

எல்லா காலத்திலும் இளைஞர்களால் விரும்பப்படும் பொறியியல் துறையாக விளங்குவது இயந்திரப் பொறியியல் ஆகும். மூலப்பொருளை அதன் உற்பத்திப்பொருளாக மாற்றுவது மட்டும் தான் இயந்திரப் பொறியியல் என்று இதுவரை அறிந்திருக்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப, இயந்திரப் பொறியியலின் போக்கும் மாறி, புதிய தளத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
புதிதாக முகிழ்த்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்பாடுகளாக மாற்றுவதற்கு இயந்திரப் பொறியியல் முக்கிய பங்காற்றத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இயந்திரப் பொறியியல் எனப்படும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மெக்கெட்ரானிக்ஸ் (இயந்திர மின்னணுவியல்), நானோ டெக்னாலஜி, காம்போசிஸ்ட்ஸ் , உயிரி தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளாக கிளை பரப்பியுள்ளன. இது, ரோபாட்டிக்ஸ் , எலெக்ட்ரிக் வெஹிகில்ஸ், ஹைப்ரிட் , ஆட்டோமேட்டிவ் கார்ஸ் (தானியங்கி மகிழுந்து) போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளன. எதிர்காலத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் வீச்சு பரவலாக்கப்படும் நிலை உள்ளது. அதனால், இயந்திரப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியாளர்களின் முக்கியத்துவம் பெருகத் தொடங்கியுள்ளது.
இயந்திரப் பொறியாளர்கள்: வேலை செய்யும் நிறுவனங்களுக்கு தகுந்தவாறு இயந்திரப் பொறியாளர்களின் பங்களிப்பு வேறுபடும். இயந்திரப் பொறியாளர்கள் பல்வேறு பணி நிலைகளில் வேலை செய்ய நேரிடும். திட்டப்பணி மதிப்பிடுதல், இயந்திர கட்டமைப்பின் செயல்திறனை மதிப்பிடுதல், வடிவமைப்பில் ஈடுபடுவதும் அதை தயாரிப்பதும், சோதனைகளைத் திட்டமிடுவதும் அதைச் செயல்படுத்துவதும், தரக்கட்டுப்பாட்டு கருவிகளை வடிவமைப்பது, சோதிப்பது, தயாரிக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் பாதுகாப்பானதா? நம்பகத்தன்மை கொண்டதா? செயல்திறன் உடையதா? என்பதை உறுதி செய்வது போன்ற பல்வேறு பணிகளில் இயந்திரப் பொறியாளர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இயந்திரப் பொறியியல் துறையில் 2026-ஆம் ஆண்டுவரையிலான சராசரியாக வேலைவாய்ப்புக்கான வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இயந்திரப் பொறியியல் தேவைப்படாத துறைகளே இல்லை என்பதால், இத்துறையின் தேவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, தானியங்கி பொறியியல் (ஆட்டோமொபைல்), மின் உற்பத்தி, வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பில் இயந்திரப் பொறியியலுக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.
புதிய போக்கு: அடுத்த 5 ஆண்டுகளில் இயந்திரப் பொறியியலில் இந்தியா முன்னணி நாடாக உயர இருக்கிறது. சில ஆண்டுகளிலேயே பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் முதலிடத்திற்கு தாவ இருக்கிறது. எனவே, தானியங்கி வாகன உற்பத்தித் துறையில் இயந்திரப் பொறியாளர்களுக்கான தேவையும், வாய்ப்பும் குவியத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் மின்சாரத் தேவை நாள்தோறும் கூடிக்கொண்டே செல்வதால், மின் உற்பத்தி துறை விரைவான வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது. இத்துறையில் இயந்திரப் பொறியாளர்களுக்கு தாராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. உலகிலேயே பல்வேறு உட்பிரிவுகளை கொண்டு அசுர வேகத்தில் வளர்ச்சியை நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருக்கும் துறை மின்சார உற்பத்தியாகும்.
மின் உற்பத்திக்கான கட்டமைப்புகள் அமைக்கும் பணி விரிவடைந்து கொண்டே உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் மனித ஆற்றலில் 15-25 சதம் பேர் இயந்திரப் பொறியாளர்களாக இருக்கிறார்கள். மின்சார உற்பத்தியின் அச்சாணியாக இயந்திரப் பொறியாளர்கள் உள்ளனர். புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தித்திறன் மற்றும் கட்டமைப்புத்திறனை மேம்படுத்தும் பணியில் இந்தியா வேகமாக ஈடுபட்டு வருகிறது. இது, இயந்திரப் பொறியாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பரவலாக்கும்.
எதிர்கால வாய்ப்புகள்: இந்தியாவில் நகரமயமாக்கல் விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இது வீட்டு உபயோகப்பொருட்களின் சந்தை வளர்ச்சியைப் பெருக்கும். இது, இயந்திரப் பொறியாளர்களின் வேலைவாய்ப்புகளை விரிவாக்கும்.
சுற்றுச்சூழல், சூழலியல், மாசுபடுதல், புவிவெப்பமாதல், தட்பவெப்பநிலை மாற்றம் போன்ற ஏராளமான சிக்கல்களில் இருந்து சமுதாயத்தை விடுவிக்க நிலையான தீர்வுகளை மேம்படுத்த வேண்டிய பெரும் சவால்கள் இயந்திரப் பொறியாளர்கள் முன் கொட்டிக் கிடக்கின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிதுபுதிதாய் தோன்றி வரும் தொழில்நுட்பங்கள், இயந்திரப் பொறியாளர்களுக்கான தேவையைப் பெருக்குவதால், இயந்திரப் பொறியாளர்கள் தத்தமது அறிவுத்திறனை வெளிப்படுத்தி, கைநிறையச் சம்பாதிப்பதற்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.