மாசடைந்த நீர்நிலைகள்... தூய்மையாக்கும் கண்டுபிடிப்பு!

தண்ணீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது.  செடிகள், மரங்கள்,  விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என எல்லாருடைய உயிர் வாழ்க்கையும் தண்ணீரோடு
மாசடைந்த நீர்நிலைகள்... தூய்மையாக்கும் கண்டுபிடிப்பு!

தண்ணீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என எல்லாருடைய உயிர் வாழ்க்கையும் தண்ணீரோடு தொடர்புடையதே. அன்றாட வாழ்க்கையில் நம் மேல் படியும் அழுக்குகளைக் குளித்தும், உடையில் படியும் அழுக்குகளைத் துவைத்தும் நீக்குகிறோம். எல்லாவற்றையும் தூய்மையாக்குவதற்கும் தண்ணீர் அவசியம். தூய்மையாக்கும்போது நாம் தண்ணீரை மாசுபடுத்துகிறோம். கழிவுத் தண்ணீரை சாக்கடையில் கலந்து விடுகிறோம்.

அது மட்டுமல்ல, மனிதர்கள் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள், மருந்து, மாத்திரைகள், உடுத்தும் உடைகள், பிற பொருள்கள் ஆகியனவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும், பல்வேறு வேதிப் பொருள்களை மண்ணில் கொட்டினாலும், தண்ணீரில் கலந்தாலும், இறுதியில் நிகழ்வது என்னவோ தண்ணீர்மாசடைவதுதான்.

இப்படித் தண்ணீரில் கலக்கும் எல்லா மாசுகளுக்கும் காரணம் மனிதர்களாகிய நாம்தான். மாசு கலந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், அவற்றுக்கான மருந்துகள், அவற்றைத் தயாரிக்கும்போது ஏற்படும் கழிவுகள், அவற்றைத் தண்ணீரில் கலப்பது என இப்படியே தண்ணீரை மாசுபடுத்துவதையே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது நம் வாழ்வு.

உலகில் நல்ல தண்ணீரின் அளவை விட கெட்ட தண்ணீரின் அளவுதான் அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரைத் தூய்மைப்படுத்துவது எப்படி? நாம் வீட்டில் அருந்தும் தண்ணீரை கொதிக்க வைத்தோ, நீரைத் தூய்மையாக்கும் கருவியைப் பயன்படுத்தியோ தூய்மையாக்கிக் கொள்கிறோம். ஆனால் மண்ணில் பாய்ச்சப்பட்ட கழிவுநீரை எப்படி தூய்மையாக்குவது? பெரிய குளங்களில், ஏரியில் கலக்கும் தண்ணீரை எப்படி தூய்மையாக்குவது ? அதற்கு நிறைய செலவாகுமே?

தண்ணீரைத் தூய்மையாக்குவதைப் பற்றி கவலைப்பட்ட சில ஆராய்ச்சியாளர்கள், மாசடைந்த அதிக அளவிலான தண்ணீரைத் தூய்மையாக்குவதற்காக ஒரு பொருளைக் கண்டு
பிடித்திருக்கின்றனர்.

போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (ஐஐஎஸ்இஆர்பி) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தண்ணீரைத் தூய்மையாக்கும் ஆர்கானிக் பாலிமரை உருவாக்கியுள்ளனர். இது அதிக அளவிலான மாசுகள் உள்ள தண்ணீரை மிக விரைவில் தூய்மையாக்கிவிடும் திறன் படைத்தது.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேதியியல் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் அப்ஜித் பத்ரா என்பவரின் தலைமையிலான குழுதான் இந்த ஆர்கானிக் பாலிமரைத் தயாரித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக் குழுவில் இந்த கல்விநிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ள அர்கபிரபா கிரி, வேதியியல் பிரிவில் இங்கு படித்து பட்டம் பெற்று தற்போது ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவரான சுபா பிஸ்வாஸ், இந்த கல்விநிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் எம்டி. வசீம் ஹுசைன், தென்கொரியாவில் உள்ள ஹன்யாங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ள தபாஸ் குமார் தத்தா ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆர்கானிக் பாலிமர் உருவாக்கம் குறித்து ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான அப்ஜித் பத்ரா கூறியதிலிருந்து...

""நம்நாட்டின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது, மாசடைந்த தண்ணீரை எப்படித் தூய்மையாக்குவது என்பதுதான். தண்ணீர் நம் வீடுகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகளினால் மாசடைகின்றது. விவசாயம் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளினால் மாசடைகின்றது.

இது தவிர பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்த வெளியேற்றப்படும் கழிவுகளினால் தண்ணீர் மாசடைகின்றது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், ஸ்டீராய்டு போன்றவற்றாலும் தண்ணீர் மாசடைகின்றது.

இந்த கழிவுகளில் அதிக அளவிலான ஆர்கானிக், இன்ஆர்கானிக் நுண்துகள்கள் உள்ளன. இவை தண்ணீரில் கலப்பதால் தண்ணீர் மாசடைகின்றது.

மாசடைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கும் நீரில் வாழும் உயிரினங்களுக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மாசடைந்த தண்ணீரைத் தூய்மையாக்க பல வழிமுறைகள் உள்ளன. தண்ணீரில் கலந்துள்ள கழிவுப் பொருள்களை அவற்றில் இருந்து நீக்கி, அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு நிறைய செலவாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சிக் குழு மாசடைந்த தண்ணீரைத் தூய்மையாக்க "படிகநீர் உறிஞ்சும்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக, தண்ணீரில் கலந்துள்ள கழிவுகளை உறிஞ்சி தனியே அவற்றைப் பிரித்துவிட முடியும். அவ்வாறு பிரிக்கப்பட்ட கழிவுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். இந்த முறையில் அதிக அளவில் தண்ணீரைத் தூய்மையாக்க முடியும்.

நாங்கள் தயாரித்துள்ள ஆர்கானிக் பாலிமரின் பெயர் "ஹைபர் - கிராஸ்லிங்டு போரஸ் ஆர்கானிக் பாலிமர்ஸ்' ஆகும். இது கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துளைகள் உடையது. மனித முடியின் குறுக்களவை விட ஒரு லட்சம் மடங்கு சிறிய நுண்துளைகள் இதில் உள்ளன. இந்த ஆர்கானிக் பாலிமரை மாசடைந்த தண்ணீரில் போட்டதும் அது பல்கிப் பெருகிவிடும். ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துவிடும். ஸ்பாஞ்ச் வடிவில் மாறிவிடும். அந்த நிகழ்வின்போது, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் உள்ளிட்ட மாசுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.

இந்த ஆர்கானிக் பாலிமரை ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு எடுத்து தண்ணீரில் கலந்தால் அது குறைந்தது 1000 - 2000 ச.மீட்டர் பரப்பளவுள்ள தண்ணீர் அளவுக்கு படர்ந்துவிடும். எனவே அதிக அளவு தண்ணீர் உள்ள கிணறு, ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தூய்மையாக்க இது உதவும்.

இப்போது சோதனைச்சாலை அளவில் பரிசோதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆர்கானிக் பாலிமரை பெரிய அளவில் தயாரித்து பயன்படுத்தினால், மாசடைந்த பல பெரிய நீர்நிலைகளை மிக எளிதில் தூய்மையாக்க முடியும். மிக விரைவில் நீரில் கலந்துள்ள மாசுகளைப் பிரித்து எடுத்துவிட நாங்கள் உருவாக்கியுள்ள ஆர்கானிக் பாலிமர் பயன்படும்.

எங்களுடைய ஆராய்ச்சிக்கு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதி உதவி செய்திருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com