ஒரு சிறுகோளுக்கு வயது... 450 கோடி ஆண்டுகள்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் ஒன்று ஒசிரிஸ்-ரெக்ஸ் விண்கலத் திட்டம்.
ஒரு சிறுகோளுக்கு வயது... 450 கோடி ஆண்டுகள்!
Updated on
1 min read

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் ஒன்று ஒசிரிஸ்-ரெக்ஸ் விண்கலத் திட்டம். பூமியிலிருந்து 20 கோடி மைல் தொலைவில் உள்ள "பென்னு' என்ற சிறுகோளுக்கு அனுப்பப்பட்ட விண்கலம்தான் ஒசிரிஸ். 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் பென்னு சிறுகோளில் தரையிறங்கியது ஒசிரிஸ்.

450 கோடி ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் பென்னு, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிறைய மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பதுதான் முக்கியமானது. இச்சிறுகோளை ஆய்வு செய்வதன் மூலம் சூரிய குடும்பம், சூரியன், பூமி மற்றும் பிற கிரகங்களின் தோற்றம் பற்றிய தடயங்கள் கிடைக்கும் என்பதால், விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் உயரத்துக்கு (381 மீ.) காணப்படும் இச்சிறுகோளின் பெயரான "பென்னு' என்பது எகிப்திய பெண் தெய்வத்தின் பெயராகும். இந்தச் சிறுகோளை 1999-ஆம் ஆண்டு நாசா கண்டறிந்தது.

கார்பன் மற்றும் பிற தனிமங்களைக் கொண்ட சிறுகோளாகத்தான் இதுவரை பென்னு அறியப்படுகிறது. அதில் உள்ள அதிகப்படியான கார்பன் காரணமாக, தன் மீது படும் ஒளியில் 4 சதவீதத்தை மட்டுமே பென்னு பிரதிபலிக்கிறது. 60 சதவீத ஒளியைப் பிரதிபலிக்கும் வீனஸ் போன்ற கிரகங்களை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. பூமி 30 சதவீத ஒளியைப் பிரதிபலிக்கிறது. பென்னுவின் உட்புறத்தில் சுமார் 20 முதல் 40 சதவீதம் வெற்றிடமாகும். சூரிய குடும்பம் உருவான முதல் ஒரு கோடி ஆண்டுகளில் பென்னு சிறுகோள் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பென்னுவில் தரையிறங்கிய ஒசிரிஸ் விண்கலம், தரைப் பகுதியில் நைட்ரஜன் வாயுவை வெடிக்க வைத்து, அதன்மூலம் சிதறிய மண் மற்றும் கல் மாதிரிகளை தனது ராட்சத ரோபோ கரங்கள் மூலம் சேகரித்து வைத்துள்ளது. அந்த சேகரிப்புடன் விண்கலம் கடந்த மே 11-ஆம் தேதி பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது. சுமார் இரு ஆண்டுகள் பயணம் செய்து அது பூமியை வந்தடையும். ஒசிரிஸ் விண்கலத் திட்டமானது பூமிக்கு மிக அருகில் உள்ள சிறுகோளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு திரும்பும் நாசாவின் முதல் திட்டமாகும்.

செவ்வாய் கிரகத்திலேயே ஆய்வுப் பணியில் ஈடுபடும் நிலையில், இந்தச் சிறுகோள் ஆய்வு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா எனக் கேட்கலாம். சிறுகோளில் பெரிய விஷயங்கள் இருக்கக் கூடாதா, என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com