தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாறுங்கள்... தொழில்முனைவோராக!

"நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்; கைநிறையச் சம்பாதிக்க வேண்டும்' என்பதே இன்றைய இளைஞர்கள் பலரது பெரும் கனவாக இருக்கிறது.

News image
Updated On :1 ஜூன் 2021, 12:30 am

சுரேந்தர் ரவி


"நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்; கைநிறையச் சம்பாதிக்க வேண்டும்' என்பதே இன்றைய இளைஞர்கள் பலரது பெரும் கனவாக இருக்கிறது. அதிக சம்பளம் கிடைக்கும், வேலைக்குச் சென்றபிறகு வீட்டைக் கட்டுவது, வீட்டில் பொருள்களை வாங்கிக் குவிப்பது, திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பது என்பதே இளைஞர்களின் வாழ்க்கை இலக்காக உள்ளது.

இளைஞர்களில் பெரும்பாலானோர் எந்தவிதப் பிரச்னையுமற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். தொழில்முனைவோராக மாறி மற்றவருக்கு வேலை அளிக்க வேண்டும் என பெரும்பாலான இளைஞர்கள் நினைப்பதில்லை.

அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் பிரச்னையே இல்லை என்ற பிம்பத்தை சமூகம்ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வியும் அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை இதற்காகவே உருவாக்கி வருகின்றனர். "நன்றாகப் படித்தால்தான் நல்ல வேலைக்குச் செல்ல முடியும்' என்பதைக் கேட்காத இளைஞர்களே இருக்க முடியாது.

தொழில்முனைவோராவதில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது அவர்களது வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிக்கும். தொழில்முனைவோராவதில் இளைஞர்கள் கவனம் செலுத்தினால் சமூகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடினமான பல பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண்பதற்கான வழிகள் உண்டாகும்.

இளைஞர்கள் தொழில்முனைவோரானால், புதிய நிறுவனங்கள் பல உருவாகும். அதன் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் பொருளாதார நிலை மேம்படும். அந்த நிறுவனங்களுக்கான மூலப் பொருள்களின் தேவை அதிகரிக்கும். மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், சிறு உற்பத்தி நிறுவனங்கள் மேம்படும்.

நிறுவனங்களும் விவசாயமும் மேம்பாடு அடைவதால் அதைச் சார்ந்து இயங்கும் சேவைகள் துறையும் வளர்ச்சி காணும். ஆக நாட்டின் பொருளாதார முன்னேற்றமானது, அந்நாட்டின்நிறுவனங்கள் வளர்ச்சி காண்பதிலேயே இருக்கிறது.

அத்தகைய நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கும் வல்லமை இளைஞர்களுக்கே உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சில இளைஞர்களே தொழில்முனைவோராக மாறுவதில் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்த நிலை மாறி பல இளைஞர்கள் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டவராக மாறவேண்டும்.

அதற்கான அடிப்படை மாற்றம் நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். மாணவர்களுக்குப் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஆர்வத்தை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஏற்படுத்த வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு அந்த ஆர்வம் இருந்தால்தான் கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், கல்லூரியை முடித்த பிறகு தொழில் தொடங்குவதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு ஏற்படும்.

அதிக மதிப்பெண்களைப் பெறுவதையும், அதை அடிப்படையாக வைத்து உயர்கல்வி கற்பதையும், அதற்குப் பிறகு அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்குச் செல்வதையும் மட்டுமே எதிர் காலக் குறிக்கோளாக மாணவர்கள் மனதில் திணிக்கக் கூடாது. அவற்றைக் கடந்த சிறந்த வாழ்க்கை உள்ளது என்பதை இளைஞர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இதற்கு கல்விமுறையில் மிகப் பெரிய மாற்றம் அவசியம். பாடப் புத்தகங்களையும் தேர்வு முறையையும் மாற்றினால் மட்டும் போதாது. மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் கொள்கைகளை மாணவர்கள் நடைமுறையில் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இளைஞர்கள் புதிய தொழிலைத் தொடங்குவதற்கான அடித்தளத்தை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்.

தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஊக்கத்துடன் இளைஞர்கள் இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்தியாவில் பயின்ற இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவது அதிகரித்து வருகிறது.

அதைத் தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் புதிய தொழிலைத் தொடங்குவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில்முனைவோர் ஆவதும் எளிய காரியமில்லை. துன்பங்களைச்சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

ஆனால், வாழ்க்கை முழுவதுமே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். எந்த வேலைக்குச் சென்றாலும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதிலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். ஆரம்பத்தில் பல்வேறு தோல்விகளைக் காண வேண்டிவரும்.

ஆனால், கொண்ட கொள்கையில் நிர்ணயித்த இலக்கை நோக்கித் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயமாகக் கிடைத்தே தீரும்.

எனவே தொழில்முனைவோர் ஆவதற்கு எந்தவிதத் தயக்கமும் தேவையில்லை. ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு இருந்தால் புதிய தொழிலைத் தொடங்குவதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை.

தற்போதைய காலகட்டத்தில் வேலை கிடைக்காமல் இளைஞர்கள் பலர் திண்டாடி வருகின்றனர். வேலை தேடுவதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பதில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.