நகையும், நடனமும் என் உயிரில் கலந்தவை! சொல்கிறார் : சீமா மேத்தா
""எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக நகைக் கடை நடத்தும் பாரம்பரியத்தில் நான் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவள். சாதாரணமாக வீட்டில் உணவருந்தும்போது


""எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக நகைக் கடை நடத்தும் பாரம்பரியத்தில் நான் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவள். சாதாரணமாக வீட்டில் உணவருந்தும்போது கூட வைரங்கள் பற்றி பேசிக் கொள்ளும் குடும்பத்தில் வளர்ந்ததால் வேறு எந்தத் தொழிலையும் நான் யோசித்துக் கூட பார்க்காமல் எனது பாரம்பரியத் தொழிலுக்கே வந்துவிட்டேன்'' என்கிறார் சீமா மேத்தா. இவர் கீர்த்திலால் நகைக் கடையின் உரிமையாளர் மற்றும் நகை வடிவமைப்பாளர். நகை வடிவமைப்பிற்காக 2013-இல் தேசிய விருது பெற்றவர் இவர். அதுமட்டுமல்லாமல் கதக் நடன கலைஞர்,ஓவியர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

உங்களுடைய நிறுவன வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பு என்ன?
எப்போதும் நகைகளின் புதுப்புது வடிவமைப்புகளுக்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பேன். உதாரணமாக, பிரபல ஃபேஷன் டிசைனர் ரொஹித் பாலுடன் இணைந்து தாமரை வடிவம் சார்ந்த "லோட்டஸ் கலெக்ஷன்' என்ற பெயரில் வைரங்கள், வண்ணமிகு இரத்தினக் கற்கள், அரிய நிறம்கொண்ட வைரங்கள், இத்தாலிய பவளங்கள் மற்றும் சங்க முத்துக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இயற்கை வடிவங்களைக் கொண்டு ஒரு கைவினை அணிவரிசையை உருவாக்கினோம். அது எங்களது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. யுனிக் ஜுவல்லரி டிசைன் ஆப் த இயர் என்ற வகையில் "தி லோட்டஸ் கார்டன் கஃப்ஸ்' என்ற எங்களது புதுவகையான டிசைனிற்காக 2013-இல் தேசிய விருது பெற்றிருக்கிறேன்.
உங்களது டிசைன்களில் என்ன புதுமை இருக்கும்?
இன்றைய பெண்கள் அதிகம் சுற்றுப்பயணம் செய்பவர்களாக இருக்கின்றனர், இதனால் அவர்கள் எப்போதும் புதுப்புது டிசைன்களையே விரும்புகிறார்கள். இதனால் எங்களுடைய வடிவமைப்புகளில் ஐரோப்பிய உணர்வை சேர்த்து, இத்தாலிய வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து புதிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளோம். மேலும் நாங்கள் பீஸ்களுக்கு சிற்பம் செதுக்கும் தரத்தை கொண்டு வந்துள்ளோம். இது நகைகளில் காண்பது மிகவும் அரிது.
கல்லூரிப் பெண்கள் என்ன மாதிரியான டிசைன்களை விரும்புகிறார்கள்?
பெரும்பாலும் குறைந்த விலையில் மெல்லியதாக இருக்கும் நகைகளையே விரும்புகிறார்கள். இதற்காக அவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு நகை பீûஸயே பலவாறு பயன்படுத்தக்கூடியதாக சில கலெக்ஷனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதற்கு தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது.
அந்தக் காலத்துப் பெண்கள் அணிந்து கொண்ட நகை டிசைன்களுக்கும் இன்றைய டிசைன்களுக்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
அந்தகாலத்தில் பெரும்பாலும் கல்பதிக்காத தங்க நகைகளை மரபுவழி பாரம்பரிய நகையாக வழிவழியாக அணிந்து வந்தனர். அன்றைய நகைகள் கெட்டித்தன்மையும் கனமும் உடைய நகைகளாக இருந்தன. ஆனால் இன்றோ, பெரும்பாலானோர் தங்க நகையிலிருந்து வைர நகைக்கு மாறும் போக்கு உருவாகியுள்ளது. தோற்றத்தில் மெல்லியதாக இருக்கக்கூடிய, ஆனால் அதே சமயம் ஒரு நவநாகரிக டிசைன் வைர நகைகளையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால் அவ்வபோது புதுப்புது டிசைன்களை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது.
