது?' என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். அவர் சொன்னது சரியென்று படவே, மின்சார மேஜையை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஆனால் கரோனா தொற்றால் உலகமே முடங்கிவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மின்சார மேஜை செய்வதற்குத் தேவையான பொருள்களை எங்கே வாங்குவது? இப்படியே நான்கு ஐந்து மாதங்கள் கடந்து போய்விட்டன.
அதன் பிறகு ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும் நண்பனை கூட்டுச் சேர்த்துக் கொண்டேன்.
அவனுடைய உதவியுடன் ஒரு மின்சார மேஜையை உருவாக்கினேன். இந்த மேஜையில் மின்சாரம் உருவாவதற்குப் பயன்படும் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் ரூ.1500 செலவழித்தேன்'' என்கிறார் அசுதோஷ்.
இந்த மின்சார மேஜை மிக எளிய தொழில்நுட்பமுறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தையல் இயந்திரத்தின் அடியில் உள்ள பெடலைப் போல இந்த மின்சார மேஜையில் பெடல் உள்ளது.
இந்தப் பெடலை மிதித்தால் சைக்கிள் டைனமோவில் உள்ளதைப் போன்ற மின்காந்த அமைப்பினால் மின்சாரம் உற்பத்தியாகிறது.
அப்படி உற்பத்தியாகும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. அந்த மின்சாரம் எல்இடி பல்புகளை ஒளிவீசச் செய்கிறது.

Story image

""இந்த மின்சார மேஜையைச் செய்வதற்காக நான் உள்ளூரில் கிடைக்கும் பொருள்களையே பயன்படுத்தினேன். உதாரணமாக பெடலை மரத்தினால் செய்தேன். எல்இடி பல்புகளை, மேஜையில் இணைக்கப்பட்ட மூங்கில் குச்சியில் பொருத்தினேன். மின்சார மேஜையில் உள்ள பெடலை ஒரு நிமிடம் மிதித்து இயக்கினால் போதும், 10 இலிருந்து 15 நிமிடங்கள் வரை மின் விளக்கு எரியும்'' என்கிறார் அசுதோஷ்.
படிக்கிற மாணவர் ஒருவர் மின்சார விளக்கு வெளிச்சத்துக்காக அடிக்கடி பெடலை மிதித்துக் கொண்டிருந்தால், படிப்பில் முழுகவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்வி எழலாம்.
""பெடலை மிதிக்கிறபோது ஏற்படுகிற ஒருவித லயமான இசையில் கவனம் கூர்மையாவதை நடைமுறையில் நான் தெரிந்து கொண்டேன்'' என்கிறார் அசுதோஷ்.
மின் இணைப்பு இல்லாத இடங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கெனவே சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் என பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, எதற்கு இந்த பெடலை மிதித்து உருவாகும் மின்சார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று கேட்டால், அதற்கு ஒரே சொல்லில் பதில் சொல்கிறார் "சுயசார்பு' என்று.
""காற்று, சூரிய ஒளி என்று நமக்கு வெளியில் உள்ளவற்றை மின்சாரம் தயாரிப்பதற்காக நாம் சார்ந்திருக்காமல், நம்மை நாமே சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால்தான் மின்காந்த தொழில்நுட்பத்தை இதற்குப் பயன்படுத்தினேன்'' என்கிறார் அசுதோஷ்.
இந்த மின்சார மேஜையை அதன் முன் அமர்ந்து படிக்கும் ஒருவர் மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனால் பல கிராமங்களில் சமூகக் கல்வி கற்கும் முறை உள்ளது. ஒரு பத்து, இருபது பேர் வட்டமாக அமர்ந்து கொண்டு இருக்க, ஓர் ஆசிரியர் அவர்களுக்குப் பாடம் நடத்துவார். இப்படி சமூகக் கல்வி கற்பவர்களுக்கு உதவும் வகையில் பத்து மேஜைகளை இணைத்து வட்டமான மேஜையை அசுதோஷ் வடிவமைத்திருக்கிறார். கற்றுத் தரும் ஆசிரியர் மேஜையின் நடுப்பகுதியில் நின்று கொண்டு வகுப்பு எடுப்பார். மாலை மயங்கி இருள் சூழ்ந்த பிறகும் வகுப்புகள் தடைபடாமல் இருக்க இந்த மேஜையின் இடையிடையே பெடலினால் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
""நம்நாட்டில் மின்வசதி இல்லாத நிறைய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு நான் உருவாக்கிய இந்த மின்சார மேஜை உதவும். இதைப் பெரிய அளவில் நிறைய தயாரிக்க வேண்டும். அதற்கு அரசோ, தனியார் நிறுவனங்களோ உதவ வேண்டும்'' என்கிறார் அசுதோஷ் வசிஷ்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.