47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூட்டு முடிவு... கூட்டு செயல்பாடு!

தனியாக ஒருவர் முடிவு எடுப்பதற்கும், ஒரு குழு கூட்டு முடிவு எடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 12:30 am

வி.குமாரமுருகன்


தனியாக ஒருவர் முடிவு எடுப்பதற்கும், ஒரு குழு கூட்டு முடிவு எடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

வீட்டில் கூட குடும்பத்தலைவர் தன்னிச்சையாக எடுக்கும் முடிவிற்கும், அந்த குடும்பத்தில் உள்ள பிறருடன் கலந்து பேசி அதன் பின் கூட்டாகஎடுக்கும் முடிவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

கைபேசி வாங்க வேண்டும் என மகன் கேட்கும் நிலையில், அந்த கைபேசியின் திறன் எவ்வாறு இருக்க வேண்டும்; அதனுடைய கான்பிகிரேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதை மகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பின் ஒரு முடிவுக்கு வந்து தந்தை கைபேசியை வாங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டுவிட்டு குடும்பத் தலைவர் என்ற முறையில் அதிகார மனநிலையில் சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை வாங்கினால், அது உரிய பலனைத் தராமல் போய் விடலாம்.

அதேசமயம் கூட்டாக முடிவு எடுப்பதில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பலர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு முடிவை எடுத்து அதனால் விபரீதங்களும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதேசமயம் ஒரு பிரச்னையை தீர்க்க பலர் கூறும் கருத்துகளை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கும்போது, சிறப்பான நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் செய்துவரும் தொழிலில் திடீரென பெரிய பிரச்னை ஏற்படும்போது நாம் மட்டுமே சிந்தித்து முடிவெடுத்தால், அது சரியான முடிவாக இல்லாமல் போய்விடக் கூடும். அதேசமயம் அந்தப் பிரச்னையை தொழில் சார்ந்த ஒரு குழுவை அமைத்து, அதில்விவாதித்தால், அந்த குழு உறுப்பினர்கள் வெவ்வேறு விதங்களில் அதுகுறித்து அலசி ஆராய்வார்கள்.

அப்போது சிறப்பான ஒரு முடிவினை அவர்கள் கூறும் கருத்துகளில் இருந்து நம்மால் வந்தடைய முடியும். எனவே சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ சிறந்த முடிவுகளை எடுத்துச் செயல்பட கூட்டு முடிவுகளே சிறந்தது. கூட்டு முடிவுகளை எடுக்க குழுக்களை நிறுவனத்தில் உருவாக்குவதும் அவசியம். குழுக்களை உருவாக்குவது எப்படி?

குறைந்த அளவு உறுப்பினர்கள்:

ஒரு நிறுவனத்தில் குழுவினை அமைக்கும் போது ஒரு குழுவில் குறைந்த அளவிலான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் மிகச் சரியான முடிவை மிக விரைவாக எடுக்க முடியும். அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் இருந்தால் பாரபட்சமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாறுபட்ட கருத்துகள் அவசியம்:

ஒரே மாதிரியான அதாவது ஒத்த கருத்துடையவர்களை மட்டுமே குழுக்களில் நியமிக்காமல், மாறுபட்ட கருத்துகள் உடையவர்களையும் உறுப்பினர்களாக குழுவில் இடம்பெற செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு பிரச்னை குறித்து மாறுபட்ட கோணங்களில் உள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நன்மைகள் எவை? தீமைகள் எவை?என்பதைப் புரிந்து கொண்டு சரியான முடிவினை எடுக்க முடியும்.

எதிர்ப்பும் அவசியம்

இன்னொரு முக்கியமான அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய கருத்துகளை பொதுவெளியில் சொல்லும்போது, அதை எதிர்த்து விமர்சனம் செய்வதற்கு என்று சிலர் இருந்தால் மட்டுமே, நாம் கருத்துகளை வெளியிடுவதற்கு முன் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து அதன் பின்தான் வெளியிடுவோம். இதனால் நமது கருத்து தெளிவாக மக்களைச் சென்றடையும்.

