

கரோனா பெருந்தொற்று, ஒவ்வொருவரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
குறைந்தபட்ச தொழில்நுட்ப உள்கட்டமைப்புடன் செயல்பட்டுவந்த துறைகளும், தத்தமது வணிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முழுவீச்சில் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. தொழில்நுட்பத்திற்கு தகுந்தவாறு வணிகக் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன அல்லது வணிகக் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. எல்லாத் துறைகளும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ள வேகமான மாற்றங்களுக்குத் தயாராகிவிட்டன. இது நிறுவனங்களின் அடிப்படை செயல்பாட்டு கட்டமைப்பையே புரட்டிப் போட்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் வேலைவாய்ப்புச் சந்தையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களை தெரிந்தவர்களை அதில் நிபுணத்துவம் பெற்றவர்களைத் தேடும் நிலைக்கு தொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், தற்போது வேலையில் இருப்போரும் சரி, புதிதாக வேலைச் சந்தையில் காலடி எடுத்து வைப்போரும் சரி, அடிப்படையாக சில தொழில்நுட்பத்திறன்களைக் கற்றறிந்திருப்பது அவசியம். வேலைக்குத் தகுதியானவர்களாக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள அது உதவும்.
மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட்: தத்தமது வாடிக்கையாளர்களின் தளத்தை விரிவாக்கிக் கொள்வதற்காக எல்லாத் தொழில் அல்லது வணிக நிறுவனங்களும் திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அடிப்படையிலான தீர்வுகளை நோக்கி நகர தொடங்கிவிட்டன. திறன்பேசி அடிப்படையிலான செயலிகளை(ஆப்) மேம்படுத்துவதற்காக அப்ளிகேஷன் புரோக்ராமிங் இன்டர்பேஸ் மற்றும் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஆப் டெவலப்மெண்ட் தெரிந்தவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
யூ.எக்ஸ்.டிசைன்: வாடிக்கையாளர்கள் அல்லது பயனாளிகளின் அனுபவங்களின் அடிப்படையிலான தனிப்பட்ட சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், யூ.ஐ.(யூசர் இன்டர்ஃபேஸ்) அல்லது யூ.எக்ஸ்.(யூசர் எக்ஸ்பீரியன்ஸ்) டிசைன் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர், அவரது அனுபவங்களின் அடிப்படையில் வணிகம் சுழலத் தொடங்கிவிட்டதால், வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான வகையில் திறன்பேசி செயலிகளை வகுக்க வேண்டியுள்ளதால் யூ.ஐ. அல்லது யூ.எக்ஸ். டிசைன் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
டெவலப்மெண்ட் ஆபரேஷன்/டெவலப்மெண்ட் செக்யூரிட்டி ஆபரேஷன்:
தகவல்தொழில்நுட்பத்துறையில் அதிகத் தேவை டெவலப்மென்ட் ஆபரேஷன்/டெவலப்மென்ட் செக்யூரிட்டி ஆபரேஷன் தொழில்நுட்பத்தை தெரிந்தவர்களுக்கு இருக்கின்றது. வாடிக்கையாளர்களின் தேவைகளை மையப்படுத்தி வணிகம் செயல்பட தொடங்கிவிட்டதால், புதிய வகையில் வணிகத்தை மேம்படுத்த டெவலப்மென்ட் ஆபரேஷன்/டெவலப்மென்ட் செக்யூரிட்டி ஆபரேஷன் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மவுசு கூடியுள்ளது.
புரோக்ராமிங் லாங்குவேஜ் ஸ்கில்ஸ்:
இணையதளங்களை உருவாக்கும்போதும் முன்முனை மேம்பாடு மற்றும் பின்முனை மேம்பாடு என்று இருவகையான நுட்ப அறிவு தேவைப்படுகிறது. இணையதளங்களில் நமது கண்ணுக்குத் தெரியும் அனைத்தையும் வடிவமைப்பது முன்முனை மேம்பாட்டாளர்கள், இணையதளத்தின் பின்னணியில் தரவுகள், வாடிக்கையாளர்களின் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாண்பது பின்முனை மேம்பாட்டாளர்கள். இருமுனை மேம்பாட்டாளர்களுக்கும் கோடிங் எனப்படும் கணினி நிரல்களை எழுதும் திறன் மிகவும் அவசியமாகும். தொழில்நுட்பங்களை சோதனை செய்வது மற்றும் குறைகளைக் களைவது போன்றவற்றிற்கும் கோடிங் அறிவு அவசியமாகும். புதிய புதிய நிரல்மொழிகள் வந்துகொண்டே இருப்பதால், பழையன கழிந்துகொண்டே உள்ளன. ஜாவா, ஜாவாஸ்கிரிப்ட் , கோ(எர்), பைதான் , சி++ போன்ற நிரல்மொழிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. புரோக்ராமிங் தொழிலில் நிலைத்திருக்க புதிதுபுதிதாக உருவெடுக்கும் நிரல்மொழிகளை கற்றறிவது அவசியமாகும்.
