முகக்கவசம் அணிந்தாலும்... மெதுவாகப் பேசலாம்!
கடந்த ஓர் ஆண்டாக முகக்கவசம் அணிவது வழக்கமாகிவிட்டது. "நகமும் சதையும் போல' முகக்கவசம் முகத்துடன் ஒன்றிப் போய்விட்டது.


கடந்த ஓர் ஆண்டாக முகக்கவசம் அணிவது வழக்கமாகிவிட்டது. "நகமும் சதையும் போல' முகக்கவசம் முகத்துடன் ஒன்றிப் போய்விட்டது. இவையெல்லாம் கரோனா தீநுண்மியின் பாதிப்பை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான்.
காதுகளில் வேறு வழியில்லாமல் முகக்கவசத்தை தொங்கவிட்டுக் கொண்டு செல்பவர்கள், மூக்கை மட்டும் விடுவித்துவிட்டு, முகக்கவசம் அணிபவர்கள் என முகக்கவசத்தைப் பலவிதங்களில் அணிபவர்களும் இருக்கிறார்கள்.
யாருடனாவது நேரிலோ, செல்பேசியிலோ பேசும்போது, முகக் கவசத்தை இழுத்துவிட்டுக் கொண்டு பேசுபவர்கள் அதிகம். எதற்காக முகக்கவசத்தை அணிகிறோமோ அது இதில் அடிபட்டுப் போகிறது.
அதிலும் இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு முகக்கவசங்கள் வந்த பிறகு, முகக்கவசம் அணிந்து கொண்டு பலரால் பேச முடியவில்லை. பேசினால்
முதலில் தெளிவாக சொற்களை உச்சரிக்க முடியவில்லை. அப்படியே வெற்றிகரமாகப் பேசினாலும், அதைக் கேட்பவர்களுக்கு தெளிவாகக் கேட்பதில்லை.
அதிலும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் படும்பாடு அதிகம். திருச்சூர் மெட்ரோபாலிட்டன் மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் ஜோதி மேரி ஜோஸ், சென்ஜாய் கேசி ஆகிய இருவரும் பாதுகாப்பான முகக்கவசம் அணிவதோடு, அதற்கு மேல் ஃபேஸ்ஷீல்டையும் அணிந்து கொண்டு பணி செய்பவர்கள். ஒவ்வொரு நாளும் நிறைய நோயாளிகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு சத்தமாகப் பேசி, அவர்களுக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
அவர்களின் மகன் கெவின் ஜேக்கப். கேரள மாநிலம் திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாண்டு பயிலும் மாணவர் அவர். முகக்கவசம் அணிந்து கொண்டு சத்தமாகப் பேசி, தொண்டையில் புண் வந்து அவதிப்படும் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து வருத்தப்பட்டார் கெவின். அவர்களுக்கு இப்படி நேராமல் இருக்க எதையாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
முகக்கவசம் அணிந்து கொண்டு மெதுவாகப் பேசினாலும், அது அதிக ஒலியுடன் பிறருக்குக் கேட்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசனை செய்தார் கெவின் ஜோசப். அதன் விளைவுதான், அவர் உருவாக்கியுள்ள கருவி. அதை முகக்கவசத்தில் இணைத்துக் கொண்டு மெதுவாகப் பேசினாலும் பிறருக்கு சத்தமாகக் கேட்கும்.
இந்த கண்டுபிடிப்பை பாலக்காடு என்எஸ்எஸ் என்ஜினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பு இந்த ஆண்டின் மிகச் சிறந்த பிராஜெக்டாக தேர்வு செய்திருக்கிறது.
""எனது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். கரோனா நோய்த்தொற்று தொடங்கியவுடன் அவர்கள் அதற்கான முன்னணிப் பணியாளர்களாகச் செயல்படுகிறார்கள். இரண்டு முகக்கவசங்களை அணிந்து கொண்டு நோயாளிகளுடன் பேசுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் பேசும் ஒலியை அதிகப்படுத்தி, அவர்கள் பேசுவதைக் கேட்பதை எளிதாக்க ஒரு கருவியை உருவாக்கலாம் என்ற எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது'' என்கிறார் கெவின் ஜோசப்.
