வேலை: தேவை... சில திறமைகள்!
வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பட்டப்படிப்புகளை முடிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை.


வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பட்டப்படிப்புகளை முடிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும் அந்த வேலை அவர்களது தகுதிக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை. எனினும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஒரு வேலையில் சென்று அமர வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. வேலைக்கான போட்டிகள் தற்போது அபரிமிதமாக அதிகரித்துள்ளன. அந்தப் போட்டியைச் சமாளிப்பதற்கு கூடுதலாகச் சில திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தொழில்நுட்ப அறிவு:
அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள் பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகின்றன. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நாம் எத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் அத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்திலும் தொழில்நுட்பங்களே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. எனவே, புதிய இயந்திரங்கள், சாதனங்களை இயக்குவது, தொழில்நுட்ப வசதிகளை முறையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றில் நாம் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல்:
அதேபோன்று, பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும் நாம் வளர்த்துக் கொள்வது அவசியம். தற்போதைய பணிச்சூழல் முற்றிலும் மாறிவிட்டது. புதிய இயந்திரங்களின் வருகையால் புதிய புதிய பிரச்னைகளும் வேர்விட்டு வருகின்றன. அந்தப் பிரச்னைகளுக்கு எளிய, சிறந்த தீர்வை வழங்குபவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே, எந்தவித துறைசார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் திறன் நம்மிடம் காணப்படுவது கூடுதல் பலமாக அமையும்.
கூட்டுப் பணி:
வளர்ந்து விட்ட தொழில்நுட்ப காலத்தில் பணி சார்ந்து பல நாடுகளைச் சேர்ந்தோருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்று வதற்கான திறனை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு மொழிகளைக் கற்பதும் மற்ற நாடுகளின் கலாசாரம் குறித்து அறிந்து கொள்வதும் நம் வேலையை உறுதி செய்வதற்கான அடிப்படைகளாக அமையும்.
தலைமைப் பண்பு:
தலைமைப் பண்பு மிகவும் அவசியமான ஒன்று. குழுவுடன் இணைந்து பணியாற்றும் வேளையில் சக பணியாளர்களை எவ்வாறு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழுவுக்குத் தலைமையேற்று அவர்களை முறையாக வழிநடத்தி திட்டமிட்ட இலக்குகளை அடைவது குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
புதுமையைப் புகுத்துதல்:
புதுமையைப் புகுத்துபவர்களாக நாம் திகழ வேண்டும். நிறுவனத்தில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையை எளிமையாக மாற்றி அதில் புதுமையை ஏற்படுத்தும் நபர்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அவ்வாறான புதுமைகள் மூலம் நிறுவனத்தின் செயல்பாடு எளிமையாவதோடு வருவாய் அதிகரிப் பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
புதியன கற்றல்:
புதிய விஷயங்களைத் தொடர்ந்து கற்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வது அவசியம். எதிர்காலத்தில் பணிச்சூழல் எவ்வாறு மாறும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. அவ்வாறான நிலையில், எத்தகைய சூழலுக்கும் நம்மை நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும். சவாலான சூழலிலும் கடின உழைப்புடன் பணியாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு புதியனவற்றை ஏற்றுக் கொண்டு அவை குறித்து விரிவாகக் கற்கக் கூடிய ஆர்வத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அதுதான் நிறுவனத்தில் நமக்கென ஒரு நிரந்தர இடத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். வாழ்வின் இறுதி வரை கற்றுக் கொண்டே இருப்பதற்கு இளைஞர்கள் தயங்கக் கூடாது.
தகவல் தொடர்புத் திறன்:
சக பணியாளர்களுடனும் உயரதிகாரிகளுடனும் சரியான முறையில் தொடர்பு கொள்வதற்கான திறன் மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட பிரச்னை சார்ந்த தீர்வுகள் நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அத்தீர்வுகளை மற்றவர்களிடம் முறையாக வெளிப்படுத்துவதற்கான திறன் நமக்குத் தேவைப்படுகிறது. எந்த மொழியில் பேசினாலும் நமது கருத்துகளைத் துணிவுடன் கூறுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பேசும் திறனோடு எழுத்துத் திறனும் மிகவும் அவசியமானதாகும். கருத்துகளை எழுத்துகளாக வெளிப்படுத்தும்போது தேவையான வரைபடங்கள், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது உள்ளிட்ட முறைகளை நாம் கையாளலாம்.
தகவல்களை முறையாக ஆராய்ந்து பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்னையை முறையாகக் கையாள்வதற்கு இத்திறன் மிகவும் அவசிய
மானதாகும். தற்போதைய சூழலில், ஒரு பணியாளருக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தெரியாத விஷயங்களை எங்கு தேடினால் கிடைக்கும் என்பதைப் பணியாளர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நமக்குத் தேவையான தகவல்கள் உடனடியாக எங்கு கிடைக்கும் என்பதை நாம் விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும்.
மேற்கூறிய இந்தத் திறமைகள் அனைத்தும் நமக்கு ஒரே நாளில் வந்து விடாது. ஆனால், படிப்படியாக முயற்சித்தால் நமக்குக் கைகூடாதது எதுவும் இல்லை. திறமைகளை வளர்த்துக் கொள்வோம். நமக்கான வேலையை உறுதி செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...