"இப்படி இருந்தால்?'... யோசியுங்கள்!

கோடை விடுமுறைக் காலத்தில் இன்டர்ன்ஷிப் அல்லது இடைநிலை வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுவது வழக்கம்.
"இப்படி இருந்தால்?'... யோசியுங்கள்!
Updated on
2 min read


கோடை விடுமுறைக் காலத்தில் இன்டர்ன்ஷிப் அல்லது இடைநிலை வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுவது வழக்கம். அத்துடன் படைப்பாக்கச் சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறன்களை மேம்படுத்திக் கொண்டால், இளநிலை அல்லது முதுநிலை பட்டம் படித்து முடித்தவுடன் தங்களின் கனவு வேலையைக் கட்டமைத்துக் கொள்வதற்கு அது உதவியாக இருக்கும். 

எல்லா நிறுவனங்களும் புத்தாக்கச்சிந்தனை மற்றும் படைப்புத்திறன் கொண்டவர்களைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

 படைப்பாற்றலை மேம்படுத்திக் கொள்வது எப்படி? 

என்பதே பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாகும். இதோ... சில யோசனைகள்: 
பயன்பாட்டில் உள்ள ஏதாவது பொருளை எடுத்துக்கொண்டு, அது குறித்து சில புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டு, அதன் தன்மையை மாற்ற முடியுமா? புதிய வடிவத்தில் மாற்றமுடியுமா? என்றெல்லாம் சிந்தியுங்கள். ஸ்மார்ட்போன் (திறன்பேசி) என்ற யோசனையில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முயற்சியை தொடங்கவில்லை. அப்போது புழக்கத்தில் இருந்த கைபேசியை எடுத்துக்கொண்டு,   இந்த கைபேசியை சிறந்ததாக மாற்ற எப்படி மேம்படுத்த முடியும்? என்று தனக்குத்தானே  கேட்டுக் கொண்டார். 

அந்தமுயற்சியின் விளைவாகத்தான் உலகின் கவனத்தை ஈர்த்த "ஐபோன்' என்ற ஸ்மார்ட்போனை அவரால் தயாரிக்க முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ்- ஐப் போலவே, ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய முறையில், தனக்கிருக்கும் ஆர்வம், சிறப்புத்திறன், சிந்தனைப்போக்கின் அடிப்படையில் தானாக அல்லது குழுவினருடன் இணைந்து புதிய சிந்தனைகளை வகுத்துக் கொள்ளலாம்.

அதற்கு "இப்படி இருந்தால்' என்ற அடிப்படையில்படைப்பாக்கத்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

பொருள்/முறை/சமூக உறவு என எதுவாக இருந்தாலும் அதை இப்படி மாற்றினால் என்னாகும்? அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், எதை மாற்றினால் அல்லது மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்? ஒரு மில்லியன் டாலர் முதலீட்டுத்தொகை இருந்தால், அப்பொருளை நான் எப்படி மேம்படுத்த முடியும்? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றால், மாற்றுச் சிந்தனை அல்லது யோசனையைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். "இப்படி இருந்தால்' என்ற சூத்திரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு எது குறித்து வேண்டுமானாலும் கேள்விகளை எழுப்பினால், அது த்தாக்கம் அல்லது படைப்பாக்கச் சிந்தனையின் ஊற்றாக அமையும்.  

படைப்பாக்கச் சிந்தனை திறனுக்கும் ஒருவரின் நுண்ணறிவு அல்லது அறிவுத்
திறனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அடிக்கடி கற்பனை செய்வதன் மூலமாகவும்,  சிறியதோ பெரியதோ அது குறித்து கனவுகாணும் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் படைப்பாக்கத்திறனை மேம்படுத்த இயலும்.

நேரமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நகரவாழ்க்கையில் கற்பனை செய்வதும், கூர்ந்து நோக்குவதும் நமது தினசரி வாழ்க்கையில் காணாமல் போய்விட்ட இயல்புகளாகிவிட்டன.   வேலை அல்லது ஓய்வுநேரம் எதுவாக இருந்தால், "இப்படி இருந்தால்' என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். இது உங்கள் கற்பனைத்திறனை விரிவாக்கும். அதுதான் படைப்பாக்கம் அல்லது புத்தாக்கச் சிந்தனைகளுக்கு அடித்தளமாகும். 

படைப்பாக்கச் சிந்தனை மற்றும் புத்தாக்கத்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு காலவரையறையை எதையும் நிர்ணயித்து விடமுடியாது. நாளொன்றுக்கு 20 சத நேரத்தை படைப்பாக்கச் சிந்தனை அல்லது புதிய யோசனைகளுக்காக செலவழியுங்கள் என்று கூகிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  படைப்பாக்கச் சிந்தனையைப் பெறுவதற்கு காலத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அது ஒருமணி நேரமாக இருக்கலாம் அல்லது ஒருவாரமாக இருக்கலாம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட ஒன்று குறித்து மட்டுமே சிந்தியுங்கள் அல்லது கவனத்தை குவியுங்கள்.   அடுக்கடுக்கான யோசனைகள் வந்துவிழும். அவற்றை நெறிப்படுத்துங்கள், புதிய யோசனை பிறந்திருக்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், தனது வாழ்நாளில் மடிக்கணினி, கைபேசி,  மியூசிக் பிளேயர் என எதையும் புதிதாகக் கண்டுபிடித்தவர் இல்லை. ஆனால், மடிக்கணினி, கைபேசி, மியூசிக் பிளேயர்களை எந்தவகையில் மேம்படுத்தலாம் என்பதைச் சிந்தித்து தான் அவற்றைப் புதுமையாக்கினார். அதுமட்டுமல்லாமல், சந்தையில் இருக்கும் மற்ற மடிக்கணினி, கைபேசி, மியூசிக் பிளேயர்களைக் காட்டிலும் தனது பொருள் எந்தவகையில் புதுமையானது;  மாறுபட்டது என்பதை மக்களிடம் உரக்கச் சொன்னார். அது மக்களின் கவனத்தை ஈர்த்தது.  புதிய யோசனைகள் நமக்குத் தோன்றலாம். ஆனால் அவற்றை முதலில் கூறுவதுடன், அவற்றை மக்களைக் கவரும் வகையில்,  மக்களுக்கு புரியும்படியும் எதையும் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது மக்களின் சிந்தையைக் கவரும்.   புதிய யோசனையைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்வதும் அவசியம் தேவைப்படும் புத்தாக்கத்திறனாகும்.  

புதியன யோசிக்கும் எவருக்கும் அவற்றை  வெளிப்படுத்த  நட்புவட்டம் தேவைப்படுகிறது. நமது காலத்தில் நாம் பார்த்த புத்தாக்க சிந்தனைகள்... மைக்ரோசாஃப்ட் முதல் கூகுள் வரை எதுவாக இருந்தாலும், அனைத்திலும் ஒன்றுமட்டும் பொதுவில் இருக்கிறது. ஒரு யோசனையை கருவாக்குவதற்கு அல்லது புதுமையான திட்டத்தை வடிவமைப்பதற்கு ஒரே மாதிரியான சிந்தனைகொண்ட குழுவினர் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்பதே அது. மேலும் நமது யோசனையை மேம்படுத்துவோர்,  கேள்விகள் மூலம் நமது சிந்தனைகளைக் கூர்மையாக்குவோர் உடனிருக்க வேண்டும். அப்போதுதான் உலகமே வியக்கும் வகையில் நமது யோசனையின் விளைவுகள் நடைமுறையில்  எல்லாருக்கும் தெரிய வரும். எனவே இளைஞர்கள் குழுமனப்பான்மையோடு செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com