கிளவ்ட் கம்ப்யூட்டிங்: கடந்த சில ஆண்டுகளாகவே வணிக உலகத்தில் கிளெளட் கம்யூட்டிங் அல்லது தரவு சேமிப்பகம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நிறுவனங்களில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் கையாளப்படுவதால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களுக்கான தேவை பெருகிவருகிறது. அமேஸான் வெப் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஜுரே நிறுவனங்கள், கிளவ்ட் கம்ப்யூட்டிங் துறையையே புரட்டிப் போட்டு வருகிறார்கள். இந்நிறுவனங்கள் தனித்தனியே வகுத்திருக்கும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியமாகும்.
சைபர் செக்யூட்டி: வீட்டில் இருந்து பணியாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், கணினிகள் அல்லது கணினி வலையமைப்புகளை செயலிழக்கச் செய்யும் கணினி தாக்குதல்கள் பரவலாகியுள்ளன. தரவுகள், செயல்பாடுகள், வலையமைப்புகள் முடங்காமல் தற்காத்துக்கொள்வதற்கு பாதுகாப்பு வலையத்தை பலமாக்குவதை உறுதிப்படுத்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. கணினி தாக்குதல் அல்லது குற்றச்செயல்கள் அதிகமாகி வருவதால், அதை தடுத்து நிறுத்தும் கணினிபாதுகாப்பு(சைபர் செக்யூரிட்டி) தொழில்நுட்பத்தை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.
பிக் டேட்டா மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்: நம்புவதற்கே முடியாத அளவுக்கு உலகம் வேகமான மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து வகையான இயற்பொருட்களும் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைய உலகத்தில், அனைத்து வகையான இயற்பொருட்கள், மனிதர்களிடையே தகவல் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலமாக தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயலும். அதை தான் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என்று அழைக்கிறார்கள். இதன்வழியே உலகம் வேகமாக பிணைக்கப்படுவதால், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறிவரும் சூழலை சரியாக கணிக்க தரவுகளை திறனாய்வு செய்து, வணிகத்தை சரியான போக்கில் நகர்த்த உதவுவதே பிக் டேட்டா. இது தொடர்பான அறிவுள்ளவர்களுக்கும் தேவை பெருகி வருகிறது.
டேட்டா அனாலிட்டிக்ஸ்:
கடந்த சில ஆண்டுகளாக தரவுகளின் வளர்ச்சி அதிவேகமாக உள்ளது. இது, தரவுகளை திறனாய்வு(டேட்டா அனாலிட்டிக்ஸ்) செய்வதற்கான புதிய அணுகுமுறைக்கு வித்திட்டுள்ளது. சிக்கலான முடிவுகளை எடுப்பதற்கும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், தரவுகளைத் திறனாய்வு செய்யும்போக்கு நிறுவனங்களிடையே வளர்ச்சி கண்டுள்ளது. வேலைச்சந்தை மந்தமாக இருக்கும் நிலையிலும், தரவு அறிவியல் மற்றும் திறனாய்வு தொழில்நுட்பர்களின் தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்/மெஷின் லேர்னிங்:
செயற்கை நுண்ணறிவு, வணிகத்தின் அனைத்து வகையான போக்கையும்மாற்றியமைத்துவருகிறது. வணிகத்தின் தன்மை, செயல்பாடு, வியூகம் அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை கற்றறிந்தவர்களுக்கான தேவையை பெருக்கி உள்ளது.
பிளாக் செயின்:
வங்கி, காப்பீடு, தளவாடப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கட்டச்சங்கிலி(பிளாக் செயின்) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எதிர்காலத்தில் வேகமாக வளர்வதற்கும், இத்தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால், பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.