சுதந்திரமாகப் பேச வேண்டும்

குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் பேசுவதற்கான வாய்ப்பினை வழங்கவேண்டும். நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்தால், தங்களை நிறுவனம் பழிவாங்கி விடுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் பிரச்னைக்குரிய உண்மையான தீர்வினை சொல்வதற்குப் பதிலாக, நிறுவனத்திற்கு சாதகமான தீர்வினை மட்டுமே அவர்கள்சொல்லக் கூடும். இது நிறுவனத்திற்கு பாதிப்பைஏற்படுத்தும். எனவே, மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாராட்டினால் பிரச்னைக்குரிய உண்மையான தீர்வினை அவர்கள் பயமின்றி தெரிவிப்பார்கள். இது நிறுவனத்திற்குபலனளிக்கும்.

முடிவெடுக்க முடியாத நிலையில்...

சிலவேளைகளில் குழுவில் உள்ள பாதிப் பேர் ஒரு கருத்தையும், மீதிப் பேர் அதற்கு மாறான கருத்தையும் கொண்டிருந்தால், கூட்டாக முடிவு எடுக்க முடியாது.

இது தொடர்பாக சிறந்த நிபுணர்களிடம் அந்த முடிவுகளைத் தெரிவித்து எந்த முடிவு சிறப்பானதாக இருக்கும் என்று கேட்டறிந்து அதன் பின் இறுதிமுடிவினை தனிப்பட்ட நபராக நாம் எடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும்.

நிபுணர்களின் கருத்துகள் கூட்டு முடிவைப் பாதிக்கக் கூடாதுகூட்டு முடிவை எடுக்க சிரமப்படும் சூழலில் பிரச்னை குறித்து நிபுணர்கள் தெரிவித்த முடிவினை குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தால் அவர்களை அறியாமலேயே அந்த முடிவு அவர்கள் மனதில் பதிந்து விடும் . இதன் காரணமாக அவர்களின் அடுத்த கட்ட நகர்வில் சிக்கல் ஏற்படும். உதாரணமாக ஒரு பிரச்னை குறித்து ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் விவாதங்களை நாம் கேட்கும்போது அந்த விவாதத்தின் பொருள் நம் மனதில் பதிந்துநமக்கும் அது போன்ற சிந்தனை ஏற்படுவதைப் போல, நிபுணர்கள் கூறும் கருத்துகளும் குழு முடிவினைப் பாதிக்கக்கூடும். எனவே எந்தப் பிரச்னைக்கும் முடிவு எடுக்கும்போது, முன் கூட்டிய அதற்கான முடிவுகளை மனதில் வைத்துக் கொள்ளாமல், குழு விவாதம் நடக்கும்போது கூறப்படும் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

தனித்தனியாகப் பேசினால் தெளிவு பிறக்கும்!

ஒரு பிரச்னையை குழுவிற்கு கொண்டு சென்று கூட்டு முடிவு எடுப்பதற்கு முன்பு நிறுவனத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர்கள், ஒவ்வொரு குழு உறுப்பினரிடமும் தனியாக அந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான் குழு உறுப்பினர் பிரச்னையைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறாரா என்பது தெரிய வரும். ஒருவேளை சரியாகப் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால், பிரச்னை குறித்து அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு நடக்கும் குழு விவாதத்தில் கூட்டு முடிவை எடுக்க அந்தத் தெளிவு உதவும்.

கூட்டு முயற்சியும் பொறுப்புணர்வும்

அதுபோல் கூட்டு முடிவிற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்படுவதற்கு நிறுவனம் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். உதாரணமாக பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில், தலைமை ஆசிரியர் முதல், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வரை அனைவருக்கும் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்படுவது வழக்கம். இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணிகள் ஒதுக்கப்பட்டாலும் கூட இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் ஒருவர் சரியாக செய்யவில்லை என்றாலும் கூட ஒட்டு மொத்த விழா கூட பாதிக்கக்கூடும். அதாவது ஒளி விளக்குகளை இயக்க நியமிக்கபட்ட ஆசிரியரல்லாத பணியாளர் சரியாகச் செயல்படவில்லை என்றால், மிக சிறப்பாக மாணவர்கள் நடனம் ஆடினால் கூட அது அவ்வளவு நன்றாக இருக்காது.

எனவே கூட்டு முடிவுகள் என்பது கூட்டு செயல்பாடுகளுக்கானவை என்ற அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.