கடவுள் கொடுத்த கலை
""பிரியசகி' டீமில் வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் சினிமாவைவிட்டு சீரியலுக்கு வருகிறோமே


""பிரியசகி' டீமில் வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் சினிமாவைவிட்டு சீரியலுக்கு வருகிறோமே எப்படியிருக்குமோ என்ற பயம் இருந்தது. ஆனால் சினிமா மாதிரியேதான் சீரியலும் இருக்கிறது. பயப்படும்படி எதுவுமில்லை. சினிமாவில் இருந்து வித்தியாசப்படுவது 9-9 ஷெட்யூல் மட்டும்தான். இப்போது பிரியசகி திவ்யாவாகவே மாறிவிட்டேன்'' என்கிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பிரியசகி' தொடரின் நாயகி மித்ரா குரியன். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை தியாகராயநகரில் ஒரு துணிக்கடையில் சூட்டிங்கில் இருந்த அவரை சந்தித்தோம்:
இந்த கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
இந்த திவ்யா கேரக்டரை பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு பெண் இருக்கமாட்டாளா? என்று மற்றவர்கள் ஏங்குகிற கேரக்டர். எல்லாருக்கும் எப்போதும் உதவி செய்யும் கேரக்டர். ஒரு வகையில் எனது நிஜ கேரக்டரும் திவ்யா கேரக்டரைப் போன்றதுதான். எல்லாருடனும் அன்பாக பழகக் கூடியவள். சுயநலம் என்பது கிடையாது. யாரிடமும் திமிராக நடந்துக் கொள்ளமாட்டேன். இதுதான் திவ்யா கேரக்டர். இதைத் தவிர வெளியே இடங்களுக்குச் செல்லும்போது ரசிகைகளின் அட்வைûஸயும் கேட்டு கொள்வேன். இதனால் இந்தக் கேரக்டரை பற்றி ஆடியன்ஸ் என்ன பீல் பண்றாங்க என்பது தெரிகிறது.
ரசிகைகள் என்ன சொல்கிறார்கள்?
இன்று சூட்டிங்கிற்காக இங்கு வந்த போது ஒரு பெண்மணி என்னைப் பார்த்துவிட்டு திவ்யா என்று அழைத்துக் கொண்டே அருகில் வந்தார். அவர் சொன்னார் ""பிரியசகி தொடரில் நீங்களும் உங்கள் அம்மா கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டில் எல்லாருமே ரொம்ப விரும்பி பார்ப்போம். சமீபத்தில் என் அண்ணிக்கு உடம்பு முடியாமல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கிறார். ஆனாலும் மருத்துவமனையில் இருந்து கொண்டே தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் செல்போன் மூலம் ஒலிசித்திரம் கேட்பது போன்று பிரியசகி தொடரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துகோங்களேன்'' என்றார் இதை கேட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
தமிழ் நன்றாக கற்றுக் கொண்டீர்களே?
என் வாழ்க்கையில் நல்லதொரு இடத்தை எனக்கு கொடுத்தது தமிழ்தான். அதனால் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதற்காகவே தமிழைக் கற்றுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு பல மொழிகள் கற்றுக் கொள்வது பிடிக்கும். தமிழ், இங்கிலீஷ், இந்தி பேச தெரியும். தற்போது தெலுங்கும் கற்று வருகிறேன்.
வேறு தொடரில் நடிக்கிறீர்களா?
இந்தத் தொடரை தவிர மலையாளத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். அடுத்து
ஜெயராம் சாரோட ஒரு படம் பேலன்ஸ் இருக்கு. இதைத் தவிர மலையாளத்தில் வேறு ஒரு படம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
சினிமாத்துறையைப் பொறுத்தவரை சின்னத்திரையில் புதியவர்கள் என்றால் சினிமா வாய்ப்பு குவியும் அதுவே சினிமாவில் இருந்து வந்தால் அதன்பிறகு சினிமா வாய்ப்பே வராது இந்தப் பிரச்னை உங்களுக்கு எப்படி இருக்கிறது?
எங்கள் ஊரை பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை. சினிமா ஆர்ட்டிஸ்ட் சீரியலும் பண்றாங்க. சீரியல் ஆர்ட்டிஸ்ட் சினிமாவிலும் நடிக்கிறார்கள். அங்கே யாரும் சினிமா, டிவி என்று பிரித்து பார்ப்பதில்லை. தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்தும் வாய்ப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியே இதுபோன்ற பிரச்னை இருந்தாலும் இனி வருங்காலத்தில் இது மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார்?
இவ்வளவு நாட்களாக எல்லாவற்றுக்குமே அப்பா குரியன், அம்மா பேபி குரியன், தம்பி டேனி குரியன் என எனது குடும்பத்தினர் பக்க
பலமாக இருந்தனர். சமீபத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது எனது கணவர் வில்லியம் பிரான்ஸிஸ் குடும்பத்தினரும் அதைவிட அதிக சப்போர்ட் தருகிறார்கள். பிரியசகி ஆரம்பித்த பிறகுதான் எனக்கு திருமணம் நடந்தது. அவர்களின் சப்போர்ட் இல்லை என்றால் தொடர்ந்து இந்தத் தொடரில் நடித்திருக்க முடியாது.
உங்கள் நடிப்பை பார்த்து உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?
என் கணவரும் இதேத் துறையில்தான் இசையமைப்பாளராக இருக்கிறார். நிறைய படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரும் இந்தத் துறை சார்ந்து இருப்பதால் நடிப்பு என்பது ஒரு கலை என்று சொல்வார். நடிப்பின் மதிப்பு அவருக்கு நன்றாகவே தெரியும். என் நடிப்பையும் விரும்பி ரசிப்பார்.
சினிமாவில் நீங்கள் வியந்து பார்ப்பது யாரை?
திரைத்துறையைப் பொறுத்தவரை நடிகர்கள், டெக்னீஷியன்கள் யாராக இருந்தாலும் நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு படம் பார்க்கும் போது சிம்பிளாக தெரியலாம். ஆனால் அதற்காக ஒவ்வொருவரும் எப்படி தங்கள் உயிரைக் கொடுத்து வேலைப்பார்க்கிறார்கள் என்பதை கண்முன்னே பார்க்கிறோம். ஒரு படத்தை பார்த்தவுடன் நன்றாக இல்லை என்று ஐந்து நிமிடத்தில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த படத்திற்கு பின்னணியில் இருக்கும் உழைப்பைப் பற்றி நினைத்து பார்த்தால் அப்படி பேச மாட்டார்கள். எந்த தயாரிப்பாளரும் பணத்தை விரயம் செய்வதற்காக படம் எடுப்பதில்லை. வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தான் படம் எடுக்கிறார்கள். ஆனால் சில நேரம் அது மக்களுக்கு பிடிக்கும் அல்லது பிடிக்காமல் போகிறது அவ்வளவுதான். ஆனால் நான் எதையும் பெரிதாக நினைப்பதில்லை. அதனால் எல்லாரையும் சமமாகத்தான் நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...