பொது முடக்கம்... மனநலன்!

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பொது முடக்கம்... மனநலன்!


கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி பணித்தன.

நாள்தோறும் அலுவலகத்துக்குப் பயணித்து, சகாக்களை நேரில் சந்தித்து சமூகத்துடன் இயைந்து வாழ்வதையே இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பொது முடக்கம் அவர்களது அன்றாட நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான அவசியமும் பெருமளவில் குறைந்தது.

வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே அவர்கள் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே அவர்கள் செய்து வந்ததால், நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது. அலுவலகத்தில் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு மட்டுமே பணியாற்றிவிட்டு வீடு திரும்புவதை இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஆனால், வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் வந்த பிறகு, காலநேரம் தெரியாமல் அவர்கள் பணியாற்றும்படி நேர்ந்தது. "வீட்டில்தானே இருக்கிறீர்கள். கூடுதலாகப் பணியாற்றினால் என்ன? என்று நிறுவனங்களே கட்டாயப்படுத்தும் நிலைக்குப் பணியாளர்கள் தள்ளப்பட்டனர்.

அலுவலகத்துக்குச் சென்றால் தேநீர் இடைவேளை, உணவு இடைவேளையின்போது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் கலந்துரையாடும்போது, பணி தொடர்பான அழுத்தங்கள் இளைஞர்களுக்குப் பெரிதாக எழவில்லை. பொது முடக்க காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க நேர்ந்ததால், இளைஞர்கள் சிலர் மன அழுத்தத்தை எதிர்கொண்டனர்.

அதிகப்படியான வேலைப்பளு, நண்பர்களை நேரடியாகச் சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்டவை இளைஞர்களது மன அழுத்தத்துக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன. மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிலர் மருத்துவர்களை நாடினர்.

அதே வேளையில், பொது முடக்கம் இளைஞர்களது மனநலனை மேம்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துச் செல்வது, பணி புரிவது, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவது என்ற வழக்கமான நடவடிக்கைகளைப் பொது முடக்கம் மாற்றியுள்ளதாகவும் அதன் காரணமாக இளைஞர்களுக்குப் புதிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான நடவடிக்கைகளை சுழற்சி முறையில் திரும்பத் திரும்பச் செய்து வந்தால், அதில் தொய்வு ஏற்பட்டு சலிப்பு தோன்றுவது இயல்பே. அந்த சலிப்புணர்வை பொது முடக்கம் நீக்கியுள்ளதாக இளைஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்தே பணியாற்றுவதால் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்ள முடிவதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதுவும் மனநலன் மேம்படுவதற்கு முக்கிய காரணமாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தில் நிகழ்பவை மனநலனை பாதிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

பொது முடக்க காலத்தில் வீட்டில் இருக்கும்போது சமூகத்தில் நிகழும் அவலங்களிலிருந்து விலகியிருக்க முடிவதால், மனநலன் மேம்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதில் நாம் அதிகமாக கவனத்தைச் செலுத்துகிறோம் என்பதைப் பொருத்தே, பொது முடக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா அல்லது மனநலனை மேம்படுத்துகிறதா என்பது தீர்மானமாகும்.

ஒரு வேளை மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் நண்பர்களை அடிக்கடி தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசலாம். தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து விட்டதால், பல நண்பர்களுடன் ஒரே நேரத்தில் "விடியோ கால்' மூலம் பேச முடியும். இவை நண்பர்களுடன் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது போல் வராது என்றாலும் கூட மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு சிறந்த வடிகாலாக இருக்கும்.

யோகாசனப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மேற்கொள்ளலாம். அவை மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கும். வீட்டுத் தோட்டம் ஏற்படுத்துவது, ஓவியம் உள்ளிட்ட புதிய விஷயங்களைக் கற்பது, புத்தகங்களை வாசிப்பது உள்ளிட்டவையும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவும்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அதைப் புரிந்து கொண்டு பொது முடக்கத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால், அதைக் களைவதற்கான வழிகளை ஆராய வேண்டுமே தவிர அதையே நினைத்து மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகக் கூடாது.

மனநலனைப் பாதுகாத்து உடல்நலத்தையும் முறையாகப் பேண வேண்டிய கட்டாயத்தில் பொதுமுடக்கம் நம்மைத் தள்ளிவிட்டு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com