எங்கேயும்... எப்போதும்!

புயல் வந்தால் மழை வரும். மழை நீரைப் பயன்படுத்திக் கொண்டு மரங்கள், செடிகள் எல்லாம் செழித்து வளரும்.
எங்கேயும்... எப்போதும்!


புழுதிப் புயலால் வளரும் தாவரங்கள்!

புயல் வந்தால் மழை வரும். மழை நீரைப் பயன்படுத்திக் கொண்டு மரங்கள், செடிகள் எல்லாம் செழித்து வளரும். புழுதிப் புயல் அடித்தால் கூட செடிகள் செழித்து வளரும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இஸ்ரேலில் உள்ளது "வோல்கானி அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் ஆர்கனைசேஷன்'. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான சுதீப் திவாரி, யோனதான் வெய்ஸ்மன் ஆகிய இருவரும்தான் அந்த கண்டுபிடிப்பாளர்கள்.

இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் வளரக் கூடிய கோதுமை, கொண்டைக்கடலைச் செடி போன்றவை காற்றில் இருந்து தமக்குத் தேவையான சத்துகளை எடுத்துக் கொள்கின்றன என்று அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

செடிகள் மண்ணிலிருந்து தேவையான உரங்களை வேர்களின் மூலமாக உறிஞ்சி வளர்வது எல்லாருக்கும் தெரியும். புழுதிப் புயல் அடிக்கும்போது காற்றில் கலந்துள்ள பாஸ்பரஸ் போன்ற சத்துகளை இந்த தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன என்கிறார்கள்.

என்னதான் பாலைவனமாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் சிறிது இருக்கவே செய்கிறது. இந்த தாவரங்களின் இலைகளின் மேல் பகுதியில் நுண்ணிய மயிரிழைகள் உள்ளன. காற்றின் ஈரப்பதம் அதில் பட்டு, இலையின் மேல்பகுதி ஈரமாகிவிடுகிறது. அந்த இலையின் மீது காற்றடிக்கும்போது காற்றில் கலந்துள்ள மண் பொருள்கள் அதில் ஒட்டிக் கொள்கின்றன. இலையில் சுரக்கும் ரசாயனத் திரவம் அந்த மண்பொருள்களில் உள்ள பாஸ்பரஸ் போன்ற சத்துகளைக் கரைத்துவிடுகிறது. அவ்வாறு கரைந்த சத்துகள் இலைகளினுள் ஊடுருவிச் சென்று தாவரத்துக்குத் தேவையான சத்துகளை அளிக்கின்றன. இதைத்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தாவரங்கள் இப்படி காற்றிலுள்ள வேதிப் பொருள்களை எடுத்துக் கொள்வதனால் காற்றில் உள்ள மாசு குறைகிறது. காற்று தூய்மையாகிறது. இன்னொருபுறத்தில், தாவரங்களுக்குப் போடக் கூடிய செயற்கை ரசாயன உரங்களின் தேவையும் குறைகிறது. இதனால் ரசாயன உரத் தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் மாசுகளின் அளவும் குறைகிறது என்று சொல்கிறார்கள்.

கோதுமை, கொண்டைக்கடலை மட்டுமல்ல, மக்காச்சோளம், தக்காளிச் செடிகளும் எந்த அளவுக்கு காற்றில் கலந்துள்ள மண்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன; இஸ்ரேலின் மண்சார்ந்த ஓக் மரம் போன்றவை காற்றில் கலந்துள்ள ரசாயனப் பொருள்களை எந்த அளவுக்கு ஈர்த்துக் கொள்கின்றன என்ற ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.

77 ஆண்டுகளுக்குப் பிறகு...

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, ஜெர்மனியின் நாஜிப் படைகள் பிறநாடுகளில் உள்ள தேவலாயங்களின் மணிகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1300 தேவாலய மணிகள் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோயில் மணிகளை உருக்கி, தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

அப்படி உருக்கப்படாமல் தப்பி பிழைத்துவிட்ட மணி ஒன்று தற்போது மேற்கு ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் உள்ள ஒரு தேவலாயத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1555 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த மணி போலந்து நாட்டைச் சேர்ந்தது. 400 கிலோ எடை உள்ளது. 77 ஆண்டுகளுக்கு முன்பு அதை போலந்திலிருந்து ஹிட்லரின் நாஜிப் படையினர் எடுத்து வந்திருக்கின்றனர்.

தற்போது மேற்கு ஜெர்மனி நாட்டுக்குரியதாக கருதப்படும் இந்த மணியை, போலந்துக்குத் திருப்பித் தர மனமில்லாமல் இருக்கிறார்கள் அந்நாட்டின் ஆட்சியாளர்கள். அதனால் "நிரந்தரக் கடனாக' போலந்துக்கு அதைக் கொடுக்க ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த கோயில் மணி சொந்த ஊருக்குப் பயணம் செய்யாமல், ஜெர்மன் தேவாலயத்தில் தற்போது தனித்திருக்கிறது.