புதிய வடிவமைப்புகளுக்கு உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?
வடிவமைப்பு என்பது படைப்புத்திறன் மிக்கது, ஆண்டுக்கு ஆண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புதியப்புதிய வடிவமைப்புகளை உருவாக்கி வருகிறோம். வடிவமைப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்றுதான் ஃபைன்-ஆர்ட்ஸ் படித்தேன். நான் வரையும் ஓவியப் படைப்புகளில் இருந்தும், இசை, கட்டிடக்கலை, பழைய பாரம்பரிய நகை வடிவமைப்புகள் என என்னைச் சுற்றியுள்ளவற்றிலிருந்தும் எனக்கான டிசைன்களை வடிவமைக்கிறேன்.
நகைகளுடனே பிறந்து நகைகளுடனே வாழ்க்கை நடத்தி வரும் உங்களுக்கு நகைகள் அணிவது பிடிக்குமா?
எனக்கு தீம்மாட்டிக் நகைகளை அணிந்து கொள்வது பிடிக்கும். அதுபோன்று புதுப்புது மாடல்களில் அழகிய மோதிரங்கள் மற்றும் காதணிகள் அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.
நகை வடிவமைப்பாளரான உங்களுக்கு நடன கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
கலைகள் எப்போதும் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம் அதிகம். அதுதான் நடனத்தின் மீது ஆர்வம் ஏற்படவும் காரணம். வடிவமைப்பு கலையும், ஓவியக்கலையும் மனதிற்கு ஒருவித இனிமையைக் கொடுத்தால், நடனம் வேறு வகையில் மனதிற்கு இனிமைத் தருகிறது. அது மனதிற்கு ஒழுக்கத்தையும், வாழ்க்கையில் தொழில் நெறிமுறையை ஒழுங்குப் படுத்துவதற்கும் உதவுகிறது. ரசிகர்களின் முன்னிலையில் தடையில்லாமல் உரையாற்றுவதற்கும், சரித்திரக் கதைகளைப் படைப்புத்திறனுடன் சொல்வதற்கும் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இது, குரு-சிஷ்யன் என்ற பாரம்பரியத்தை கொடுத்துள்ளது. இது, என்னுடைய பெற்றோரிடமிருந்து நான் எப்படி நகைகள் பற்றி கற்றுக்கொண்டேன் என்பது போன்றதாகும்.
பொதுவாக நகைகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?
சில நகைகளைப் பாரம்பரியமாக வைத்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்கிறோம். அப்படிப்பட்ட நகைகளை வாங்கும்போது அவசரமில்லாமல் நிதானமாக பலமுறை யோசித்து நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் தங்கத்தின் தரம் பற்றியும் மற்றும் வாங்க திட்டமிட்டுள்ள நகையின் விலைக்கு ஏற்ற காரட் பற்றியும் கவனம் தேவை. அதுபோன்று தங்க நகைக்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடிய நம்பிக்கையான நகை வியாபாரியிடமிருந்து நகைகளை வாங்குவது பாதுகாப்பைத் தரும். அதுபோன்று வைர நகைகளை வாங்கும்போதும் அதன் காரட், வெட்டு, தெளிவுதன்மை மற்றும் நிறம் குறித்து முன்பே வைர நகையைப் பற்றி அறிந்தவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. ஏனென்றால் வைரங்களின் வகையும், தரமும் மற்றும் விலையும் வேறுபடக்கூடும். மேலும், வைர நகைகள் என்று வரும்போது, வைரத்தின் செட்டிங்கும் மற்றும் நகை வடிவமைப்பும் ஒட்டுமொத்த எடையைப் பாதிக்கிறது. எனவே நீங்கள் நகை வாங்குவதற்கு திட்டமிடுவதற்கு முன்பு நன்கு தகவல்களை அறிந்திருத்தல் நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...