அக்கவுண்ட் கில்லர்!

இணையத்தில் இடம் பெற்றிருக்கும் முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆப்  போன்ற சமூக வலைத்தளங்களில் நாமும் பிறரைப் போல் பங்களிப்பு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நமக்கென்று தனிக் கணக்கு ஒன்றினைத் தொடங்கி
அக்கவுண்ட் கில்லர்!

இணையத்தில் இடம் பெற்றிருக்கும் முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆப்  போன்ற சமூக வலைத்தளங்களில் நாமும் பிறரைப் போல் பங்களிப்பு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நமக்கென்று தனிக் கணக்கு ஒன்றினைத் தொடங்கி அதில் இணைந்து கொள்கிறோம். இணையத்தில் ஏதாவது ஒன்றைத் தேடும் போது, சில தளங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்காக அத்தளத்திலும் நமக்கு ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்கிறோம்.  

இப்படி இணையவெளியில் நாம் உருவாக்கிய பல்வேறு கணக்குகளில், சில கணக்குகளைப் பின்னர் தேவையில்லை என்று கருதும் நிலையில், நாம் அத்தளங்களில் பங்களிக்காமல் மட்டும் இருந்து கொள்கிறோம். இருப்பினும், அத்தளத்தில் நம்முடைய கணக்கிற்காக நாம் உள்ளீடு செய்த மின்னஞ்சல் முகவரிக்குப் பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தேவையற்ற அந்த மின்னஞ்சல்களை நாம் அவ்வப்போது நீக்கினாலும், அது நம் மின்னஞ்சல் கணக்கிற்கான கழிவுப்பெட்டியில் (ட்ராஸ்) போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும். பின்னர் அதையும் நாம் நீக்க முயற்சிகள் செய்கிறோம்.

சில வலைதளங்கள் புதிய கணக்கு தொடங்கு போது, நாம் அளிக்கும் சில முக்கியத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு, அதை வணிக நிறுவனங்களுக்குக் கொடுத்துப் பணம் பெற்றுக் கொண்டு விடுகின்றன. பின்னர், அந்த வணிக நிறுவனங்களிலிருந்து நம்முடைய தொலைபேசி எண்கள், மின்னஞ்சல்களுக்கு தேவையற்ற வணிகத் தகவல்கள், விசாரணைகள் போன்றவை  வந்து கொண்டேயிருக்கின்றன. இது போன்ற தேவையற்ற தொலைபேசித் தொடர்புகள், மின்னஞ்சல்களைக் கண்டு நாம் மேலும் எரிச்சலடைகிறோம்.  

இது போன்ற நிலைகளில் நாம், இந்த வலைதளங்களில் இருக்கும் நம்முடைய கணக்கினை எப்படியாவது நீக்கம் செய்து விட வேண்டுமென்று விரும்புகிறோம். இருப்பினும், அது குறித்த முழு விவரங்கள் தெரியாத நிலையில் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. இனி அந்த வருத்தம் தேவையில்லை. இணையத்தில் நாம் பல்வேறு தளங்களில் உருவாக்கிய கணக்குகளை நீக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கும் ஓர் இணையதளம் உதவுகிறது. 

இந்த இணையதளத்தில்  பாப்புலர், பிளாக் லிஸ்ட், வொய்ட் லிஸ்ட், ஆல் சைட்ஸ்,  சைட் செக், சப்மிட் எ  சைட்   எனும் முதன்மைத் தலைப்புகள் இருக்கின்றன.  

பாப்புலர் எனுமிடத்தில் சொடுக்கினால், கீழ்ப்பகுதியில் இணையத்தில் வெண்மை, சாம்பல் எனும் இரு வேறு நிறங்களிலான பெட்டியில் மிகவும் சிறப்பு பெற்ற சில தளங்களின் பெயர், கணக்கை நீக்குக எனும் குறிப்புடன் இடம் பெற்றிருக்கின்றன. வெண்மை நிறங்களுடைய தளங்கள் ஓரளவு பாதுகாப்புடையவை, சாம்பல் நிறமுடைய தளங்கள் இடைப்பட்ட நிலையிலுள்ளவை என்பதை நிறத்தைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு நாம் நீக்க நினைக்கும் தளமிருந்தால் அதில் சொடுக்கி அத்தளத்திற்கான நம் கணக்கினை நீக்கிக் கொள்ள முடியும் அல்லது கணக்கு நீக்கத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியும். 

