தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செயலில் மாற்றம்... வாழ்வில் மாற்றம்!

மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாற்றமில்லாதது. வாழ்க்கைப் பயணம் முழுவதுமே மாற்றங்களால் நிறைந்ததுதான். அன்றாடம் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.

News image
Updated On :27 ஜூலை 2021, 4:30 am

சுரேந்தர் ரவி

மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாற்றமில்லாதது. வாழ்க்கைப் பயணம் முழுவதுமே மாற்றங்களால் நிறைந்ததுதான். அன்றாடம் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். காலமும் நேரமும் சுற்றுச்சூழலும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன. நம் வாழ்க்கையிலும் ஏதாவது ஒன்றை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருக்கும். ஆனால், அந்த எண்ணம் தொடர்ந்து எண்ணமாகவே இருக்கும். மாற்றங்கள் நிகழ்ந்திருக்காது. 

வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. பலர் ஊக்கம்தரும் பேச்சாளர்களின் சொற்பொழிவைக் கேட்பார்கள். சிலர் சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாசிப்பார்கள். சிலர் அனுபவசாலிகளின் அறிவுரைகளைக் கேட்பார்கள். அவ்வாறு பெறும் ஊக்கம், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால் அது ஒருசிலருக்கே சாத்தியம். 

சொற்பொழிவைக் கேட்டும், புத்தகங்களை வாசித்தும், அறிவுரைகளைக் கேட்டும் கூட பெரும்பாலானோரது வாழ்க்கையில் மாற்றமே ஏற்படுவதில்லை.

அதற்குக் காரணமென்ன? வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற நினைத்தும், அதை மாற்ற முடியாமல் போவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. 

ஈடுபாடு:

முதலில் நமக்கிருக்கும் ஈடுபாடு. மாற்றங்களைப் புகுத்த வேண்டும் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான ஈடுபாடும் மிக அவசியம். போதிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, மாற்றத்தை ஏற்படுத்துவதில் இருக்கும் தடைகள் குறித்து ஆராய வேண்டும். மாற்றங்களை மட்டுமே சிந்திக்கும் வேளையில் அதற்கிருக்கும் தடைகள் குறித்து சிந்திக்கத் தவறுகிறோம். 

தடைகளை வைத்துக் கொண்டே மாற்றங்களை நோக்கி முன்னேற வேண்டும் என்று தொடர்ந்து தவறான வழியிலேயே பயணிக்கிறோம். அதன் காரணமாக மாற்றத்தை ஒருபோதும் சென்றடைய முடிவதில்லை. குறிப்பிட்ட விஷயங்களில் மாற்றங்களைப் புகுத்த வேண்டுமெனில் அதற்குள்ள தடைகள் குறித்து முழு ஆய்வு நடத்தி அத்தடைகளை சரி செய்வதற்கான நடவடிக்கை
களைத் தீவிரப்படுத்த வேண்டும். 

புதிய தொடக்கம்:

பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய தொடக்கம் என்ற உத்தியைக் கையாளலாம். புதிய ஆண்டு, விழாக்கள், புதிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கலாம். புதிய ஆண்டு தொடங்கும்போது பலர் பல்வேறு தீர்மானங்களை எடுப்பது நினைவிருக்கலாம். 

அது புதிய ஆண்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புதிய மாதம், புதிய வாரமாகவும் கூட இருக்கலாம். மாற்றங்களை நோக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய ஆண்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஒருசிலர் மட்டுமே முழுமையாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் ஆகும் முன்பே, பலரது தீர்மானங்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன. அதற்கு முழு ஈடுபாடின்மையே காரணம். எனவேதான், மாற்றங்களை நோக்கிய பயணத்தில் முழு ஈடுபாடு அவசியமாகிறது. 

ஊக்கமுடைமை:

மாற்றங்களைப் புகுத்துவதற்கு நீடித்த நிலைத்த தன்மை அவசியம். நம் மனம் காலத்துக்கேற்ப மாறும் தன்மை கொண்டது. நொடிப்பொழுதில் கூட மனவோட்டங்கள் மாறிவிடும். மாற்றங்களை நோக்கிய பயணத்தில் நீடித்த ஊக்கத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நம்மை ஊக்கமுடையவராக வைத்திருக்கும். ஊக்கத்துக்காக அடுத்தவரைச் சார்ந்திருப்பதாலேயே இந்த நிலைமை ஏற்படுகிறது. 

நமக்கு நாமே ஊக்கமளித்துக் கொண்டால் பிரச்னையேயில்லை. மாற்றங்களை நோக்கிய பயணத்தில் எந்தவித சோர்வுமின்றி நம்மால் தொடர்ந்து பயணிக்க முடியும். தொடர் பயிற்சிகளின் மூலமாக அந்த ஊக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். 

ஒவ்வொரு நாளும்...

அதேபோல், மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக புதிய மாதத்துக்காகவும், புதிய வாரத்துக்காகவும் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு நாளுமே நமக்குக் கிடைக்கும் புதிய பரிசுதான். 

எனவே, ஒவ்வொரு நாளும் நாம் விரும்பும் மாற்றத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்தால் விரைவில் இலக்கைச் சென்றடைய முடியும். முடிந்தால், நம்மைப் போல மாற்றங்களை நோக்கிச் செல்பவர்களுக்கு அறிவுரைகளை வழங்கலாம். அந்த அறிவுரைகள், கேட்பவரை மட்டுமல்லாமல் நம்மையும் ஊக்கப்படுத்தும். 

அவ்வாறு அறிவுரைகளைக் கூறும்போது அவற்றையெல்லாம் நாம் முறையாகப் பின்பற்றுகிறோமா என்று மறுஆய்வு செய்து கொள்ள முடியும். எனவே, மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் உத்தியைக் கையாள்வது நல்ல பலனைத் தரும். 

வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி கொண்டுவிட்டால், அதை நோக்கிய பயணத்தைத் தெளிவாக வகுத்துச் செயல்படுவது அவசியம். மாற்றங்களே வாழ்க்கை என்பதால், அத்தகைய மாற்றங்களை சிறப்பாக ஏற்படுத்தி வாழ்க்கையிலும் வெற்றி காண்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.