புத்தகங்களைத் தூய்மையாக்கும் கருவிகள்!

கரோனா தொற்று உலக மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி உள்ளது. முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவை இயல்பான பழக்கமாகிவிட்டன. ஆனால் ஜப்பான் மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

நிறைய புத்தகப் புழுக்களைக் கொண்ட நாடு ஜப்பான். நூலகத்தில் மக்கள் முடங்கிக் கிடப்பார்கள். கரோனா தொற்று ஏற்பட்டவுடன் நூலகத்துக்கு மக்கள் வருவது குறைந்து போனது.

புத்தகங்களை ஒருவர் தொட்டு, அதை இன்னொருவர் தொட்டு, மேலும் பலர் தொட்டு கரோனா வைரஸ் பன்மடங்கு பரவ நூலகங்கள் காரணமாகிவிடக் கூடும் என்ற அச்சமே இதற்கு காரணம். ஆனால் கரோனாவையும் மீறி நூலகங்கள் செயல்பட அவர்கள் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நூலகத்தில் உள்ள புத்தகங்களைத் தூய்மைப்படுத்தும் கருவியைக் கொண்டு சுமார் 3 லட்சம் புத்தகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கருவியில் புத்தகத்தை வைத்துவிட்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும், புத்தகத்தின் எல்லாப் பக்கங்களும் தூய்மையாக்கப்பட்டுவிடும். புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தை முப்பது விநாடிகளுக்குள் தூய்மைப்படுத்திவிடுகிறார்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்துச் செல்பவர் திரும்ப புத்தகத்தைத் தரும்போது, இந்த தூய்மைப்படுத்தும் பணி செய்யப்படுகிறது.

சூரிய ஒளி மின்சாரத்தில் மூழ்கும் நெதர்லாந்த்!

காற்றில் கலக்கும் கார்பனால் வளி மண்டலம் மிகவும் பாதிப்பு அடைகிறது. காற்றில் கலக்கும் கார்பனின் அளவைக் குறைக்க நெதர்லாந்த் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெதர்லாந்த் நாட்டில் 1990- இல் காற்றில் கலந்த கார்பனின் அளவை விட 25 சதவிகிதம் குறைவான கார்பன் 2021 - இல் காற்றில் கலக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.

பிற ஐரோப்பிய நாடுகளை விட நெதர்லாந்தில் காற்றில் கலக்கும் கார்பனின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அங்கு நிறைய அனல்மின் நிலையங்கள் இருப்பதே. அனல் மின்நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியின் புகையினால் கார்பன் அதிக அளவு காற்றில் கலக்கிறது. எனவே அனல்மின் நிலையங்களை மூடிவிட நெதர்லாந்த் அரசு முடிவெடுத்துகிறது.

அனல்மின்நிலையங்களை மூடிவிட்டால் மின்சாரத் தேவையை எப்படிச் சமாளிப்பது? நெதர்லாந்த் நாட்டில் காற்று அதிக வேகத்துடன் வீசக் கூடிய பகுதிகள் அதிகம் இருப்பதால், நிறைய காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை நெதர்லாந்த் அரசு தொடங்கியிருக்கிறது. ஆனால் அழகான நெதர்லாந்த் நாட்டின் இயற்கை எழிலை ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் கெடுத்துவிடும் என்ற எண்ணம் நெதர்லாந்த் நாட்டு மக்களிடம் தோன்றியுள்ளது.

இதனால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நிறைய சூரிய ஒளி பேனல்களை நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். கடலில், நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய ஒளி பேனல்களை மிதக்கவிட்டிருக்கிறார்கள். இது தவிர நிறைய சூரிய ஒளி பண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி பேனல்கள் பொருத்தப்பட்டு, அந்த வீட்டுக்கான மின்சாரத்தை அவற்றிலிருந்தே பெற வேண்டும் என்பதுதான் நெதர்லாந்த் அரசின் தற்போதைய திட்டம். சூரிய ஒளி மின்சார பேனல்களைத் தனியார் நிறுவனங்கள்மற்றும் வீடுகளில் பொருத்த நெதர்லாந்த் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி செய்கிறது. அவ்வாறு சூரிய ஒளி பேனல்களைப் பொருத்தினால் இழப்பு எதுவுமில்லை; ஏனென்றால், ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதனால் லாபம்தான் என்கிறார்கள் நெதர்லாந்த் மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com