தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாலித்தீன் பைகளைச் சேகரிக்கும் கருவி!

சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதில் மிக அதிகமான பங்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு இருக்கிறது.

News image
Updated On :23 மார்ச் 2021, 12:30 am

ந. ஜீவா

சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதில் மிக அதிகமான பங்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு இருக்கிறது. சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை நாம் எங்கே பொருள்களை வாங்கினாலும் அவற்றைப் பாலித்தீன் பைகளில் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். வீட்டுக்கு வந்ததும், வாங்கிய பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டு பாலித்தீன் பைகளைக் குப்பையில் போட்டுவிடுகிறோம். அவை காற்றில் பறந்து சாக்கடை, குளங்கள், கடல் என எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுவிடுகின்றன. அதனால் நீர்நிலைகள் பாதிப்படைகின்றன. நிலத்தின் அடியில் புதைந்த பாலித்தீன் பைகள் மக்கிப் போகாமல், நிலத்தடி மண்ணைக் கெடுக்கின்றன.

இப்படி பலவிதங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாலித்தீன் பைகளை என்ன செய்வது? "தூய்மை இந்தியா'வை உருவாக்கத் தடையாக இருக்கும் இந்த பாலித்தீன் பைகளை எப்படி தெருவோரங்களில், சாலைகளில் இருந்து நீக்குவது? என்று தீவிரமாக யோசித்தார்கள், சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்கள். விளைவு? ஒரு நவீன கருவி.

மாணவர்களின் இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி இக்கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ஆர்.மாலதியிடம் கேட்டோம்.

""நம் வீட்டில் ஒவ்வொரு நாளும் சேர்ந்துவிடும் பாலித்தீன் பைகளை வீட்டுக்கு வெளியே போட்டுவிடுகிறோம். அது எல்லா இடங்களிலும் கிடக்கின்றன. நகரங்களில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வளவுதான் தங்கள் பணிகளைச் செய்தாலும் பாலித்தீன் பைகளை முற்றிலுமாக நீக்க முடிவதில்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க எங்கள் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் டி.வி.கிஷோர் குமார், ஆர்.ஆகாஷ், ஆர்.இளவரசன், என். ஜவீத்கான், எஸ்.லோகேஸ்வர், ஆர்.தினேஷ்பாபு ஆகியோர் அடங்கிய குழு என்னிடம் ஆலோசனை கேட்டனர். நானும் சிவில் இன்ஜினியரிங் துறையின் அசோசியேட் பேராசிரியையான குல்ஷன் தாஸூம் இணைந்து அவர்களுக்கு சில அடிப்படையான ஆலோசனைகளை வழங்கினோம். கல்லூரியின் துணைத்தலைவர் சொக்கோ வள்ளியப்பாவும், முதல்வர் எஸ்.ஆர்.ஆர். செந்தில்குமாரும் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கினர்'' என்றார்.

அசோசியேட் பேராசிரியை குல்ஷன் தாஸ் இது பற்றிக் கூறுகையில், "" உலகிலேயே அதிக அளவு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது இந்த பிளாஸ்டிக் பொருள்கள்தாம். நீர், நிலம், காற்று, உயிரினங்கள் என எல்லாவற்றிலும் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நிலத்தின் அடியில் சென்று மக்காமல் தங்கிவிடுகின்றன. இது தாவரங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. நீரின் இயல்பான ஓட்டமும் தடைபட்டுவிடுகிறது. கடலில் வாழும் மீன்கள், பிற உயிரினங்கள் கடல்நீரில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் இறந்து போகின்றன. பாலித்தீன் பைகள் மிகக் குறைந்த அளவில் - மைக்ரான் அளவில் - காற்றில் கலந்து காற்றையும் மாசுபடுத்துகின்றன. இந்த பாதிப்புகள் நேராமல் இருக்க பாலித்தீன் பைகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாது. அவ்வாறு போடப்பட்ட பாலித்தீன் பைகளைத் தேடி எடுத்து, அவற்றை ரீ சைக்கிளிங் உட்பட பலமுறைகளில் சரி செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பைச் சரி செய்ய வேண்டும். அதற்காக எங்கள் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஒரு கருவியை வடிவமைத்து இருக்கிறார்கள்'' என்றார்.

தெருவில் கிடக்கும் பாலித்தீன் பைகளை உறிஞ்சி எடுக்கக் கூடிய நவீன கருவியை வடிவமைத்த மாணவர்களின் குழுவில் ஒருவரான ஆகாஷ் , அந்தக் கருவியின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் கூறினார்:

""சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் எங்களுக்கு அரசின் "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியை ஆகியோரை அணுகிப் பேசினோம். அவர்கள் தந்த ஆலோசனைகளின் அடிப்படையில், தெருவில், சாலையோரங்களில் கிடக்கும் பாலித்தீன் பைகளை அங்கிருந்து நீக்குவதற்கான கருவி ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டோம்.

நாங்கள் படிப்பது சிவில் இன்ஜினியரிங் பிரிவு. இந்தக் கருவியை வடிவமைக்க இயந்திரவியல், கணினிப் பொறியியல் துறை சார்ந்த அறிவு அவசியம். எனவே எங்கள் கல்லூரியில் பயிலும் பிற பிரிவு மாணவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு, இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறோம். இந்தக் கருவியில் வேக்குவம் கிளீனரும் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தக் கருவியை குப்பைகள் நிறைந்த பகுதிக்குக் கொண்டு சென்றால், அங்குள்ள பாலித்தீன் பைகளை மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். வேறு எதையும் எடுத்துக் கொள்ளாது. காகிதங்கள் கிடந்தாலும் அவற்றை எடுத்துக் கொள்ளாது.

கருவியில் நாங்கள் அகச் சிவப்பு கதிர்களிலான சென்சாரைப் பொருத்தியிருக்கிறோம். இந்த அளவுக்குத் தடிமன் உள்ள பொருள்களை மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கும்விதமாக அதை புரோகிராம் செய்திருக்கிறோம்.

காகிதத்தை விட பாலித்தீன் பைகளின் தடிமன் மிகவும் குறைவு. பாலித்தீன் பைகளின் தடிமனைக் கணக்கிட்டு, அந்தத் தடிமன் உள்ள பொருள்களை கண்டறியுமாறு இந்த சென்சாரை நாங்கள் தயார் செய்திருக்கிறோம்.

அப்படி உறிஞ்சி எடுக்கப்பட்ட பாலித்தீன் பைகளில் உள்ள தூசிகள், அழுக்குகள் முதலியவை முதலில் நீக்கப்படுகின்றன. அதை இந்தக் கருவி செய்கிறது.

அதற்கு அடுத்தநிலையாக அதன் பிறகு அவை துண்டுகளாக வெட்டப்பட்டு, அவற்றை உருக்கி ரீ சைக்கிளிங் செய்யப்படுவதற்காக மாற்றப்பட வேண்டும். ரீ சைக்கிளிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி கான்கிரீட் ஓடுகள், ஹாலோ பிளாக் போன்றவற்றைச் செய்ய முடியும்.

இந்தக் கருவியின் மேல் பகுதியில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கருவி இயங்கும். அந்த வகையிலும் இந்தக் கருவி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவே இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.