மாடித்தோட்டம்...: தண்ணீர் பாய்ச்ச வேண்டாம்!

சிற்றூர்களில் வாழ்பவர்களைவிட நகரங்களில் வாழ்பவர்களுக்குத்தான் செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம்  இருக்கிறது.
மாடித்தோட்டம்...: தண்ணீர் பாய்ச்ச வேண்டாம்!


சிற்றூர்களில் வாழ்பவர்களைவிட நகரங்களில் வாழ்பவர்களுக்குத்தான் செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால் வேலைக்காகவும், தொழிலுக்காகவும் தினமும் இயந்திரம்போல் ஓடிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு செடிகளைத் தினம்தோறும் கவனிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. பரபரப்பான வாழ்க்கையில் செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதே அவர்களால் செய்ய முடியாத செயலாகிவிடுகிறது.

ஒரு நான்கைந்து நாள்கள் வீட்டைப் பூட்டிவிட்டு, எங்காவது வெளியூர் செல்லும்படி நேர்ந்தால், மாடித் தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்கு அவர்களால் தண்ணீர் ஊற்ற முடிவதில்லை. இவர்களைப் போலவே வேலை... வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்களை செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள். எனவே வேறு வழியில்லாமல், வெளியூருக்குச் சென்றுவிட்டு, நான்கைந்து நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தால், இத்தனை நாள்கள் பார்த்து பார்த்து வளர்ந்த செடிகள் வாடிக் கிடப்பதைப் பார்க்க நேரிடுகிறது. மனம் வருந்த வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் பார்த் அதுல் குமார் ஷா. குஜராத் அகமதாபாத்தில் உள்ள ஆனந்த் நேஷனல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அவரின் இந்தக் கண்டுபிடிப்பினால், வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், இனி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தாமாகவே தண்ணீர் மோட்டார் இயங்கி, தேவைப்படும்போது செடிகளுக்கு அவ்வப்போது நீர் பாய்ச்சும் கண்டுபிடிப்பே அவருடையது. இந்த கண்டுபிடிப்பைப் பற்றியும், அதனுடைய தேவையைப் பற்றியும் அவர் கூறியதிலிருந்து...

""உடலுக்குத் தீங்கு செய்யாத - ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாத - காய்கறிகள் இப்போது கிடைப்பதில்லை. உடல் நலனைப் பாதிக்கும் காய்கறிகளை உண்டு எல்லாரும் பாதிப்படைகிறார்கள். ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாத இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் எங்கே கிடைக்கும் என்று தேடிச் சென்று வாங்குபவர்களும் நகரங்களில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கரோனா பெரும் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இயந்திரமாக ஓடிக் கொண்டிருந்த நகரத்து மக்களை அது முடக்கிப் போட்டுவிட்டது. அந்த சமயத்தில் பலரும் வீட்டுத் தோட்டங்களை அமைப்பதில் ஆர்வத்துடன் இறங்கினார்கள். என்றாலும் செடிகளை வளர்ப்பதற்கான அனுபவம், அறிவு மிகக் குறைவாக இருந்ததனால் பலரால் அதில் வெற்றி அடைய முடியவில்லை.

என்றாலும் நகரங்களில் வாழ்பவர்களில் விஷயம் தெரிந்த சிலர், ரசாயன உரங்களைப் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மைமுறையில் காய்கறிச் செடிகளை தங்களுடைய மாடித் தோட்டங்களில் வளர்க்க முடியும் என்பதைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.

செடிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள பலருக்கு, செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றி செடி அழுகிப் போவது, குறைவாகத் தண்ணீர் ஊற்றி செடி வாடிப் போவது ஆகியவை சாதாரணமாக நிகழ்கின்றன. அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவதால் தண்ணீரும் வீணாகிறது.

இப்படிப்பட்ட குறைகளை நீக்கவே நான் ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறேன். செடிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து, அந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச உதவும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (ஐஓடி) இயங்கும் இந்த கருவியில் சென்சார்கள் இருக்கின்றன. இந்த சென்சார்கள் மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம், தட்பவெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறியும் திறன் படைத்தவை. இந்த சென்சாரை செடிகள் உள்ள மண்ணில் வைத்துவிட வேண்டும். மூன்றடி ஆழத்தில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தையும் இந்த சென்சார் கண்டுபிடித்துவிடும்.

இந்த சென்சார் ஒரு கண்ட்ரோல் போர்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். சென்சார், கண்ட்ரோல் போர்டு ஆகியவற்றை இணைக்கும்விதமாக ஒரு செயலியை நான் உருவாக்கியிருக்கிறேன். அந்தச் செயலியை இந்தக் கருவியைப் பயன்படுத்துபவரின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ள எல்சிடி திரையுள்ள தொலைக்காட்சியிலும் இணைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக செடிகள் வளர மண்ணின் ஈரப்பதம் 10 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை இருக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் குறைவாக மண்ணில் ஈரப்பதம் இருந்தால் அந்தத் தகவலை சென்சார்கள் கண்டறிந்து இந்தக் கருவியைப் பயன்படுத்துபவரின் ஸ்மார்ட் போனிலோ, அவருடைய வீட்டில் உள்ள எல்சிடி திரையிலோ தெரியும்விதமாக அனுப்பி வைத்துவிடும். அதுமட்டுமல்ல, 10 சதவீதத்துக்கும் குறைவாக மண்ணில் ஈரப்பதம் இருந்தால், இந்தச் செயலியின் மூலமாக தண்ணீர் மோட்டார் இயக்கப்படும். தேவையான அளவு தண்ணீர் செடிகளுக்குப் பாய்ந்ததும் மோட்டார் இயங்குவதை நிறுத்திக் கொள்ளும்.

நகரங்களில் வாழ்பவர்கள் தைரியமாக இனிமேல் வீட்டுத் தோட்டங்களை, மாடித் தோட்டங்களை அமைக்கலாம். அதற்கு இந்தக் கருவி உதவும். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுடைய செல்பேசியிலேயே வீட்டுத் தோட்டத்தின் நிலையை எந்த நிமிஷமும் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இதில் ஒரு பிரச்னை உள்ளது. நிறைய சிறு சிறு மண் தொட்டிகளில் செடிகளை வளர்ப்பவர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் அதிக செலவாகும். பெரிய சிமிண்ட் தொட்டிகளில் செடிகளை வளர்த்தால், அந்த ஒரு பெரிய தொட்டிக்கு ஒரு சென்சார் போதும். ஆனால் சிறு சிறு மண் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும்போது ஒவ்வொரு தொட்டிக்கும் ஒரு சென்சாரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் அதிக செலவாகும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com