இதற்காக கடந்த அக்டோபர் மாதம் மைக், ஸ்பீக்கர் ஆகியவற்றை இணைக்கும்விதமான முகக்கவசத்தை உருவாக்கினார். அதை அவருடைய பெற்றோரிடம் கொடுத்தார். அதை அவர்கள் அணிந்து பார்த்திருக்கின்றனர். எடை அதிகமுள்ள அந்த முகக்கவசத்தை அணிவது மிகவும் சிரமமாக உள்ளது என்று அவர்கள் சொன்னதால், எடை குறைவான மைக், ஸ்பீக்கர் இணைப்புள்ள முகக்கவசத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கெவின் ஜோசப். "" மைக், ஸ்பீக்கர் ஆகியவற்றை மிகச் சிறியதாக வடிவமைக்க வேண்டும். பல இணையதளங்களில் உள்ள மிகச் சிறியதான மைக்குகளையும் ஸ்பீக்கர்களையும் பார்த்தேன். அவையும் கூட முகக்கவசத்தில் இணைக்கப்படும்போது, எடை அதிகமானதாகவே இருக்கும் என்று தோன்றியது. அதுமட்டுமல்ல, அதைத் தயாரிக்க நிறைய செலவு ஆகும். எனவே இது தொடர்பான நிறைய ஆய்வுகளை இணையதளங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். இறுதியில் 3 ஈ - பிரிண்டரைப் பயன்படுத்தி, எடை குறைவான சிறிய மைக், ஸ்பீக்கரை உருவாக்கினேன். அதை சார்ஜ் செய்வதற்காக சர்க்கியூட் போர்டையும் தயாரித்தேன்'' என்கிறார் கெவின்.
முகக்கவசத்தை அடிக்கடி மாற்ற வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட மைக், ஸ்பீக்கர் இணைந்த கருவியை முகக்கவசத்துடன் இணைப்பது எப்படி? என்ற அடுத்த கேள்வி அவருக்குள் எழுந்திருக்கிறது.
""இரண்டு வலுவான காந்தத்தை முகக்கவசத்தில் ஒட்ட வைத்துவிட்டால் போதும், அதைப் பயன்படுத்தி இந்தக் கருவியை முகக்கவசத்துடன் இணைத்துவிடலாம். நான் உருவாக்கியுள்ள இந்தக் கருவி 6.3 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் 0.5 செ.மீ. தடிமனும் உள்ளது. இதனுடைய மொத்த எடை வெறும் 25 கிராம்தான். இதை மைக்ரோ யுஎஸ்பி கேபிள் உதவியுடன் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம். தற்போது இதன் விலை ரூ.950 ஆகிறது. பெரிய அளவில் தயாரித்தால் ரூ.500க்கு கிடைக்கும்படி இதைச் செய்ய முடியும்'' என்கிறார் கெவின்.
கெவின் ஜோசப் உருவாக்கிய இந்தக் கருவி இணைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு மருத்துவர்களான அவருடைய பெற்றோர் தங்களுடைய பணிகளைச் செய்து வருகின்றனர். அது அவர்களுடைய பணியை எளிதாக்கியிருக்கிறது. இதைப் பார்த்த பிற மருத்துவர்களும் தங்களுக்கும் வேண்டும் என்று சொன்னதும், கெவின் செய்து கொடுத்திருக்கிறார். திருச்சூர் மட்டுமல்ல, கோழிக்கோடு, திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவர்களும் இதைக் கேள்விப்பட்டு, ஆர்டர் செய்திருக்கிறார்கள். இதுவரை 50க்கும் மேற்பட்ட கருவிகளைச் செய்து தந்திருக்கிறார் கெவின்.
திருச்சூரில் உள்ள ஜூப்ளி மிஷன் மெடிகல் காலேஜ் மருத்துவமனையில் பணிபுரியும் சரீனா கில்வாஸ், ""நான் ஒவ்வொரு நாளும் சுமார் 100 வெளி நோயாளிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ச95 முகக்கவசம், ஃபேஸ் ஷீல்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு நான் பேசுவதை நோயாளிகளால் கேட்க முடியவில்லை. சத்தமாக அவர்களிடம் பேசி தொண்டையில் புண் வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையை இந்தக் கருவி முற்றிலும் மாற்றிவிட்டது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை இந்தக் கருவி இணைக்கப்பட்ட முகக்கவசத்தை நான் அணிகிறேன். உணவு, காபி இடைவேளைகளின்போது இதை சார்ஜ்செய்து கொள்கிறேன்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...