ஆக்கம்... அமைப்பு... சாதனை!

சிதிலமடைந்த கட்டடம், சேதமடைந்த மேல்தளம், குண்டும் குழியுமான வகுப்பறை தரைதளம், மழை பெய்தால் தெப்பக்குளமாக காட்சியளிக்கும் பள்ளி
ஆக்கம்... அமைப்பு... சாதனை!
Updated on
2 min read

சிதிலமடைந்த கட்டடம், சேதமடைந்த மேல்தளம், குண்டும் குழியுமான வகுப்பறை தரைதளம், மழை பெய்தால் தெப்பக்குளமாக காட்சியளிக்கும் பள்ளி வளாகமாகத் திகழ்ந்த சேலம் கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம்.

எப்படி நிகழ்ந்தது?

தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், அறிவியல் உபகரணங்கள், கணினி ஆய்வகங்கள் எல்லாம் புத்தம் புதுசு.  சத்தமில்லாமல் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சேவையை மாற்றிவிட்டது, "ஆக்கம் அமைப்பு'. அமைப்பின் நிர்வாகியும் "கோல்டன்கேட்ஸ்' பள்ளி தாளாளருமான மீனா சேதுவைச் சந்தித்துப் பேசினோம்.

கடந்த 2012 இல் ஆக்கம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் சேவை செய்யும் வகையில் பராமரிப்பின்றி இருந்து வந்த மூக்கனேரியை தூர்வாரி தூய்மை பணிகளை செய்தோம். சூரிய ஒளி மின்விளக்கு, நடைபாதை என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம். சுமார் ரூ.40 லட்சம் வரை செலவு செய்து மூக்கனேரியை செம்மைப்படுத்தி உள்ளோம்.

கோல்டன் கேட்ஸ் மற்றும் எமரால்ட் வேலி பள்ளி மாணவ, மாணவிகளிடையே நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மூக்கனேரியை தூர்வாரி மேம்படுத்தி உள்ளோம்.

நான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வரும் வழியில் உள்ள கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைக் கவனித்து செல்வது உண்டு. இந்த பள்ளியின் சிதிலமடைந்த கட்டடம், சேதமடைந்த மேல்தளம், வகுப்பறை தரைதளம், மழை பெய்தால் தெப்பக்குளமாகிவிடும் வளாகம் என்ற நிலையில் இருப்பதை மாற்றிட முடிவு செய்தேன்.

இதற்காக ஆக்கம் அமைப்பு சார்பாக கோல்டன் கேட்ஸ் பள்ளியில் படிக்கும் 2,600 மாணவ, மாணவிகளிடம் தினந்தோறும் 1 ரூபாயை பங்களிப்பாக வழங்கிடும்படி கேட்டு கொண்டேன். 2015 பிப்ரவரி முதல் மாணவ, மாணவிகளிடம் பள்ளி நாள்களில் 1 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

பின்னர் பள்ளிக் கல்வித்துறை மூலம் அனுமதி பெற்று கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேம்படுத்தும் பணியை ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கினோம்.

கட்டடங்களின் மேல்தளம்  செப்பனிடப்பட்டு வாட்டர் ப்ரூஃபிங்  செய்யப்பட்டது. அனைத்து வகுப்பறைகள் மற்றும் தாழ்வாரங்களிலும் உயர் ரக டைல்ஸ் பதிக்கப்பட்டது. உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. மின்சார வயரிங் முழுவதுமாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறைக்கும் இரு மின் விசிறிகள் மற்றும் ஒரு குழல் விளக்கு பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து வகுப்பறைகளுக்கும் நல்ல மேசை நாற்காலிகள் மற்றும் நோட்டீஸ் போர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 கணினிகள் உள்ள கணினி மையம் ஒன்றும், ஆய்வறை மற்றும் நூலகமும் அமைத்து கொடுத்தோம்.

மாணவ, மாணவியருக்கு தனித் தனியே அமைந்திருந்த கழிவறைகள் நல்ல முறையில் செப்பனிடப்பட்டு கூடுதல் மேற்கூரை அமைக்கப்பட்டது. தூய்மையை பேணும் பொருட்டு, தண்ணீர் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஒரு ஆழ் துளை கிணறும், அதற்கு மோட்டார் கம்ப்ரசர்  அமைத்து மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவையும் ஏற்படுத்தப்படுள்ளன. சுகாதாரமான ஆர்.ஓ. குடி நீர்   வசதி  செய்யப்பட்டுள்ளது. சத்துணவுக் கூடம்  விரிவுப்படுத்தப்பட்டு, சுற்றிலும் சுற்றுச் சுவர் சுமார் 50  மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது. வெளிநபர்கள் நுழையாதபடி முன்புற மற்றும் பின்புற சுவர்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பள்ளி மைதானத்தில் மண் கொட்டப்பட்டு ரோலர் கொண்டு சமப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் சுமார் ரூ.40 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. புனரமைத்து மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் உள்ள இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக இருக்கிறது.

மூக்கனேரி மற்றும் கன்னங்குறிச்சி பள்ளி சீரமைப்புக்குப் பிறகு தற்போது மற்றொரு அரசு பள்ளியைத் தத்தெடுத்து, தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றும் திட்டத்தில் உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com