பிளாக் லிஸ்ட் எனுமிடத்தில் சொடுக்கினால், இணையத்தில் பாதுகாப்பற்றவை என்று இத்தளத்தால் பட்டியலிடப்பட்டிருக்கும் தளங்களின் பெயர்கள் கருப்பு நிறத்திலான பெட்டியில் பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் நாம் நீக்க நினைக்கும் தளத்தின் பெயரில் சொடுக்கி, அத்தளத்திலுள்ள நம் கணக்கை நீக்கிக் கொள்ள முடியும் அல்லது கணக்கு நீக்கத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியும். 

இதே போன்று வொய்ட் லிஸ்ட் எனுமிடத்தில் சொடுக்கினால், இணையத்தில் பாதுகாப்புடையவை என்று இத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் பெயர்கள் வெண்மை நிறப் பெட்டியில் பார்வைக்குக் கிடைக்கின்றன. இங்கு நாம் நீக்க நினைக்கும் தளத்தின் பெயரில் சொடுக்கி, அத்தளத்திலுள்ள நம் கணக்கை நீக்கிக் கொள்ள முடியும் அல்லது கணக்கு நீக்கத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியும். 

ஆல் சைட்ஸ் எனுமிடத்தில் சொடுக்கினால், இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துத் தளங்களும் பார்வைக்குக் கிடைக்கின்றன. இங்கு தளங்கள் அதன் தன்மைக்கேற்றபடி கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறம் எனும் மூன்று வகையான பெட்டிகளில் பார்வைக்குக் கிடைக்கின்றன. 

இங்கு நாம் நீக்க நினைக்கும் தளத்தினைக் கண்டு, அதன் மேல் சொடுக்கி, அந்தத் தளத்திலிருக்கும் நம் கணக்கினை நீக்கிக் கொள்ள முடியும் அல்லது கணக்கு நீக்கத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த மூன்று பட்டியல்களிலும், நாம் நீக்க நினைக்கும் தளத்தினை விரைவாகக் கண்டறிய, மேற்பகுதியில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் நாம் நீக்க நினைக்கும் தளத்தின் தொடக்க எழுத்தில் சொடுக்கி, அந்த எழுத்தில் தொடங்கும் தளங்களின் பெயர்ப் பட்டியலிலிருந்து நாம் நீக்க நினைக்கும் தளத்தினை விரைவில் கண்டறிந்து, அந்தத் தளத்திலிருந்து நம்முடைய கணக்கினை நீக்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது. 

இது போல் ஒவ்வொரு பக்கத்திலும் மேற்பகுதியில் ஒரு தேடுதல் பெட்டி இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பெட்டியில் நாம் நீக்க விரும்பும் தளத்தின் பெயரிலான எழுத்துக்களை உள்ளீடு செய்து அத்தளத்தினை விரைவில் கண்டறிந்திடவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.  

இத்தளத்தில் இடம் பெற்றிருக்கும் சைட் செக் எனும் பக்கத்தைச் சொடுக்கி, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்தின்படி இத்தளத்தினை நாம் புக்மார்க் செய்து கொள்ளும் பொழுது, நாம் புதிதாக ஏதாவதொரு தளத்தில் கணக்கு தொடங்கும் நிலையில் அத்தளத்தினைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தளத்தின் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கும் தளங்களை தளம் சமர்ப்பித்தல் எனும் வசதியினைப் பயன்படுத்தி இத்தளத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.   

இணையத்தில் இடம் பெற்றிருக்கும் சில தளங்களிலிருந்து தங்களது கணக்குகளை நீக்க விரும்புபவர்கள் https://www.accountkiller.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com